முன்னுரை :
வாசகத் தோழமைகளுக்கு வணக்கம் !
ஆரா அருணா !
ஏறக்குறைய 18 ஆண்டுகளாக சமூக வீதியின் எல்லாவிதமான வீடுகளுக்குள்ளும் புழங்கி முடித்துவிட்டு, புதுப் புது விடியல் தேடி பயணிக்கும் ஒரு ‘தனி ஒருத்தி’. வயதுக்கும் வாழ்க்கை அனுபவங்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ‘முரண்பாட்டு மூட்டைகளுக்கு சொந்தக்காரி’. வாழ்க்கையை, சுற்றியிருக்கும் சூழலை, தனிப் பார்வையில், தன் பார்வையில் பார்க்கப் பழகிக் கொண்ட ‘ஒரு நாடோடி’.
அந்தப்பார்வை வண்ணக் குழைப்புகளோ, வார்த்தை அலங்காரங்களோ, கருத்தியல் மோதல்களோ இல்லாத சாதாரண மனிதர்களின் பார்வை. வெளிச்ச ஊடகங்களின் கவர்ச்சி ஒளியில் காணாமல்போன எதார்த்தங்களின் பார்வை. அப்படி ஒரு எளியவளின் எளிய பார்வையை இந்த ‘ஆரா அருணாவின் பக்கங்களில்’ பதிவு செய்வதில் பெரும் மகிழ்வு எனக்கு. வாருங்கள்! என்னோடு இந்த வாசிப்பு வாசலில் நுழைந்து பாருங்கள்! என் பார்வை உங்கள் பார்வையாகவும் இருப்பதை உணரும் பொழுதில் வாழ்த்துங்கள்! வளர்வோம்- வளமோடு ! இணைவோம் – தமிழோடு!
நாடு விட்டு நாடு..
துயர் பொறுக்க துணிந்து கிளம்பிய கூட்டம் !!!
தமிழும் தமிழர்களும், உலகம் தானே முழுவதுமாக உடைத்துப் பார்த்துவிட முடியாது வரலாற்றுக்கும் வாழ்வு நெறிகளுக்கும் சொந்தக்காரர்கள். அன்றும் இன்றும் என்றும் உலகம் இதை மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஏதோ ஒரு விதத்தில் அறிந்தும், அறியாமலும் தங்களையே தாரைவார்த்துக் கொண்டவர்கள்தான் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள்! என்ற உண்மையை யாரும் எப்போதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது ! கூடாது !
‘ரோமப் பேரரசின் கருவூலத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் எடையுள்ள தங்க நாணயங்க்களை இந்தியா வற்றச் செய்து விட்டது’ என கிமு 100களிலேயே ரோமானிய வரலாற்று ஆசிரியன் பிளினி புலம்பும் அளவுக்கு செழிப்போடு ஆரம்பித்தது அண்டை நாடுகளுடனான நமது வியாபார, கலாச்சார, உறவுகளும், பரிமாற்றங்களும். தரமான பொருட்களை தங்கக்காசுகளுக்கு பரிமாற ஆரம்பித்த தமிழர்கள் இன்றைக்கு தாய் வழி உறவுகளை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தவித்து நிற்கும் இடத்திற்கு வந்துவிட்டோம்.
இதுவும் வரலாறு தான்…!!! வணிகர்களாக, பொருட்களை பண்டமாற்றக் கூடியவர்களாக, அடுத்த நாடுகள் அறியாத புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்யும் வியாபாரிகளாக, தலைநிமிர்ந்து நாடுகளை வலம் வந்த தமிழர்கள், பிழைப்புத் தேடி வேலைக்காரர்களாக வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்த வரலாறும் கொஞ்சம் நெருடல் நிறைந்ததுதான். அடிமைப்படுத்திய அன்றைய காலணி ஆதிக்கத்தின் அரக்கப் பிடிக்குள் சிக்கி, 1800களின் ஆரம்ப ஆண்டுகளில் தோட்டக் கூலிகளாக மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு பொருட்களைப் போல் ஏற்றுமதி செய்யப்பட்ட நம்மவர்களின் வரலாறு தான், இன்றைக்கும் பிழைப்புத் தேடி வெளிநாடுகளுக்கு கிளம்பும் ஒவ்வொருவருக்கும் ஆரம்பப்பள்ளி!
வெளிநாடுகளுக்கு வேலை தேடி தமிழர்கள் போவதற்கு எவையெல்லாம் காரணிகளாக அமைகின்றன? எந்தெந்த தமிழக பகுதிகளில் இருந்து அதிக அளவில் தமிழர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்? எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்? எந்த மாதிரியான வேலைகளைச் செய்கிறார்கள்? என்ன மாதிரியான இடர்கள் சவால்களை சந்திக்கிறார்கள்? என எவ்வளவோ பேர் எவ்வளவோ பதிவு செய்திருக்கிறார்கள். அவைகளில் பலவற்றை சுடச்சுட, கண்ணீர் வழிய, நானும் வாசித்திருக்கிறேன். அவைகளையே மறுபடியும் இங்கே அலசி ஆராய்வது அல்ல என் நோக்கம்!
வேலை தேடி வெளிநாடு செல்லும் சகோதரங்களை எண்ணிப் பார்க்கையில் எவ்வளவோ எழுத வேண்டுமென நினைத்திருக்கிறேன் நானும்.. அப்படி ஒரு முடிவை நான் எடுக்க வேண்டிய சூழல் வரும்வரை…!!! ஆனால் அந்த சூழலை எதிர் கொண்டிருக்கும் வேளையில் என் எண்ணத்தில் மிஞ்சியது இந்த வார்த்தை மட்டும்தான் ‘துயர் பொறுக்க கிளம்பிய துணிந்த கூட்டம்’. வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் துயரங்க்கல் வரும், அவைகளை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை அறிந்தே துணிந்து கிளம்பிய கூட்டத்தின் ஒரு பகுதி தான்!
எந்தப் பணி ஆனாலும் சரி, எவ்வளவு வருமானம் ஆனாலும் சரி ,எந்த நாடானாலும் சரி, எப்போது ஒரு மனிதர் தான் பிறந்து வளர்ந்து தனக்கு பழகிப்போன தன்னுடைய வீட்டையும் நாட்டையும் விட்டு, முற்றும் அறியாத நாட்டுக்கு, முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களை நம்பி, அவர்களோடு , அந்த சூழலோடு, உணவு, தங்குமிடம், கலாச்சாரம், வசதி வாய்ப்புகள், தன்மானம் எதையும் பொருட்படுத்தாமல், தன் அன்பிற்குரியவர்களை, தன் குடும்பத்தின் பொருளாதார தேவையை மட்டுமே முன்னிலைப்படுத்தி கிளம்பிச் செல்ல முடிவெடுக்கிறாரோ அப்போது இருந்தே அந்த மனிதரின் மிகப்பெரும் அடையாளம் துணிச்சல் நிறைந்தவர் என்பதைத் தவிர என்னவாக இருக்க முடியும்!? அதனால் தான் சொல்கிறேன் பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் துயர் பொறுக்க துணிந்தவர்கள்!
● அக்கா, தங்கையின் திருமண கடமையை நிறைவேற்ற வேண்டிய அண்ணன் தம்பியாக இருக்கலாம்
● பெற்றவர்களின், குடும்பத்தின் கடனை அடைக்க கிளம்பிய மகனாக இருக்கலாம்
● படித்த படிப்பும், கிடைத்த வேலையும் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற போதுமானதாக இல்லையே என, பச்சிளம் குழந்தையைக் கூட பிரிந்து போன குடும்பத் தலைவராக இருக்கலாம்
● காப்பானாக இருப்பான் என்று நினைத்த கட்டியவன் காணாமல் போக தலை மேல் விழுந்த குடும்ப பாரத்தை சமாளிக்க தாலியை அடகு வைத்துப் போன மனைவியாக இருக்கலாம்
● அண்ணன் தம்பி இந்த வீட்டில் அம்மா அப்பாவுக்கு ஆண்பிள்ளை நான்தான் என பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட மகளாக இருக்கலாம்
இவர்கள் எல்லாருமே என்னை பொறுத்தவரையில் மிகவும் பாராட்டப்படவும், போற்றப்படவும் வேண்டியவர்கள். சில நேரங்களில், ஏன் பெரும்பாலான நேரங்களில் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்றாலும் கூட, உறவுகளுக்காக உலகத்தின் இன்னொரு பகுதிக்கு கூட கிளம்பிச் செல்ல தயாராக இருக்கும் இந்த மனிதர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்!!!.
● பணம் கொடுக்கும் முகவர்கள் வாய்ப்பிருக்கிறது — இருக்கட்டுமே !
● அந்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கிய உடனே குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆட்கள் வரவில்லை எனில் மாதக்கணக்கில் கூட இடைத்தங்கல் முகாமில் தங்க வேண்டியிருக்கும், வராமலேயே போனால் திரும்பி வர வேண்டியிருக்கும் — இருக்கட்டுமே !
● வேலையில் சேர்ந்த பிறகு அந்த நிறுவனம் எவ்வளவு இடர் கொடுத்தாலும் வேறு நிறுவனம் மாற முடியாது, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்– இருக்கட்டுமே ! எதுவுமே எளிது இல்லையே சமாளிக்கத்தான் வேண்டும் !
● பெற்ற குழந்தை வளர்வதை கூட உடனிருந்து உணரமுடியாது ,உற்றார், உடன் பிறந்தோர், பெற்றோரின், நல்லது கெட்டதுகளில் கூட உடன் இருக்க முடியாது — ………….
● மொழி தெரியாது — கற்றுக்கொள்ளலாம்
● காலநிலை ஒத்துவராது — பழகிக் கொள்ளலாம்
● கலாச்சாரம் வேறு மாதிரி — நாம் நாமாக இருந்து விட்டுப் போவோம்
என இடர்கள் எல்லாவற்றையும், வரப்போகிற துன்பங்கள் எல்லாவற்றையும் அறிந்து, தெரிந்து. புரிந்து அதை உறவுகளுக்காக விரும்பி ஏற்று விமானம் ஏறும் சகோதரங்களின் தியாகத்தால் விளைந்த துணிவை வார்த்தைகளில் வடித்து விட முடியுமா?
அவர் பெயர் பாலன். வானம் பார்த்த சிவகங்கைச் சீமையின் வளம் மறந்த பகுதி ஒன்றின், பருவ வயதுப் பிள்ளைகளின் தந்தை. போதாத படிப்பு, பொய்த்துப்போன வானம் இரண்டும் சேர்ந்து இளவயதில் அனுப்பி வைத்தது அவரை அடுத்த நாட்டிற்கு. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 நாள் விடுமுறை! அன்னையும் தந்தையும் அடுத்தடுத்து இறந்தபோதும் அருகில் இருக்க முடியாத வேதனை! என்றாலும் தொடர்ந்த உழைப்பு.வேலை ஒன்றும் பெரிதில்லை! ஒரு பெரிய கடையில் ஒரு சிறிய வேலை. ‘எப்போது தான் நாட்டோடு தங்கப் போகிறீர்கள் ?’ என்று கேட்டேன் ஒரு முறை,’ இதுதான் இறுதி முறை, மகன் படித்துவிட்டான். வேலை, வருமானம் என்று அமர்ந்து விடுவான், பிறகு நானும் வந்து நாட்டோடு, வீட்டோடு இருந்து விடுவேன்’ என்று கிளம்பிய மனிதர், ஆறே மாதத்தில் இதய அடைப்பினால் இறந்து போய் ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு பொதிந்த உடலாகத்தான் ஊர் வந்து சேர்த்தார்.
தங்களின் சொந்த ஆசைகள் உணர்வுகள் தேவைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சிரமங்கள் தான் என்று அறிந்த பிறகும், அது அடிமை வேலையே என்றாலும், சிரித்த முகத்தோடு விடைபெற்றுப் போகும் ஒவ்வொருவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்!
வல்லூறுகளுக்கு இரையாகும் பெண்களின் பின்னால் நிலை பற்றிய பார்வையோடு அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.