TamilSaaga

தகதகவென எரிந்த இரண்டாம் உலகப்போர்.. நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய சிங்கப்பூர் “ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்” – பயபக்தியோடு வணங்கும் லிட்டில் இந்தியா மக்கள்

சிங்கப்பூரின் அடையாளமான லிட்டில் இந்தியாவில் கம்பீரமாக நின்றிருக்கும் ஸ்ரீவீரகாளியம்மன் கோயிலின் வரலாறு தெரியுமா… இரண்டாம் உலகப் போரில் தனது சந்நிதியில் சரணடைந்த நூற்றுக்கணக்கான மக்களை எந்தவொரு சேதமும் இன்றி காளி காப்பாற்றியபோது என்ன நடந்தது?

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா

சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியின் அடையாளமாகக் கம்பீரமாக நிற்கும் ஸ்ரீவீரகாளியம்மன் கோயிலைக் குறிப்பிடாமல் லிட்டில் இந்தியா பற்றி பேசவே முடியாது. எப்படி, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மதுரை நகர் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல் ஸ்ரீவீரகாளியம்மன் கோயிலைச் சுற்றியே லிட்டில் இந்தியா பகுதி கட்டமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். ‘Serangoon Road’ பகுதியில் தொடக்க காலங்களில் ஐரோப்பியர்களே அதிகம் வசித்து வந்தனர். அதன்பிறகு, சீனர்களும் அதிக அளவில் குடியேறினர். ஆனால், ஸ்ரீவீரகாளியம்மன் கோயில் கட்டப்பட்ட பிறகே, இது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக மாறத்தொடங்கியது.

ஸ்ரீவீரகாளியம்மன் கோயில் வரலாறு

லிட்டில் இந்தியாவில் இருக்கும் இந்தக் கோயிலின் வரலாறு 180 ஆண்டுகளுக்கும் மேலானது. பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் அரசாங்க வேலைகளைச் செய்ய இந்தியாவில் இருந்து சிறைக்கைதிகள் அங்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் சிறைதண்டனை முடிந்த பிறகு ‘Serangoon Road’ பகுதியை ஒட்டிய இடங்களில் வசிக்கத் தொடங்கினர். அதேபோல், அருகில் இருந்த சுண்ணாம்பு சுரங்களிலும் வேலைபார்க்கத் தொடங்கினர். சொந்த நாட்டை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு எங்கோ ஒரு வெளிநாட்டில் வேலைபார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களைக் காக்க வேண்டும் என தீய சக்திகளுக்கு எமனாக அமைந்த காளியம்மன் கோயிலை அமைக்க வேண்டும் என ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் குடியேறிய தமிழ் மக்கள் நினைத்திருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றிணைந்து ‘Serangoon Road’ பகுதியில் 1835-ல் ஸ்ரீவீரகாளியம்மன் கோயிலைக் கட்டினார்கள். அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கோயிலின் புகழ் சிங்கப்பூர் முழுவதும் பரவத் தொடங்கியது. 1908-ல் உள்ளூர் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் கோயில் வந்ததும், கோயிலை விரிவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆரம்பகாலத்தில் கோயிலில் காளியின் களிமண் சிலை இருந்தநிலையில், 1930-களில் தமிழகத்தில் இருந்து காளியின் திருவுருவச் சிலை வரவழைக்கப்பட்டு நிறுவப்பட்டது. அதன்பின்னர், கோயிலில் பெரியாச்சி அம்மன், விநாயகர், பாலசுப்ரமணியருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டு கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், இந்தப் பகுதியின் முக்கியமான அடையாளமாக இந்தக் கோயில் மாறிப்போனது. கோயிலுக்கும் இந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கும் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்கள் வடிவில் சோதனை வந்தது.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது” – MOM அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆனால், வெளிநாட்டு ஊழியர்களின் நிலை?

இரண்டாம் உலகப் போர் சோதனை

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டீஷ் படைகளும் ஜப்பானியர்களும் எதிரெதிர் பக்க நின்று போரிட்டுக் கொண்டிருந்தனர். பிரிடீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சிங்கப்பூரை முக்கியமான ராணுவ தளமாகக் கொண்டு ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். இதையறிந்த ஜப்பான் படைகள், சிங்கப்பூரை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று துடித்தன. இதற்காக 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மலேசிய தீபகற்பத்தைக் கைப்பற்ற ஜப்பானிய ராணுவ ஜெனரல் ’Tomoyuki Yamashita’ தலையில் 30,000 வீரர்கள் கொண்ட படை புறப்பட்டது.

இந்தப் படை 1942-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூருக்குள் நுழையத் திட்டமிட்டிருந்தது. பிரிட்டீஷ் படைகள் லெப்டினண்ட் ஜெனரல் ‘Arthur Percival’ தலையில் தொடக்கத்தில் பயங்கரமான தாக்குதல்களை நடத்தியது. ஆனால், பிரிட்டீஷ் படைகளின் திட்டமிடலில் நடந்த சொதப்பல்கள், சரியான தகவல் தொடர்பு இல்லாமை போன்றவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜப்பானியப் படைகள், கடல்வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்து தாக்குதலையும் வான்வழித் தாக்குதல்களையும் ஒருசேர நிகழ்த்தின. அப்போதைய போரில் இந்திய ராணுவ வீரர்களில் 4 படைப்பிரிவினர் ஜப்பானியர்களுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திக் திக் நிமிடங்கள்

சிங்கப்பூர் மீது ஜப்பானியப் படைகள் தொடுத்த கடுமையான தாக்குதல்கள் 1942-ம் ஆண்டு பிப்ரவரி 8 – 15-ம் தேதி வரை என எட்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக நீடித்தது. அந்தப் போரில் நூற்றுக்கணக்கானோர் இறந்த நிலையில், சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ந்தது. ஜப்பானிய ராணுவ ஜெனரல் ‘Tomoyuki Yamashita’ பிரிட்டீஷ் ராணுவத்தின் முழு படைகளும் சரணடைந்தாக வேண்டும் என்று முழங்கினார். பிரிட்டீஷ் வீரர்கள் சுமார் 80,000 பேர் ஜப்பானியர்களிடம் சரணடைந்தனர். இந்த சம்பவத்தை பிரிட்டீஷ் ராணுவத்தின் மோசமான நிகழ்வு என அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார்.

ஸ்ரீவீரகாளியம்மன் கோயில்

இரண்டாம் உலகப் போர் சிங்கப்பூருக்கு பேரழிவைக் கொண்டு வந்த நிலையில், இப்போதைய லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் ஸ்ரீவீரகாளியம்மன் கோயில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. சிங்கப்பூரைப் பல்வேறு முனைகளில் இருந்தும் ஜப்பானியர்கள் தாக்கத் தொடங்கியிருந்த நிலையில், போக்குவரத்து மற்றும் வணிகரீதியாக முக்கியத்துவம் பெற்றிருந்த இப்போதைய லிட்டில் இந்தியா பகுதியைக் குறிவைத்துக் கடும் தாக்குதல்களை நடத்தினர்.

அந்தத் தாக்குதலின்போது இந்தப் பகுதியில் வியாபாரம் நடந்திவந்த இந்தியர்கள் பலர் தங்கள் கடைகளை அப்படியே விட்டுவிட்டு இந்தியா திரும்பினர். மக்கள் உயிருக்கு அஞ்சி, சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பில் காமன்வெல்த் நாடுகள் வசமிருந்த ஒரு சதவிகித நிலத்தில் தஞ்சமடையத் தொடங்கினர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் சம்பளத்தை குறைத்து “டார்ச்சர்” செய்த ஓனர்.. கண்ணீருடன் பறந்த புகார்.. பாய்ந்த நடவடிக்கை – “நெத்தியடி” சம்பவம்!

பலர் அருகிலிருந்த சர்ச்சுகள், மசூதிகள், கோயில்களில் அடைக்கலமானார்கள். அவர்களுக்குப் புகலிடம் கொடுத்ததோடு, அந்த மாதிரியான கோயில்கள்தான் உணவும் அளித்து பாதுகாத்தன. அப்படியான சூழலில் ஸ்ரீவீரகாளியம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலமானார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எந்த நேரமும் தங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம், குண்டுவெடிப்பில் உடல் சிதறி பலியாகக் கூடும் என்ற அச்சத்தோடே மக்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.

தங்களின் காவல் தெய்வமான காளியிடம் மனதார வேண்டிக் கொண்டனர். அவர்கள், கண்முன்னே அப்போதைய லிட்டில் இந்தியா பகுதியில் இருந்த கட்டடங்கள் ஒவ்வொன்றாக தாக்குதலில் இடிந்து விழுந்தன. சுற்றிலும் ரத்த ஆறு, மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால், காளியின் அருளால் கோயிலில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கானோருக்கு சிறு கீறல் கூட விழவில்லை. ஜப்பானியர்கள் தாக்குதலில் ஒரு சிறு சேதம் கூட ஏற்படாமல் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் தப்பியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தங்களின் உயிரைக் காப்பாற்றியது காளிதான் என்று அவள் மேல் மிகுந்த பயபக்தியோடு லிட்டில் இந்தியா மக்கள் இன்றுவரை கொண்டாடி வருகிறார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts