சிங்கப்பூர் என்றாலே வானுயர கட்டிடங்கள், சுத்தமான சாலைகள், கட்டுக்கோப்பான அரசு நிர்வாகம் என்பது தான் நினைவுக்கு வரும். அது உண்மை தான். 100% உண்மை தான். ஆனால், அதே சிங்கப்பூரில் ஒரு கிராமம் இன்னமும் தனது இன்னலில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள், இன்னமும் அந்த பயத்தில் இருந்து வெளிவர முடியாமல் தான் தவிக்கின்றனர்.
ஆம்! சிங்கப்பூரின் Hougang பகுதியின் Buangkok-ல் உள்ள கிராமம் Kampong Lorong Buangkok. இதில், Kampong என்ற பெயர் மலாய் மொழியில் Selak Kain என்று அழைக்கப்படுகிறது.
அதென்ன Selak Kain?
சொல்றேன்.. இதன் அர்த்தம், “ஒருவர் தனது skirt போன்ற உடையை மேலே இழுத்துக் கொள்வது” ஆகும். என்னப்பா சொல்றீங்க?-னு டென்ஷன் ஆக வேண்டாம். மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தின் போது, முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், உடுத்தியிருக்கும் கைலி போன்ற உடை.. அதாவது skirt தண்ணீரில் நனையாமல் இருக்க, மேலே தூக்கிக் கொள்வது தான் Selak Kain என்பதன் அர்த்தம்.
சரி… இந்த கிராமத்துக்கு ஏன் இப்படியொரு பேர் வச்சாங்க?
ஏனெனில், 20ம் நூற்றாண்டில் இங்கு அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீர் இந்த கிராமத்தைச் சூழ்ந்து மக்களை முடக்கிப் போட்டுவிடும். இதனால், பலர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், இன்னமும் இந்த கிராமத்து மக்கள் கடும் மழை பெய்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
கிராமத்தின் வரலாறு
Kampong Lorong Buangkok எனும் இப்பகுதியின் நிலம், பாரம்பரிய சீன மருந்து விற்பனையாளரான Sng Teow Koon என்பவரால் 1956 ஆம் ஆண்டு ஹுவாங் யூ டு என்பவரிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தை வாங்கிய போது, ஏற்கனவே 4 முதல் 6 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. பிறகு, Sng Teow Koon தனது குடும்பத்துடன் கிராமத்தில் வீடு அமைத்து, வீடுகள் கட்ட மக்களுக்கு நிலத்தை வாடகைக்கு விடத் தொடங்கினார். சில நிலங்கள் அவரது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது, அவர்களில் ஒருவர் திருமதி Sng Mui Hong. அவர் தனது குடும்பத்தினருடன் இதே கிராமத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார். உரிமையாளர்களான அப்பெண்ணின் மற்ற 3 உடன்பிறப்புகள் அனைவரும் திருமணமாகி கிராமத்தை விட்டே வெளியேறிவிட்டனர்.
ஆரம்பத்தில் இது 5-6 வீடுகளைக் கொண்ட ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. 1960 களில், இங்கு சுமார் 40 குடும்பங்கள் வசித்தனர. நிலப்பரப்பு 21460 m2 ஆக இருந்தது, ஆனால் தற்போது இதன் அளவு 12248.1 m2 ஆக சுருங்கிவிட்டது. மின்சாரம், குடிநீர், குப்பை சேகரிப்பு ஆகியவை அரசால் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒருமுறை மோட்டார் சைக்கிளில் தபால்காரர் வந்து தபால் கொடுத்துவிட்டு போவது வழக்கம். தற்போது இங்கு 28 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 18 சீன குடும்பமும் 10 மலாய் குடும்பங்களும் அடக்கம்.
பாடுபடுத்திய வெள்ளம்
கடந்த காலங்களில், இந்த கிராமம் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கனமழையின் போது, தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வடிகால் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீரை விரைவாக வெளியேற்ற முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1970 ஆம் ஆண்டில், வெள்ளத்தை குறைக்க இங்கு ஒரு கால்வாய் கட்டப்பட்டது. இருப்பினும், பெரும் வெள்ளத்தின் போது, அந்த கால்வாய் பல்லிளித்துக் கொண்டு சென்றுவிட்டது. கடந்த 2006ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்கும் தரைமட்டத்தை உயர்த்துவதற்கும் $10 மில்லியன் திட்டம் ஒதுக்கப்பட்ட நிலையில், பிறகு வெறும் 28 குடும்பங்களுக்கு இவ்வளவு செலவு செய்வதா என்று அத்திட்டம் கைவிடப்பட்டது.
இப்போது மக்கள் அங்கு வசிக்கிறார்கள் அவ்வளவே. மற்றபடி, அவர்கள் ஒவ்வொரு பொழுதையும் நிம்மதியாக, பாதுகாப்பாக கழிக்கிறார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. நாம் அண்ணாந்து பார்க்கும் சிங்கப்பூரில், இப்படியும் குனிந்து பார்க்கக் கூடிய விஷயங்கள் இல்லாமல் இல்லை.