TamilSaaga

சிங்கப்பூர் டாலரில் சிங்கமென வீற்றிருக்கும் தமிழர் “கோவிந்தசாமி” – சிங்கப்பூர் வணிக சாம்ராஜ்யத்தின் ஒரு தனி அடையாளம்

உலக அளவில் பல நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது தமிழர்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தற்போது ஆபிரிக்க நாட்டில் உள்ள ஒரு பழங்குடி மக்கள் பேசும் மொழியில் கூட பல தமிழ் வார்த்தைகள் கலந்து இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். பல கோடி ஆண்டுகள் தொன்மை கொண்ட நமது தமிழ் மக்கள் நமது சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்துள்ளார்.

பல இனங்கள் ஒன்றுகூடி வாழ்கின்ற நமது சிங்கப்பூரில் இன்றளவும் தமிழர்களின் பங்கு என்பது மிகவும் அதிகம். அந்த வகையில் சிங்கப்பூருக்கு பிழைப்பு தேடி வந்த ஒருவர், பிற்காலத்தில் சிங்கப்பூருக்கு தனது நன்றியை உரித்தாக்கிக் நமது சிங்கப்பூரில் வளர்ச்சிக்கு பல விதத்தில் உதவியுள்ளார் என்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் விஷயமாக உள்ளது.

கோவிந்தசாமி பிள்ளை, தமிழகத்திலுள்ள மயிலாடுதுறையில் 1800களின் இறுதியில் பிறந்தவர் தான் இவர்.நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ள பில்லாளி என்கின்ற கிராமத்தை சேர்ந்த இவர், தனது இளம் வயதிலேயே நாடு கடந்து நமது சிங்கப்பூரில் வேலை தேடி பல இடங்களுக்கு சென்றுள்ளார். அவருக்கு இறுதியில் ஒரு மளிகைக்கடையில் வேலை கிடைத்தது. இருப்பினும் சம்பளம் கிடையாது, இருக்க இடமும் உண்ண உணவும் மட்டுமே வழங்கப்பட்டது.

வாழ்க்கையில் முன்னேற பொறுமை மிகவும் அவசியம் என்பதை அன்றே புரிந்து கொண்ட கோவிந்தசாமி தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார். அவர் முதலாளியிடம் தொழில் நுணுக்கங்களையும் கற்று அறிந்தார். இறுதியில் அவரது முதலாளியின் அன்புக்கு பாத்திரமான அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நாட்கள் கடந்தது வெளிநாட்டில் சில காலம் வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டை மறவாது 1929ம் ஆண்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். கோவிந்தசாமி வெகு சில மாதங்களே அங்கு தங்கியிருந்த நிலையில் பக்கிரியம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண்களிடம் சிக்கும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள் – காதல் எனும் பெயரில் கறக்கப்படும் “சம்பளம்” – காற்றில் பறக்கும் கெளரவம்

அவர் சிங்கப்பூர் திரும்பிய போது அவருக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி செய்தி தான் அவர் முதலாளியின் மறைவு. செய்வதறியாது திகைத்துப் போனார், முதலாளியிடம் கற்ற அனைத்து விஷயங்களையும் கொண்டு தைரியமான ஒரு முடிவை எடுத்தார். அன்றைய சிங்கப்பூரில், வட்டிக்கு பணம் கொடுத்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் 2000 வெள்ளியைக் கடனாக பெற்று சொந்தமாக தொழில் தொடங்கினார். எண்ணெய் வகைகள், தானியங்கள் மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து தரமான விதத்தில் விற்பனையும் செய்தார். போட்டிகள் சில இருப்பினும் தனது அயராத உழைப்பின் காரணமாக மாவு, துணிக்கடை என்று புதிய கடைகளில் தனது முதலீடுகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.

ஒரு காலகட்டத்தில் கோவிந்தசாமியின் கடை சிங்கப்பூர் எங்கும் பிரபலமானது. ஆனால் 1941ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் வெடித்த நிலையில் அவர் தாய்நாடு திரும்ப நேர்ந்தது. கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்து வந்த அவர் போர் முடிந்ததும் மீண்டும் 1945ம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பினார். ஆனால் போரில் லிட்டில் இந்தியா பகுதியில் இருந்த அவரது கடைகள் சின்னாபின்னமாகி கிடந்தது. இருப்பினும் தொடர்ந்து போராடி அவருடைய பொருளாதார நிலையை மட்டும் மீட்டெடுக்காமல் தன்னை சார்ந்த பலருக்கும் உதவினார். சிங்கப்பூர் வணிக சாம்ராஜ்யத்தின் ஒரு தனிப்பட்ட அடையாளமாக மாறினார் கோவிந்தசாமி.

சிங்கப்பூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் மகாத்மா காந்தி அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்தும், வியாபாரிகளிடம் இருந்து நிதி திரட்டி சுமார் 17 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி செலவில் நினைவாலயம் கட்டினர். அப்போது இந்தியாவில் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் வந்து அந்த இடத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் சிங்கப்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கோபுரமும் அங்கே உள்ள திருமண மண்டபம் கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது தான்.

கோவிந்தசாமி பக்கிரி அம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்களும் நான்கு மகள்களும் இருந்தனர். சுமார் 30 லட்சம் சிங்கப்பூர் வெள்ளி அளவிற்கு அவர் விட்டுச்சென்ற தொழில் நிறுவனங்களை அவருடைய தலைமுறைகளால் சரியாக எடுத்து நடத்த முடியவில்லை என்றே கூறலாம். தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வந்து பல சாதனைகளைப் படைத்த கோவிந்தசுவாமி இறுதியில் 1980ல் தனது 92-வது வயதில் காலமானார். சிங்கப்பூர் அரசு பல கௌரவங்களை அவருக்கு அளித்து அழகுபார்த்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட 20 டாலர் தாளில் அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டு கௌரவித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts