TamilSaaga

700 வெள்ளி.. 1200 வெள்ளி.. 2600 வெள்ளி சம்பளம்.. சிங்கப்பூரில் நான்கே வருடத்தில் அசுர வளர்ச்சி காட்டிய தமிழக ஊழியர்! ‘உங்களால் தான் முடியும்’ என்று திறமையை கண்டு மெச்சிய நிறுவனம்!

சிங்கப்பூரில் நாளை (ஆக.9) தேசிய தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தருணத்தில், லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் சிங்கையில், தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் சாதாரண வேலைக்கு சிங்கப்பூர் வந்து, இன்று தனது திறமையின் மூலம், எதிர்ப்பாராத ஒரு உயரத்தை எட்டியிருக்கிறார். இது Motivation கட்டுரை எல்லாம் கிடையாது. ஆனால், நிச்சயம் இதனை படிப்பவர்களில் அட்லீஸ்ட் இரண்டு பேருக்காவது, வாழ்க்கையில் விரைவில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்தால், அதுவே இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றிதான்.

இதற்காக நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தித் தளத்திடம் பேச ஒப்புக் கொண்டதற்கு ஊழியர் ராமருக்கு நன்றி. ஆம்! சிங்கப்பூரில் கடைநிலையில் இருந்து உயர்நிலை அடைந்திருக்கும் ராமர் அவர்கள் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

இனி வருபவை எல்லாம் அவரது வார்த்தைகளாக…

“வணக்கம் சார்.. என்னை இந்த நேர்காணலுக்கு அணுகிய தமிழ் சாகா டீமுக்கு நன்றி. நான் சாதனையெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. என் வேலையை செய்தேன். அதை பொறுப்புடன் செய்தேன். அவ்வளவு தான். என்னுடைய பெயர் ராமர். அப்பாவுடைய பெயர் ராஜகோபால். நான் 2013-ல் skilled அடிச்சு, சிங்கப்பூர் வந்தேன். அதுக்கு முன்னாடி ஊருல டிப்ளமோ எலக்ட்ரிக்கல் முடிச்சிட்டு, நாலு வருஷம் கோயம்புத்தூருல ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன்.

அப்போது என் தங்கையின் திருமணம் நடந்துச்சு. அதுக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டியதா போச்சு. இதனால், நான் வெளிநாடு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. சிங்கப்பூர் போக ஏற்பாடு பண்ணேன். வெறும் 19 வெள்ளி Basic சம்பளத்துக்கு தான் சிங்கப்பூருக்கு வந்தேன். ஓவர்டைம் எல்லாம் பார்த்து, மொத்தமா மாசத்துக்கு 700 வெள்ளி வரை சம்பளம் கிடைச்சுது. அதுல என்னால எவ்வளவு சிக்கனம் பண்ண முடியுமோ, அவ்வளவு இழுத்துப் புடிச்சு, ஒரு 50 வெள்ளி மாசாமாசம் வீட்டுக்கு அனுப்புவேன். ஒன்றரை வருடம் இப்படித்தான் என் வாழ்க்கை சிங்கப்பூருல போச்சு.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸோட Head Office-ல தான் நான் வேலைப் பார்த்தேன். சாங்கி ஏர்போர்ட்டுல பின்புறமா இருக்கிற ‘Singapore Airline House’-ங்குற இடத்துல தான் வேலை பார்த்தேன். அது Flight service பண்ற இடம். அங்க Maintenance பிரிவில் இருந்தேன். அங்க ஆங்கிலம் தான் அதிகமாக பேசுவாங்க. 90% communication ஆங்கிலத்துல தான். இதுனால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இருந்தாலும், போக போக ஆங்கிலத்தை பிக்கப் பண்ணேன்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் சகுந்தலா ரெஸ்டாரண்டில்.. அரிசிக்கு பதில் பொங்கிய அன்பு… தமிழக ஊழியர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய மாணவன்!

ஊருல சில வருடம் வேலைப்பார்த்த அனுபவம் எனக்கு சிங்கப்பூருல கைக்கொடுத்துச்சு. மத்தவங்களுக்கு தெரியாத வேலை கூட எனக்கு தெரிஞ்சுச்சு. அப்போ, அங்க எனக்கு Engineer-ஆ இருந்தவரும் ஒரு தமிழர் தான். திருச்சியைச் சேர்ந்தவர். அவர் என் வேலையை கவனிச்சார். ‘இவன்கிட்ட ஏதோ இருக்கு’-ன்னு அவருக்கு நம்பிக்கை வந்துச்சு. ஏன்னா.. எலெக்ட்ரிக்கல் சம்பந்தமா ஒரு எஞ்சினியருக்கே தெரியாத வேலையை நான் செய்து முடித்தேன். அதையும் எனது Engineer கவனிச்சார்.

பிறகு ஒன்றரை வருஷம் கழிச்சு, Senior Technician-ஆ என்னை புரமோட் செய்தார்கள். அப்போ எனது சம்பளம் 1200 வெளியாக உயர்ந்தது. 2016 வரைக்கும் 1200 வெள்ளி சம்பளம் வாங்கினேன். நான் வேலைப் பார்த்த கம்பெனி, சாங்கி ஏர்போர்ட் உள்ளே சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் லாஞ்சையும் நிர்வகித்து வந்தது. அந்த லாஞ்சில் உள்ள Kitchen Equipment-ஐ தனியாக ஒரு கம்பெனி பார்த்து வந்துச்சு. ஆனால், அவங்க சரிவர வேலை செய்யாததால, எங்க கம்பெனியே அந்த பொறுப்பையும் எடுத்து பார்த்துச்சு.

அப்போதான், Kitchen Equipment-ல எலக்ட்ரிக்கல் பிரிவுல ஒரு நல்ல ஆள் தேவை என்பதற்காக, என்னுடைய மேனேஜர் என்னை சிபாரிசு செய்தார். Engineer-ரும் அதற்கு அப்ரூவல் கொடுத்ததால, என்னை அந்த பொறுப்புக்கு அனுப்பினங்க. அது ஒரு Incharge போஸ்ட் மாதிரி. Supervisor-னு சொல்லுவாங்க. ‘உன்னால தான் இதை சரியா செய்ய முடியும்’-னு சொல்லி அனுப்புங்க. அங்க போயும் ஒரு ஆறு மாசத்துக்கு 1,200 வெள்ளி தான் சம்பளமா கிடைச்சுது.

அங்க தொடர்ந்து வேலை பார்த்துக்கிட்டு இருக்கும் போதே, எனக்கு வெவ்வேறு கம்பெனிகள்ல இருந்து நல்ல சம்பளத்துக்கு offers வந்துச்சு. 1600, 1700 வெள்ளிக்கு வேலைக்கு கூப்பிட்டாங்க. முதலில் எனக்கு என்ஜினியராக இருந்தவர் தான், பின்னாளில் எனக்கு மேனேஜராகவும் வந்தார். அவர் தான், என்னை லாஞ்சில் வேலை செய்ய Recommend செய்தார். எனக்கு அடுத்தடுத்து வேறு கம்பெனிகள்ல இருந்து offers வந்ததை எனது மேனேஜரிடம் சொன்னேன்.

உடனே அவர், அவருடைய Higher Officials-களிடம் பேசினார். ‘இந்த பையன் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான எல்லா Problems-களையும் solve பண்றார். Kitchen Equipment சம்பந்தமான வேலையை Contractor இல்லாம இவரே தனியா கவனிக்குறாரு. திறமையான பையன் இவர்’ என்று எடுத்துச் சொல்லினார். இதனால், 2016-ல் என்னோட சம்பளத்தை 1600 வெள்ளியில் இருந்து 2600 வெள்ளியா சம்பளத்தை உயர்த்திட்டாங்க. ஒரே ஜம்ப்பில் 1000 வெள்ளி சம்பளம் உயர்ந்துச்சு.

பிறகு, 2021 வரை அங்கேயே தான் வேலைப் பார்த்தேன். 2017-ல் எனக்கு கல்யாணம் ஆச்சு. வருடம் ஒரு முறை தான் ஊருக்கு வருவேன். இதனால், எங்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டுச்சு. இதனால், 2021 பிப்ரவரியில ஊருக்கே வந்துட்டேன். இன்னும் ஊருல தான் இருக்கேன். குழந்தைக்காக நானும், எனது மனைவியும் சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்.

வேலையிடத்தில் நிறைய பிரச்சனை இருந்துச்சு. நமக்கு மேலதிகாரிகளா இருக்குறவங்க, அவங்களுக்கு தெரியாத விஷயத்தை நாம சொல்லிட்டா, ஏத்துக்கவே மாட்டாங்க. மட்டம் தட்டியே பேசுவாங்க. அப்படித்தான் எனக்கு இருந்துச்சு. எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன். எப்படியாவது முன்னேறணும்-ங்குறது மட்டும் தான் என் நோக்கமா இருந்துச்சு. அதனால், எனக்கு இந்த அவமானம், புறக்கணிப்பு எல்லாம் ஒரு பொருட்டாவே தெரியல.

ஆனா ஒரு விஷயம் உண்மை.. நான் எவ்ளோ உழைச்சாலும், எனக்கு ஒவ்வொரு இடத்திலும் பக்கத்துணையாக இருந்து என்னை மேலே ஏற்றிவிட்டவர் அந்த மேனேஜர் தான். அவர் பெயர் நடராஜன். திருச்சிக்காரர். அவர் தான் எனது இந்த நிலைமைக்கு காரணம். என்னிடம் இருந்த திறமையை சரியாக கவனித்து, கைத்தூக்கிவிட்டார். நம்மிடம் திறமையும், அர்ப்பணிப்பும் இருந்தால், வளர்ச்சி நிச்சயம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை சார். நன்றி” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts