விமான பயணம் அதிலும், வெளிநாட்டு பயணம் என்பது தற்போது உள்ள இந்த நவநாகரீக உலகத்தில் மிகவும் எளிதான ஒன்றாக தற்போது மாறிவிட்டது. இருப்பினும் இந்த பெருந்தொற்று காலத்தில் பலரால் தங்களுடைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணத்தை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் பெரிய அளவில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்களால் பெருந்தொற்று அச்சத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை.
இதையும் படியுங்கள் : “மயில்களின் தாக்குதலை தடுக்க கண்ணாடிகள் மற்றும் அறிவிப்பு பலகைகள்”
இந்நிலையில் இந்த விமான பயணங்களின்போது நாம் கொண்டு செல்லும் baggage எனப்படும் பொருட்களை தவறவிடும்பட்சத்தில் அவற்றை எப்படி மீண்டும் பெறலாம் என்பதை குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
மூன்று விதத்தில் தொலைந்துபோகும் பொருட்கள்..
விமான நிலையங்களில் நமது சிறிய கவனக்குறைவால் சில சமயங்களில் நாம் கொண்டு வரும் பொருட்களை தவறவிடுவது உண்டு, மேலும் பன்னாட்டு விமான பயணம் மேற்கொள்ளும்போதும் நாம் பயணிக்கும் விமான சேவை நிறுவனங்கள் நாம் புறப்படும் நாடுகளில் இருந்து சில சமயங்களில் பொருட்களை ஏற்றாமல் வருகின்றனர். அதே போல சில சமயங்களில் பயணிகள் ஒன்றுபோல தோற்றமளிக்கும் பொருட்களை மாற்றி எடுத்துச்செல்கின்றனர். இதுபோல மூன்று வகைகளில் பொருட்கள் தொலைந்துபோக வாய்ப்புள்ளது.
தொலைந்த பொருளை எப்படி திரும்ப பெறுவது..
நாம் விமான டிக்கெட் பெற்று உள்ளே செல்லும்போது அடுத்தபடியாக போர்டிங் பாஸ் எடுக்க செல்வோம். அப்படி செல்லும்போது நமது Baggageகளை பெற்றுக்கொண்டு அதற்கு ஒரு டேக் நமக்கு அளிக்கப்படும். பெரும்பாலும் நமது விமான டிக்கெட் அல்லது பாஸ்ப்போர்ட்டுடன் இந்த டேக் இணைக்கப்படும். அதில் தான் அந்த பொருளின் சொந்தக்காரராகிய நம்முடைய தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று முறைகளில் நமது பொருட்கள் விமான நிலையத்திற்குள் தொலைந்துபோகும் பட்சத்தில் முதலில் நாம் பயணம் செய்த விமான சேவை நிறுவனத்தை அணுக வேண்டும். அவர்களிடம் நமது பொருள் தொலைந்தது குறித்து கைப்பட கடிதம் ஒன்றை எழுதித்தரவேண்டும். அந்த கடிதத்தை பெற்றபிறகு அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து அவர்கள் நமக்கு ஒரு ரசீதை கொடுப்பார்கள்.
இதனை தொடர்ந்து அந்த பொருளை உரியவர்களிடம் குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டுபிடித்து அந்த விமான சேவை நிறுவனம் ஒப்படைக்கும். மேலும் தொலைத்தவர் வாங்க வரமுடியாதபட்சத்தில் உரிய கடிதத்தின் மூலம் அவர் வேறு ஒருவரை அந்த பொருளை வாங்க அனுமதிக்க முடியும். இந்த வகையில் தான் தொலைத்தப் பொருள்களை நம்மால் பெறமுடியும்.
இருப்பினும் விமான பயணங்களின்போது மக்கள் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது.