TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கே தெரியாத “வரலாறு”… சிங்கையில் மாணிக்கமாக இருந்து தமிழகத்தில் “மாணிக் பாட்ஷா”-வாக உருவெடுத்த “வீரத்” தமிழன்!

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சிங்கப்பூரின் மற்றொரு ஆளுமையாக உருவெடுத்து இருக்க வேண்டிய மற்றொரு நபர் வரலாற்றில் இருந்திருக்கிறார். ஆம்! ஒரு மகத்தான வீரத் தமிழனை பற்றி எழுதுவதில் ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ நிறுவனம் பெருமை கொள்கிறது.

அவர்….. வாட்டாக்குடி இரணியன்.

பெயரைச் சொல்லும் போதே, அதில் ஒரு Mass Factor இருப்பதை உச்சரிப்பிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அடக்குமுறையை அடக்கிய சிங்கம் இந்த வாட்டாக்குடி இரணியன். முக்குலத்தோர் அமைப்பில் பிறந்த வைரம் முத்துராமலிங்க தேவர் என்றால், மற்றொரு வைரம் இந்த வாட்டாக்குடி இரணியன்.

இந்த தலைமுறையினர் டிவியில் சேனலை மாற்றும்போது எப்போதாவது “இரணியன்” என்னும் படத்தை பார்த்திருக்க வாய்ப்புண்டு. அதனைத் தாண்டி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல.. சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் பலருக்கே இவரது வரலாறு முழுமையாக தெரியாது.

யார் இந்த வாட்டாக்குடி இரணியன்?

இவரது இயற்பெயர் வெங்கடாச்சல தேவர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள வாட்டாக்குடி எனும் கிராமத்தில் 1920ம் ஆண்டு, ராமலிங்கத் தேவர் – தையல் நாயகி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தஞ்சையில் பிறந்தாலும், தனது 13-வது வயதிலேயே உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

ஒருவரது வாழ்க்கையின் மிக முக்கிய பருவமான ‘Teen Age’ முழுவதும் அவர் கழித்த இடம் சிங்கப்பூர் தான். வாழ்க்கையின் நல்லது, கெட்டது போன்றவை மெல்ல மெல்ல புரியத் தொடங்கும் பருவம் இந்த Teen Age. அப்படிப்பட்ட தனது பருவத்தில் சிங்கப்பூரில் இருந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் ஆங்கிலேயர்கள், சீனர்கள் மற்றும் மலேசியர்களின் தோட்டங்களில் இந்தியர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதை கண்டு மனம் கலங்கினார். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அந்த இளம் வயதிலேயே வெதும்பினார்.

தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையை சேர்ந்த மலேசியா கணபதி தேவர் மற்றும் வீரசேனத் தேவர் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது. இதனால் அவருக்கு நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது. பொதுவுடைமையை நோக்கி அவரது சிந்தனை நகர்ந்தது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளர் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமெனில், சிங்கப்பூரில் மாணிக்கமாக இருந்தவர் ‘மாணிக் பாட்ஷா’வாக உருவெடுத்தார்.

இனவெறி அடக்குமுறையாளர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு இந்தியர்கள் என்றாலே கை, கால்கள் உதறும் அளவுக்கு பயத்தை விதைத்தார். 1943ல் சிங்கப்பூர் வந்த நேதாஜி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. “இரத்தம் தாருங்கள்; விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் முன்னிலையில் நேதாஜி வீரமுழக்கமிட, அதை அங்குள்ள ஒவ்வொரு முக்குலத்தோரிடமும் கொண்டுச் சென்றார் முத்துராமலிங்க தேவர். இதனால் ஈர்ப்படைந்த இரணியன், நேதாஜி அமைத்த ‘இந்திய தேசிய இராணுவ’த்தில் இணைந்தார்.

லீ குவான் யூ – இரணியன் நட்பு

இதற்கிடையே சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ – இரணியன் இடையே நட்பு ஏற்படுகிறது. இருவருமே அடக்குமுறையை ஒடுக்குவது என்ற ஒரே நேர்கோட்டில் பயணிப்பவர்கள். ஒரே சிந்தனை கொண்டவர்கள். இதனால், இருவருமே இணைந்த கைகளாகினர்.

லீ குவான் யூ அவர்களுடன் இணைந்த பிறகு, இரணியன் சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார். சிலர் வரலாற்று பதிவுகளில் அந்த தொழிற்சங்கத்தில் 50,000 பேர் வரை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு, சுபாஷ் சந்திர போஸ் படையின் பயிற்சியாளராகவும் இரணியன் செயல்பட்டு வந்தார்.

தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட புரட்சி காரணமாக லீ குவான் யூ மற்றும் இரணியனை ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர். நீண்ட காலமாக இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூழலில், தனது பெற்றோரின் வேண்டுக்கோளுக்கு இணங்க, சிறையில் இருந்து தப்பித்த இரணியன் அங்கிருந்து தமிழகத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.

பிறகு வெளியே வந்த லீ குவான் யூ, அவரது தியாகத்துக்காகவும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக அவர் அரும்பாடுபட்டதற்காகவும் ‘சிங்கப்பூரின் தந்தை’ என்று அழைக்கப்பட்டார். ஆனால், அதே தியாகத்தையும், சிந்தனையையும் கொண்ட இரணியன், சிறையில் இருந்து தப்பித்து தமிழகம் திரும்பியதால், சிங்கப்பூரின் வரலாற்று பக்கங்களில் இருந்து மறைந்து போனார். அவர் மட்டும் சிறையில் இருந்திருந்து, லீ குவான் யூ-வோடு ஒன்றாக வெளியே வந்திருந்தால், இந்நேரம் சிங்கப்பூரின் தந்தை என்ற பெருமையை இரணியனும் பெற்றிருப்பர்.

காலம் எல்லாவற்றையும் மாற்றியது.

இந்தியா சுதந்திரம் பெற்றாலும், அவரது சொந்த ஊரில் ஆண்டைகளின் (நிலப்பிரபுக்கள்) ஆதிக்கம் நிலவியது. மிகக் கடுமையாக நிலவியது. ஒரு சாரார் கைகளை ஒங்க, ஒரு சாரார் அடிமையாக இருக்கும் நிலையை எண்ணி பெருங்கோபம் கொண்டார். தனது சொந்த சாதி மக்களையே இதற்காக எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் தனது நண்பர்களுடன் இணைந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஆண்டைகளை எதிர்த்தார். ‘சொந்த சாதியையே எதிர்க்காதே’ என்று பலமுறை எச்சரிக்கப்பட்டும், அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சிங்கப்பூரில் இருந்த போது, சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்தித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தையே மிரள வைத்த இரணியன், நிலப்பிரபுக்களின் மிரட்டலை துளியும் மதிக்கவில்லை.

ஆனால், அவர்களோ காவல்துறை உதவியுடன் இரணியன் மீது பல வழக்குகளை பதிவு செய்ததால், மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்குள் சென்றார். 1950ம் ஆண்டு, மே மாதம் 3ம் தேதி இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமன் என்ற மற்றொரு தியாகச் செம்மலையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.

இறுதியில், மன்னார்குடி அருகே உள்ள வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை, 1950 மே 5ம் தேதி காவல்துறை பிடித்தது. அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் காவல்துறை கைது செய்தது. முடிவில், இருவரையும் சுட்டுக்கொன்றனர். இரணியன் உடல் இன்று உள்ள பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்திருந்தால், உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற மாணிக்கமாக வந்திருக்க வேண்டிய இரணியன், இன்று தமிழர்களில் பலரும் அறிந்திருந்த ஒரு வட்டத்திற்குள் அடைப்பட்டு போனது காலத்தின் கொடுமையே!

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts