வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் தகாது. முடியவும் முடியாது. கடன்… இந்த ஒரு காரணத்திற்காக தான் 99 சதவிகித பேர், குடும்பத்தை மறந்து வெளிநாடு சென்று வேலை பார்க்கின்றனர்.
அதே காரணத்திற்காக இங்கு ஒருவர் வெளிநாடு சென்று வேலைப் பார்க்க, அவரது அக்காவின் திருமணம் சொந்த ஊரில் நடக்கிறது. ஆனால், அவரால் குறித்த நேரத்தில் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், அந்த நபர் வெளிநாட்டில் இருந்து மொபைலில் வீடியோ மூலம் அக்காவின் கல்யாணத்தை பார்க்கும் இந்த வீடியோ, சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. மில்லியன் கணக்கில் Views-களையும் இந்த வீடியோ அள்ளியுள்ளது.
இந்நிலையில், நமது தமிழ் சாகா சார்பாக இந்த வீடியோவை உருவாக்கிய மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த Kopuram wedding photography நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.
அந்நிறுவனத்தின் உரிமையாளர் நம்மிடம் இந்த வீடியோ குறித்து பேசுகையில், “அந்த வீடியோ ஷூட் செய்த போது, எங்களுக்கும் ரொம்ப உருக்கமாக இருந்தது. அந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் நபர் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு மொத்தம் நான்கு மூத்த சகோதரிகள். இவர் தான் வீட்டின் கடைக்குட்டி. சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைக்க வெளிநாடு சென்றுவிட்டார். (வேண்டுகோளுக்கு இணங்க அந்த குடும்பத்தின் ஊர் உள்ளிட்ட இதர விவரங்களை நாம் வெளியிடவில்லை).
அத்தனை அக்காளுக்கும் வெளிநாட்டில் இருந்து வேலை செய்து திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த வீடியோவில் திருமணமான மணப்பெண் இவரது நான்காவது அக்கா.
இதில் கொடுமை என்னவென்றால், இவர் ஒரு அக்காவின் கல்யாணத்துக்கு கூட வரவில்லை. ஆனால், பணம் மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
அதைக் கேட்ட போது, எங்களுக்கே ஒருமாதிரியாக இருந்தது. அது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கல்யாணம் என்றாலும் இப்போதும் பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்” என்று முடித்துக் கொண்டார்.
வீட்டின் ஒரே ஆண் வாரிசு.. அதிலும் கடைசியாய் பிறந்த ஒரே ஆண் வாரிசு… இன்று தன் ஊரை பிரிந்து, நண்பர்களைப் பிரிந்து, உயிருக்கு உயிராய் இருக்கும் குடும்பத்தையும் பிரிந்து, தன் ஆசாபாசங்களை பெரிதாக நினைக்காமல், ஒரு அக்காவின் கல்யாணத்துக்கும் வராமல், உழைத்து உழைத்து பணம் மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கும் இந்த மகனை நாம் என்னவென்று சொல்வது?
இவர் மட்டுமல்ல.. இப்படி தன் குடும்பத்துக்காக எல்லாவற்றையும் விட்டு வெளிநாடுகளில் வேலைப்பார்க்கும் பலரின் நிலை இன்று இதுதான். இது வெளியே தெரிகிறது. மற்றவை எதுவும் தெரியவில்லை. இந்த கொடுமையான தலைமுறை இத்தோடாவது முடியுமா?.
Video and Image Credit: Kopuram Wedding Photography