TamilSaaga

Exclusive : அரசு தரும் PCR சான்றிதழில் குழப்பம்? : சிங்கப்பூர் திரும்ப முடியாமல் திருச்சியில் தவித்த பயணி

பெருந்தொற்று பரவல் காரணமாக தற்போது உலக அளவளவில் விமான போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உலகின் பல நாடுகள் பிற நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப நினைக்கும் தங்களது குடிமக்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றது.

இந்நிலையில் அண்டை நாடான இந்தியா வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து பிற நாடுகளுக்கும், பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் மக்களை அழைத்து சென்று வருகின்றது. இந்நிலையில் வந்தே பாரத் மற்றும் Air Bubble சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுறம் இருக்க திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 29) நடந்த ஒரு சம்பவம் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கவிருந்த பயணி ஒருவர் (சிங்கப்பூர் PR பெற்றவர்) திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

பயணிக்க அனைத்து உரிய ஆவணங்களும் அவரிடம் இருந்துள்ளது. மேலும் இந்திய அரசிடம் இருந்து PCR பரிசோதனை சான்றிதழும் அவர் தன்னுடன் வைத்திருந்த நிலையிலும் அவரது பயணம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலங்கிப்போன பயணி தனது பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்டபோது ‘அரசு வழங்கிய PCR சான்றிதழில் பயணியின் பாஸ்போர்ட் குறித்த தகவல்கள் இல்லை என்பதால் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பயணி சிங்கப்பூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘சிங்கப்பூர் அரசு, தங்களது நாட்டிற்குள் வரும் பயணிகளின் PCR சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த பயணிகளை நாட்டிற்குள் வரவேற்பதில்லை என்று கூறப்படுகிறது’.

மேலும் இந்தியாவில் தனியாரிடம் பெரும் PCR சான்றிதழ்களில் பாஸ்போர்ட் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட பல விவரங்கள் பதிவேற்றப்படும்பட்சத்தில் அரசிடம் இருந்து பெறும் PCR சான்றிதழ்களில் அந்த தரவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிலர் உரிய ஆவணங்கள் இருந்தும் தங்கள் பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.

Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி விமான நிலையம், திருச்சி.

Related posts