சிங்கப்பூரில் உள்ள Noveno Specialist சென்டரில் உள்ள வாஸ்குலர் & இன்டர்வென்ஷனல் சென்டர் எனப்படும் கிளினிக்கை இயக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் போது, ஒரு பெண் அங்கு புழக்கத்தில் இருந்த கிட்டத்தட்ட $5,50,000 பணத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
அந்த கிளினிக்கில் பணிபுரிந்து வந்த அவரிடம் ஒப்படைக்கப்பட்ட “முன் கையொப்பமிடப்பட்ட” வெற்று காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் $1,55,000 பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இந்நிலையில் 47 வயதான Fauziah Mat Perlam என்ற அந்த பெண்மணி, கடந்த வாரம் வியாழன் (ஏப்ரல் 21) அன்று, அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இறுதியில் அவருக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றங்கள் நடந்தபோது ஃபௌசியா தி வாஸ்குலர் & இன்டர்வென்ஷனல் குழுமத்தின் நிர்வாக மேலாளராக இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது. அவர் பிப்ரவரி 23, 2015 முதல் டிசம்பர் 4, 2020 வரை அங்கு பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துணை அரசு வக்கீல் மெலினா செவ் கூறுகையில், அந்த கிளினிக்கின் நிதி, கணக்குகள் மற்றும் பொது அலுவலக நிர்வாக விஷயங்கள் அனைத்திற்கும் ஃபவுசியா தான் பொறுப்பாளியாக இருந்தார் என்று கூறினார்.
கிளினிக் வரும் நோயாளிகளிடமிருந்து பணம் வசூலித்தல், விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்துதல் மற்றும் ஒவ்வொரு மாத இறுதியிலும் நிறுவனத்தின் வருவாயை வங்கியில் செலுத்துதல் ஆகியவை அவருடைய பணியில் அடங்கும்.
மருத்துவ இயக்குனரின் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களால் பரிவர்த்தனை பாதிக்கப்படாமல் இருக்கவும், விற்பனையாளர்களுக்கு உடனடியாக பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும் முன் கையொப்பமிடப்பட்ட காசோலைகள் பௌசியாவிடம் வழங்கப்பட்டன.
ஆனால் அவர் அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு லட்சக்கணக்கான வெள்ளியை மோசடி செய்துள்ளார்.