TamilSaaga

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானம்.. கேபினில் இருந்து அலறிய சப்தம்.. 30,000 அடி உயரத்தில் தகதகவென பற்றிய தீ.. 10 நிமிடத்தில் அனைவரையும் கலங்க வைத்த “சம்பவம்”!

விமானத்தில் தீப்பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. சாலை வழி, ரயில் வழி, கடல் வழி பயணங்களை விட பாதுகாப்புக்கு மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வழி ஆகாய மார்க்கமாக செல்லும் விமானங்களுக்கு தான்.

தொழில் நுட்பங்கள் பெருகிய பிறகு, விமான விபத்துகளின் எண்ணிக்கையும் 98 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போதே, அதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது என்பது அவ்வப்போது ஏற்படுவதை என்னவென்று சொல்வது!?

பல்லாயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, திடீரென விமான பணிப்பெண் உங்களிடம், ‘விமானத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. அனைவரும் உடனே சீட் பெல்ட் அணியுங்கள்’ என்று சொன்னால், உங்களுக்கு எப்படி இருக்கும்? கையில் 6 வயதில் உங்கள் மகனுடனும், ஒன்றரை வயதில் தன் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தையுடனும் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது, பணிப்பெண் இவ்வாறு சொன்னால் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அவ்வப்போது ஏற்பட்டிருப்பது என்பது தான் அதிர்ச்சிகரமான உண்மை. அதற்கு மிக அண்மையில் நடந்த இந்த சம்பவமே ஒரு சாட்சி.

கடந்த மே.9ம் தேதி மாலை 7 மணிக்கு, வழக்கமான பரபரப்புடன் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E-1007 என்ற விமானம் கிளம்பியது. ஆனால், சில மணி நேரத்தில் விமானம் திருச்சியில் இறங்காமல் இந்தோனேசியாவில் தரையிறங்கியது. முதலில் தொழில்நுட்ப காரணங்களால், இந்தோனேசியாவில் விமானம் தரையிறக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், மறுநாள் இண்டிகோ நிறுவனம் இதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதில், “திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தின் கேபின் பகுதியில் தீப்பற்றி எரியும் வாசனை வந்ததையடுத்து, விமானிகள் உரிய முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றி அருகில் உள்ள இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.

இதையடுத்து, அங்கு காத்திருந்த தொழில்நுட்ப குழு விமானத்தை சோதனையிட்டனர். முதற்கட்டமாக, அதில் எந்த சிக்கல்களும் கண்டறியப்படவில்லை. பயணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

விமானம் புறப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் கழித்து இந்தோனேசியாவின் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, கேபினில் இருந்து கருகும் வாசனை வெளிவந்ததால், விமானம் வேகமாக கீழிறங்கிய காட்சி ஃபிளைட் ரேடாரில் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் பல தமிழர்களும், இதர பயணிகளும் இருந்தனர். தீப்பற்றியும் எரியும் வாடை காரணமாக, விமானம் இந்தோனேசியாவில் தரையிறங்குகிறது என்று ஃபிளைட் கேப்டன் அறிவித்ததில் இருந்து, விமானம் லேண்ட் ஆகி அவர்கள் வெளியே இறங்கியது வரை அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இதற்கு முன்பு, கடந்த 2022ம் ஆண்டு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில், வெறும் 24 நாள்களில் 9 முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அதன் பல்வேறு விமானங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டன.

அதேபோல், இதே இண்டிகோவின் ஷார்ஜா-ஐதராபாத் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும், ஏர் இந்தியா கோழிக்கோடு-துபாய் விமானம் மஸ்கட் நோக்கி திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிறகு டிஜிசிஏ இதுகுறித்து நடத்திய விசாரணையில், விமானங்களில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இதனால், இனி அனைத்து விமானங்களும் சான்றளிக்கப்பட்ட ஊழியர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே புறப்பட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.

அதன்படி, பேஸ் ஸ்டேஷன் (அடிப்படை நிலையம்) மற்றும் டிரான்ஸிட் (போக்குவரத்து) நிலையங்களில் இருக்கும் ஒரு விமானம், புறப்படுவதற்கு முன், ஊழியர்களால் சான்றளிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்படும். தங்கள் நிறுவனத்திடம் இருந்து முறையான அங்கீகாரத்துடன் “விமானப் பராமரிப்புப் பொறியாளர் பி1/பி2 உரிமம்” என்ற உரிமத்தை பெற்ற ஒரு ஊழியர் சான்றளிக்க வேண்டும். அத்தகைய என்ஜினியர்கள் இல்லாதபட்சத்தில், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் வெகு விரைவில் கட்டாயம் நியமித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை விமானங்களில் பயணத்தின்போது உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே அறிவுறுத்தப்பட்டது.

அப்படி இருந்தும், கடந்த வாரம் இண்டிகோ விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது, பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து கேள்விக்குறியாக்கியுள்ளது. சிங்கப்பூருக்கு செல்பவர்கள் வெறும் பயணிகள் மட்டும் அல்ல. தனது பெற்றவர்களைப் பிரிந்து, மனைவியைப் பிரிந்து, பிள்ளைகளை பிரிந்து, சொந்த ஊரை விட்டு, சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, குடும்பத்தை பிரிந்து பல கனவுகளுடனும், ஏக்கத்துடனும் பல உயிர்கள் பயணிக்கும் இடம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts