TamilSaaga

“ஆசியாவின் பாவப்பட்ட சிறிய சந்தை” என்று ஏளனம்.. இன்று ‘பொருளாதாரப் புலி’யாக சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர்

வானுயர்ந்த கட்டிடங்கள், தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாத இடம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடம் என எந்த வசதிகளுக்கும் குறைவில்லாத நாடு சிங்கப்பூர். எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டிய நாடு அது. ஒரு காலத்தில் சிறிய துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூர், இன்று உலகின் வர்த்தக நகரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த பெயரையும், புகழையும் அடைய நமது மக்கள் கடந்து வந்த பாதை சற்றே வித்தியாசமானது. வியப்புக்குரியதும் கூட!

சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது, அதற்கு முன் சிங்கப்பூரும், மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு கூறுகிறது. 14ம் நூற்றாண்டில் அது “துமாசிக்” என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சியளித்தது, அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது.

சிலகாலம் தாய்லாந்தின் “அயுத்திய” அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகருக்கு 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் “சிங்கப்பூரா” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. இதன் பொருள் சிங்கத்தின் ஊர். இதனால் இந்த நாட்டின் தேசிய விலங்காக சிங்கமும், தேசிய சின்னமாக சிங்க லட்சினையும் உள்ளது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது எனவும் கூறுகிறது மலாய் மக்களின் வரலாறு.

மேலும் படிக்க – “Bra” அணியாமல் சாலையோரத்தில் தைரியமாக உணவு விற்கும் இளம்பெண் – “கவனமாக” இருக்க போலீசார் எச்சரிக்கை

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நூறு நாடுகளில் இதுவும் ஒன்று. பெரிய அளவில் போரை சந்திக்காத இந்த நாடு, இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் வசமானது. 1942-ல் இந்தப் போர் நடந்த போது பெரும்பாலான பிரிட்டன் படைகள் ஐரோப்பாவில் இருந்தன. வெறும் ஆறே நாட்களில் ஆங்கிலேயர் படை தோல்வியைத் தழுவ, இதனை பிரிட்டன் ராணுவ வரலாற்றின் மிகப்பெரிய தோல்வி என குறிப்பிட்டார் அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். வெறும் 70 நாட்களில் மலாயா மற்றும் சிங்கப்பூரை மீண்டும் வசப்படுத்தி, தங்கள் ஆளுமையை நிரூபித்தனர் ஆங்கிலேயர்கள்.

1954-ம் ஆண்டு பிரிட்டன் கட்டுப்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்கு நடத்தப்பட்ட முதல் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் 1959-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2-வது தேர்தலில் 51 இடங்களில் 43 இடங்களில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக பொறுப்பேற்றார் மக்கள் செயல் கட்சியின் நிறுவனத் தலைவர் லீ குவான் யூ.

யாரும் எதிர்பார்க்காத விதமாக 1961-ல் மலேசிய பிரதமர் TUNGU ABDUL RAHMAN-னிடம் இருந்து மக்கள் செயல் கட்சிக்கு அழைப்பு வந்தது. சிங்கப்பூர், மலேசியா, புருனாய் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய மலேசிய கூட்டமைப்பு உருவாக்க அவர் ஆலோசனை வழங்கினார். 1963-ல் உதயமானது மலேசிய கூட்டமைப்பு.
எதிர்பார்த்ததைப் போல இந்த மலேசிய கூட்டமைப்பு சிங்கப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் மலேசியாவிற்கு சிக்கல்கள் இருந்தன. இதன் விளைவாக போர் மேகங்கள் இருநாடுகளையும் சூழ, இறுதியில் இரண்டே ஆண்டுகளில் தனிநாடாக உருவெடுத்தது சிங்கப்பூர்.

தனிதேசமாக சிங்கப்பூர் உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது.”பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்!” என்று சொன்ன பிரதமர் லீ குவான் யூ, சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். கதை முடிந்தது என்று எண்ணிய போது, மீண்டு எழுந்து வந்தார் லீ. இங்கிருந்துதான் இன்று நாம் காணும் நவீன சிங்கப்பூரின் கதையே ஆரம்பமாகிறது.

யார் இந்த லீ குவான் யூ? என்ற கேள்விக்கு “சிங்கப்பூரின் தந்தை” என்ற ஒன்றை வார்த்தை நிச்சயம் பதிலாகாது. உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர்.

சிங்கப்பூரின் கரன்சி, டாலர். இதில் அந்நாட்டின் முதல் அதிபர் YUSOF BIN ISHAK-ன் படம் இடம்பெற்றிருக்கும். அதன் தேசிய மொழி மலாய். இருப்பினும் அந்நாட்டு அரசு ஆங்கிலத்துக்கே முக்கியத்துவம் தருகிறது. இதற்குக் காரணம் விடுதலை பெற்ற பிறகு தேசிய மொழியாக சிலகாலம் ஆங்கிலம் இருந்தது தான். மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் ஆகிய நான்கு மொழிகள் அலுவல் மொழியாக உள்ளன. மொத்தம் 63 தீவுகளைக் கொண்ட நாடு சிங்கப்பூர். இதன் முதன்மைத் தீவு நம் அனைவராலும் அதன் தலைநகராக அறியப்படும் சிங்கப்பூர் தீவுதான்.

சிங்கப்பூரில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு பதவி, உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்காது. இதன்காரணமாக அந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 59 லட்சமாக உள்ளது. வெறும் 724 கிலோ மீட்டர் சதுர பரப்பளவு கொண்ட நாடு என்பதால் இங்கு வாகனங்கள் இயக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர்வாசிகள் நினைத்த மாத்திரத்தில் கார் வாங்கிவிட முடியாது. காரின் குதிரை சக்தி (Horsepower) திறனுக்கேற்றாற்போல் வரி விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை செலுத்தி சான்றிதழ் பெற்றால் மட்டுமே கார் வாங்க முடியும் என்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே கார் வைத்திருப்பார்கள். மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கார்களை நகருக்குள் ஓட்டுவதற்குத் தனி உரிமமும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டுவதற்குச் சற்று குறைந்த விலையில் தனி உரிமமும் வழங்கப்படுகிறது.

பைக் வாங்குவதற்கும் இதே நடைமுறைதான், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் மிதிவண்டிகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மட்டுமல்ல காற்று மாசுபாடும் இங்கு குறைவு. குடிநீர் ஆதாரம் என்று சொல்லும் அளவிற்கு இங்கு ஆறுகளோ, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளோ கிடையாது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இங்கு, நிலத்தடி நீருக்காக கிணறுகள் தோண்டப்பட்டு இதுவரை தண்ணீரே கிடைத்ததில்லை. அதனால் நிலப்பரப்பில் ஒரு பகுதியை மழைநீரை சேமிப்பதற்கென அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு இனி MyICA app-ல் விண்ணப்பிக்கலாம்.. விசாவையும் நீட்டிக்கலாம் – மிக முக்கிய அறிவிப்பு

கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துதல், மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி போன்ற வழிமுறைகளை தண்ணீருக்காக அந்நாட்டு அரசு பயன்படுத்துகிறது. இதனால்தான் அங்கு அரிதான பொருட்களாக கருதப்படும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றிற்கு மானியம் இல்லாமல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஒரே இனத்தையோ அல்லது மதத்தையோ பின்பற்றும் மக்களைக் கொண்ட நாடு கிடையாது. இங்கு பூர்வீகக் குடிகளை விட புலம்பெயர்ந்தவர்களும், கல்வி, வேலைக்காக தங்கி இருப்பவர்களுமே அதிகம். இங்குள்ளவர்களில் 33 விழுக்காட்டினர் பவுத்த மதத்தையும், 18 விழுக்காட்டினர் கிறிஸ்தவத்தையும், 15 விழுக்காட்டினர் இஸ்லாமையும் பின்பற்றுகின்றனர். பவுத்த மதத்தை பின்பற்றுபவர்களின் பெரும்பாலானோர் சீனர்களாக இருக்கின்றனர்.

இந்து மதமும், சீக்கியமும் இங்கு சிறுபான்மை மதங்களாகவே உள்ளன. இருப்பினும் மற்ற மதங்களுக்கு குறைவில்லாமல் இங்கு இந்து கடவுளர்களின் கோவில்கள் அதிகம். சிங்கப்பூர் முருகன், அம்மன் என பல கோவில்கள் உலக பிரசித்தி பெற்றவை. உலக அளவில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தில் உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக இந்தியர்களும் உள்ளனர். அதனால் இவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் லிட்டில் சீனா, லிட்டில் இந்தியா என அழைக்கப்படுகிறது.

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் நவீன சீனாவைக் கட்டமைத்ததில் வெளிநாட்டவரின் பங்கு அளப்பரியது. இதை தனது பேட்டி ஒன்றின் மூலமாக அந்நாட்டின் தந்தையான லீ குவான் யூ-வும் உறுதி செய்துள்ளார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் உலக நாடுகளுக்கு சவாலளிக்கும் வகையிலேயே உள்ளது. GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலக அளவில் சிங்கப்பூர் 4-வது இடத்தில் உள்ளது. இதன் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிப்பதில்லை.

பட்ஜெட் தாக்கல் என்றாலே அது பற்றாக்குறையாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுவது இயல்புதான். ஆனால் அதற்கு விதிவிலக்காக உள்ள நாடு என்றால் அது நிச்சயம் சிங்கப்பூர்தான். 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசுக்கு 9.61 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் உபரி வருவாயாக கிடைத்துள்ளது. இதனை போனசாக நாட்டு மக்களுக்கே வழங்கியுள்ளது. 21 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்கள் வரை போனசாக வழங்கப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தச் செய்தது.
கல்வி கற்க வரும் வெளிநாட்டவருக்கு இங்கு ஏறக்குறைய இலவசமாகவே கல்வி வழங்கப்படுகிறது. ஆனால் படிப்பை முடித்து கட்டாயம் 3 ஆண்டுகள் அந்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. வேலை வாய்ப்பு வழங்குவதிலும் அந்நாடு முன்னிலையிலேயே உள்ளது. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகக்குறைவு.

சிங்கப்பூரில் இயற்கையான வளம் என்று எதுவுமே கிடையாது. ஆனால் அங்கு சுற்றுலா செல்ல மக்கள் அதிக விருப்பம் தெரிவிக்கக் காரணம் அதன் உட்கட்டமைப்புதான். வானுயர்ந்த கட்டடங்கள், தூய்மையான சாலைகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், சூதாட்ட அரங்குகள் போன்றவற்றை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருப்பது இயல்புதான். வாசனை திரவியங்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை வாங்க சுற்றுலா பயணிகள் அதிகமாக விருப்பம் காட்டுவதால், இங்கு ஷாப்பிங் செய்வதற்கான இடங்களும் அதிகம் உள்ளன.

ஒரு காலத்தில் காலராவில் பாதிக்கப்பட்டு பெரும் அழிவை சந்தித்த சிங்கப்பூர், இன்று மருத்துவத்தில் பல நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு சிகிச்சைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். இதுவும் அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வளம் சேர்க்கும் காரணியாக உள்ளது. இந்திய நடிகர் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த், கடந்த 2011ம் ஆண்டு உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – “சிங்கப்பூரை இனி எந்த ரூபத்திலும் யாரும் மிரட்ட முடியாது”.. கம்பீரத்துடன் உருவாகிறது “நான்காவது தற்காப்புப் படை” – செம!

சிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும். இந்த சாலைகள் ஒரு இடத்தில் கூட குண்டும் குழியுமாக இருக்காது. சாலையில் வாகனங்கள் பயணிப்பதில் தொடங்கி அனைத்துப் பணிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. தென்கிழக்காசியாவில் சிறந்த வான்வழி போக்குவரத்து வழங்கும் நாடாகும் சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையம் உள்ளது. 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களை இந்த விமானநிலையம் இணைக்கிறது.

சிங்கப்பூருடன், தமிழர்களுக்கு ஒரு நெருக்கமான உறவு எப்போதுமே உண்டு. சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களின் பெரும்பகுதியினர் நிச்சயம் தமிழர்கள். அதனால்தான் அங்கு அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது, அத்துடன் தமிழ் வளர்க்கும் சங்கங்களும் உள்ளன. பள்ளிகளில் கூட தமிழர்களின் பிள்ளைகள் தங்கள் தாய்மொழியைக் கற்க வசதி செய்துதரப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் என தமிழ் திரைத்துறைச் சார்ந்த பல நிகழ்ச்சிகளும் சிங்கப்பூரில் நடக்க, அங்கிருக்கும் தமிழர்கள்தான் முக்கியக் காரணம்.

தமிழினத்திற்கு வரும் பிரச்னைகளுக்கு குரல்கொடுக்க சிங்கப்பூர் ஒருபோதும் தவறில்லை. இலங்கைப் போரின் போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த உலகத் தலைவர்களில் லீ குவான் யூவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் அதீத வளர்ச்சிக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், இன்றும் அது வெளிநாட்டினரின் சொர்க்க பூமியாக மட்டுமே உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சிங்கப்பூரில் எந்த வெளிநாட்டு நிறுவனம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், யார் வேண்டுமானாலும் சென்று படிக்கலாம், வேலை பார்க்கலாம் என ஒரு திறந்தவெளி பொருளாதார உத்தியை அந்நாடு கடைபிடித்து வருகிறது. ஆனால் அந்நாட்டினரைப் பொறுத்தவரை இலவசம், மானியம் என்ற எந்த சலுகைகளும் கிடையாது. கல்வி, மருத்துவம் என அடிப்படை தேவைகளைப் பெற பணம் வேண்டும்.

வேலை வாய்ப்பில் வெளிநாட்டவருக்கே முன்னுரிமை. திறமைசாலிகளை இருகரம் நீட்டி வரவேற்பதாகக் கூறும் சிங்கப்பூர், சொந்த நாட்டில் உள்ள திறமைசாலிகளை கொண்டாடத் தவறிவிட்டதாக ஒரு சார்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதனால்தான் வெளிநாட்டவர்கள் மீது சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தங்களது வேலை வாய்ப்பை அவர்கள் தட்டிப்பறிப்பதாகத் கருதத் தொடங்கிவிட்டனர். அதனால் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதலும் அங்கு அதிகரித்துள்ளது.

என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்த வல்லரசு நாடாக இருந்தாலும், ஊடக சுதந்திரம், கருத்துரிமை போன்றவை இங்கு இல்லை. தமிழ் உள்ளிட்ட பல மொழி தொலைக்காட்சி சேனல்களும், வானொலி பண்பலைகளும் இங்கு உள்ளன. ஆனால் அவை அரசின் தணிக்கைக்கு பிறகே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சூழல் உள்ளது.

எது எப்படி இருந்தாலும்,”ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !” எனப்பட்ட சிங்கப்பூர், ‘பொருளாதாரப்புலி’ என்கிற பெயரை சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்குள்ளாகவே எட்டியது என்பதுதான் உண்மை. இதன்மூலம் எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்துக் காட்டியுள்ளது சிங்கப்பூர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts