SINGAPORE: சில சமயங்களில், நாம் எதிர்பார்க்காத சில விஷயங்கள், எதிர்பார்க்காத நேரத்தில் நடந்துவிடும். அப்படி நடந்த விஷயம் ஒன்று, சிங்கப்பூரில் இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதி நெல்சன் ஹோ மற்றும் ஜாஸ்மின் டியோ. இதில், கர்ப்பமாக இருந்த ஜாஸ்மினுக்கு கடந்த ஆக.24ம் தேதி காலை 7 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது கணவர் நெல்சன், Tada ஆப் மூலம் தனியார் கார் ஒன்றை புக் செய்தார்.
டாக்சியை விக்டர் ஆல்பர்ட் என்பவர் ஓட்டி வந்தார். நிமிடங்கள் செல்ல செல்ல வலி இன்னும் கடுமையானதால், காரிலேயே ஜாஸ்மின் அலறித் துடித்தார். காலை 8.30 மணியளவில், கார் Bukit Batok சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது.
இதனால், போக்குவரத்து விதிகளை மீறி, பேருந்து வழித்தடத்தில் டாக்சியை இயக்கி வேகமாக சென்றார். எனினும், ஜாஸ்மினின் பனிக்குடம் உடைய, காரிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் 3 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை அவருக்கு பிறந்தது.
அவர்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன், காரை விட்டு வேகமாக இறங்கி ஓடிய டிரைவர் விக்டர், மருத்துவர்களை கூச்சலிட்டு அழைத்தார், இதையடுத்து காரை நோக்கி விரைந்த மருத்துவ குழு, குழந்தையை கழுத்தை சுற்றியிருந்த தொப்புள்கொடியை அறுத்து அப்புறப்படுத்தினர்.
பிரசவ வலியால் துடித்த ஜாஸ்மினுக்கு பக்க துணையாக இருந்து, துரிதமாக செயல்பட்டு தாயையும், சேயையும் காப்பாற்றிய டிரைவர் விக்டர் ஆல்பர்ட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.