TamilSaaga

“சிங்கப்பூரின் முன்மாதிரி.. காப்பாற்றுமா தமிழகத்தின் கூவத்தை” : ஒரு Detailed Report

உள்ளூரில் நடக்கும் ஏதோ ஒரு பிரச்சினைக்கு உலக நாடுகளிலிருந்து தீர்வை தேடுவது இன்றைக்கு எல்லா மட்டங்களிலும் பரவி இருக்கிற ஒரு பழக்கம். அப்படித்தான் நமது மாநில தலைநகரில் முக்கிய பிரச்சனையாக விளங்கக்கூடிய கூவம் ஆறும் தனக்கான பிரச்சினைக்கு தீர்வாக, முன்மாதிரியாக, சிங்கப்பூர் நதியே கொண்டிருக்கிறது. அது பற்றிய ஒரு பதிவு.

கூவம் – பெயரைக் கேட்டவுடன் இன்றைய தலைமுறையில், தமிழகத்தின் தலைநகரை தெரிந்த எல்லாரும், தங்களையும் அறியாமல் கைகளால் மூக்கை மூடிக்கொள்ளும் ஒரு பெயர்போன பெரிய சாக்கடை! ஆனால் உண்மையில், அது ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஒரு அழகிய நதி. (ஒருவேளை இந்த இடத்தில் ‘ மதராசபட்டினம்’ படம் நினைவில் வந்து போகலாம்) அப்படி ஒரு நதி இன்று மாநகரின் பெரிய சாக்கடையாக மாறிப்போனது உண்மையிலேயே வருத்தமான செய்திதான்.

இதே போன்ற ஒரு வருத்தமான வரலாற்றைத் தான் ஒருகாலத்தில் சுமந்திருக்கிறது சிங்கப்பூர் நதியும். ஆனால் இன்று அந்த நிலை மாறி இருக்கிறது. சிங்கப்பூர் நதியின் நிலை சீரடைய முடியுமென்றால் ஏன் கூவத்தையும் சீரமைக்க முடியாது!?

சிங்கப்பூர் நதி…

ஏறக்குறைய பல ஆண்டுகளாக கூவம் நதியோடு ஒப்பிடப்பட்டு கொண்டிருக்கிறது. கூவம் நதி போலவே சிங்கப்பூர் நதியும் 1970களில் தன்னிலை திரிந்து சாக்கடையாக மாறி இருக்கிறது. இந்த நதியும் மாநிலத்தின் முக்கியமான வணிக மையமாக விளங்கக்கூடிய பகுதியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் சிங்கப்பூர் நதியை சுத்தம் செய்வதற்காக 1977 மற்றும் 1987க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்தன.

நதியை சுத்தம் செய்ய இறங்கியவர்கள் அதன் முதல் மற்றும் முக்கிய காரணியாக கருத்தில்கொண்டது, ஆற்றில் கலந்து விட்ட, கலந்து கொண்டிருக்கிறார் கழிவுகளை சுத்தம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் நதி மாசுபடுவதற்கான காரணங்களைக் கண்டறிவதும், அவைகளை முளையிலேயே களைவதும் தான்.

சிங்கப்பூர் அரசாங்கம் சிங்கப்பூர் நதியை சுத்தம் செய்ய இது போன்ற மாபெரும் முன்னெடுப்பை எடுத்துக்கொண்ட நேரத்தில், இங்கே கூவத்தின் நிலையோ இன்னும் மோசமாகி கொண்டிருந்தது. சிங்கப்பூர் நதியின் சீரமைப்பு என்பது உலக நாடுகள் பலவற்றையும் சிந்திக்க வைத்த, புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்த ஒரு முயற்சி என்றால் அது மிகையல்ல. அந்த முயற்சி தான் தமிழக ஆட்சியாளர்களையும் கவர்ந்திழுத்தது.

விளைவு 2009 அன்று துணை முதல்வராக இருந்த திரு எம் . கே . ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழக வல்லுனர்கள் குழு ஒன்று சிங்கப்பூரை பார்வையிட்டு, எவ்வாறு அவர்கள் சிங்கப்பூர் நதியை மீட்டு எடுத்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்ந்து வந்தது. ஆனால் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முன்னரே ஆட்சி கைமாறி விட, தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக அரசு அந்தத் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட, கூவத்தின் நிலை மறுபடியும் கிணற்றுக்குள் எறியப்பட்ட கல்லை போல காணாமல் போனது.

இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார் திமுக அரசு ‘சிங்காரச் சென்னை 2.0′ என்கிற திட்டத்தை கையில் எடுத்திருப்பது’ அதன் முக்கிய பகுதியாக, சிங்கப்பூர் நதியின் முன்மாதிரியை கொண்டு கூவம் நதியை சுத்தப்படுத்துவதும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

என்னதான் கூவம் நதியை சுத்தப்படுத்துவதற்கு ஆர்வமும், அதை செயல்படுத்தக் கூடிய அரசாங்கமும், அதற்கான ஒரு முன்மாதிரியும் இருந்தாலும் கூட சிங்கப்பூர் நதியின் முன்மாதிரியோடு ஒப்பிடும் போது கூவம் ஆற்றுக்கு சில நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டு ஆறுகளையும் மாசுபடுத்திய முக்கிய காரணிகள், நகரமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகள் என்றாலும்கூட, மக்கள்தொகை மற்றும் அந்த ஆற்றின் உடைய ஆற்றுப்படுகை அளவு ஆகியவைகளும் கூட முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. அப்படிப் பார்க்கையில் சிங்கப்பூர் நதியின் ஆற்றுப்படுகை அதிகபட்சமாக 100 சதுர கிலோ மீட்டர்கள் . ஆனால் கூவம் நதியின் ஆற்றுப்படுகை 400 சதுர கிலோமீட்டர்கள்.

சிங்கப்பூர் நதியின் ஆற்றுப்படுகை குறைவாக இருந்ததால், ஆற்றின் போக்கினை மாற்றுவதோ, அங்கே ஒரு தடுப்பணை கட்டுவதோ, அவர்களுக்கு சிரமமாக இருந்திருக்காது. ஆனால் அதை போல் நான்கு மடங்கு இருக்கிற கூவம் ஆற்றுப்படுகையில் அதுபோன்ற செயல்பாடுகள் சாத்தியமா? சிங்கப்பூர் நதியை சீரமைக்கும் போது அவர்கள் அங்கே ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்தை உருவாக்கினார்கள். ஆனால் கூவம் நதியில் அலைகளும், அலைபோக்கும் அதிகமாக இருப்பதால் (ஏறக்குறைய சேத்துப்பட்டு வரை கூவம் நதி ஒரு அலை மண்டலமாகவே கருதப்படுகிறது) எனவே அப்படி ஒரு நீர் தேக்கத்தை உருவாக்குவது சாத்தியமா?

சிங்கப்பூர் நதியோடு ஒப்பிடும்போது கூவம் நதியின் அளவுக்கதிகமான உப்புத்தன்மை, வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுக்கான அமைப்பு இல்லாதது என இது போல் அடுத்தடுத்து கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
கூவம் நதியை தூய்மைப்படுத்த முயலும்போது இருக்கிற அடுத்த மிகப்பெரிய சவால் குடும்பங்களை இடமாற்றம் செய்வது!!!

சிங்கப்பூர் நதியை சீரமைக்கும் பொழுது, 1977 ல் தொடங்கிய பணியில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் 1984 க்குள் எல்லா குடும்பங்களையும், (ஏறக்குறைய 26,000 குடும்பங்கள்) இடமாற்றம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் அது சாத்தியமா ?

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, திரு. வீரப்பன், முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் PWD, தற்போது தமிழ்நாடு PWD மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளர், ‘கூவம் நதியை தூய்மைப்படுத்துவதற்கும், தடுப்பு சுவர்கள் கட்டுவதற்கும் முன்பு ,நாம் முதலில் அடிப்படைகளுக்குச் செல்ல வேண்டும். நதியினை ஆக்கிரமித்திருக்கிற நிறுவனங்கள் அனைத்தும்,எந்தவிதமான பாகுபாடும் இன்றி அகற்றப்பட வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.

மேலும் ‘ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வேலி உட்பட, எந்த அமைப்பையும் அந்த இடத்தின் உப்பு நிறைந்த காற்றை தாங்காது. கழிவுநீரை சுத்திகரிக்கும் முன் திரவ, திடக்கழிவுகளை பிரித்து சுத்திகரிப்பது மிக அவசியம். அதற்கு போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. எனவே ஆற்றின் இரண்டு கரைகளிலும் திரவக் கழிவுகளை சேகரிக்க வலுவூட்டப்பட்ட கான்கிரீட் குழாய்களை பயன்படுத்தலாம் எனவும், சாம்பல் நீரை சுரங்கப்பாதை நீர்த்தேக்கத்தின் மூலம் மறுசுழற்சி செய்யலாம்’ எனவும் தனது பரிந்துரைகளையும் அவர் முன்வைக்கிறார்.

எதிர்கால தலைமுறையானது கூவத்தின் கடந்தகாலத்தின் ஒரு சிறு பகுதியையாவது மறுபடியும் பார்க்க முடிந்தால் மகிழ்ச்சியே. “கருப்பு நதியாம் அதன் விதையை மாற்றப்போவது யாரடா?” என்ற சின்ன கலைவாணரின் வரிகளுக்கும் நமக்கு நினைவில் வந்துபோகிறது என்றால் அதுமிகையல்ல.

Related posts