சிங்கப்பூர் : உலகிலேயே பாதுகாப்பாகவும், உயர் தரத்திலும் வாழுவதற்கு மிகவும் ஏற்ற நாடு என்றால் அது சிங்கப்பூர் தான். கடந்த சில நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் வளம், வளர்ச்சி ஆகியன உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் இங்கு ஈர்த்து வந்துள்ளது. சிங்கப்பூரை பொருத்த வரை, Employment Pass, Personalised Employment Pass, EntrePass அல்லது S Pass வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதற்கு பிறகு அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். அதோடு இந்த பாஸ்கள் மூலமாக சிங்கப்பூர் சென்றிருப்பவர்கள் தங்களின் குடும்பத்தை உடன் அழைத்துச் சென்று, தங்களுடன் வைத்துக் கொள்ளவும் முடியாது.
சிங்கப்பூரில் இருந்து நீங்கள் வெளியேற முடிவு செய்து விட்டால், மீண்டும் சிங்கப்பூருக்குள் வருவதற்கு முறையான பாஸ் வைத்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற பதற்றம், பயம் எல்லாம் நிரந்தர குடியுரிமை (PR) வைத்திருப்பவர்களுக்கு கிடையாது. சிங்கப்பூரில் நிரந்தமாக வசிப்பதற்கான அனுமதியை தருவது தான் PR. 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் நீல நிற சிங்கப்பூர் அடையாள அட்டையை பெற முடியும்.
சிங்கப்பூரில் PR பெற தகுதியானவர்கள் :
- உங்களின் மனைவி அல்லது திருமணமாகாத 21 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு PR பெற விண்ணப்பிக்க வேண்டுமானால் நீங்கள் சிங்கப்பூரின் குடிமகனாகவோ அல்லது PR பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
- வயதான பெற்றோருக்காக சிங்கப்பூரில் PR பெற்றவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும்.
- Employment Pass or S Pass வைத்திருப்பவர்கள் தங்களின் மனைவி, மற்றும் 21 வயதிற்குட்பட்ட திருமணமாகாத குழந்தைக்காகவும், தனக்காகவும் PR விண்ணப்பம் செய்ய முடியும்.
- சிங்கப்பூரில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்
- சிங்கப்பூரில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்.
சிங்கப்பூர் PR வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
- சிங்கப்பூரில் வசிப்பதற்கு, சிங்கப்பூர் செல்வதற்கு, சிங்கப்பூரில் இருந்து வெளியே செல்வதற்கு தனியான விசா எதுவும் தேவை கிடையாது.
- சிங்கப்பூர் குடிமகனுக்கான அடையாளமான நீல நிற அடையாள அட்டை பெற முடியும்.
- உங்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களுக்காக உங்களால் PR விண்ணப்பம் செய்ய முடியும்.
- சிங்கப்பூரில் உங்கள் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளியை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.
- உங்களின் பெற்றோருக்காக நீண்ட காலம் வசிப்பதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
- CPF சலுகைகளை பெற முடியும். நீங்கள் ஓய்வுபெறும் வயதான 55 ஐ எட்டும் போது பெரும் தொகையை உங்களால் பெற முடியும்.
- CPF பயனாளராக இருந்தால் அந்த திட்டத்தை உங்களின் மருத்துவ செலவு, வீடு வாங்க, குடும்ப பாதுகாப்பிற்கு, உங்களின் சொத்துக்களை பெருக்க பயன்படுத்த முடியும்.
- PR வைத்திருந்தால் நீங்கள் சொத்துக்கள் வாங்குவதற்கான கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றை பெறுவதற்கு முன்னுரிமை பெறுவீர்கள்.
- PR பெற்ற பிறகு குறிப்பிட்ட ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் வசித்தால் சிங்கப்பூர் குடிமகன் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முழு தகுதியையும் உங்களால் பெற முடியும். சிங்கப்பூரில் பிறந்த, வளர்ந்தவர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் உங்களால் பெற முடியும்.
- சிங்கப்பூரில் நிரந்த பணி வாய்ப்பை உங்களால் பெற முடியும். நீங்கள் விரும்பினால் சொந்தமாக தொழிலும் துவங்கலாம். அரசு உதவியுடன் உங்களால் பல தொழில்களை துவங்க முடியும்.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பாலிகிளினிக், தனியார் கிளினிக்களில் சிறப்பான மருத்துவ வசதியை உங்களால் பெற முடியும்.
- நீங்கள் சிங்கப்பூர் PR வைத்திருப்பவராக இருந்து, உங்களுக்கு 16 வயதிற்கு மேலுள்ள மகன் இருந்தால் அவரால் சிங்கப்பூர் ராணுவத்தில் 2 ஆண்டுகள் வரை பணியாற்ற முடியும். அதற்கு பிறகு தேவைப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 40 நாட்கள் தேசிய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் 40 வயதில் அதிகாரிகள் அளவில் ராணுவ பணி பெற முடியும்.