தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள் இருவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ‘ஓமைக்ரான்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கான எல்லை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : “மொத்தம் 23 நாடுகளில் Omicron பாதிப்பு உள்ளது”
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது ஓமைக்ரான் வைரஸ். இதன் காரணமாக ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனையை கட்டாயப்படுத்தியுள்ளது சிங்கப்பூர் அரசு. வெளிநாடு செல்வோருக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வந்த பயணிகள் இருவருக்கு ‘ஓமைக்ரான்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவ்விருவரும் நேற்று சிங்கப்பூர் வந்திறங்கினர்.
இங்கு வந்திறங்கியவுடன் அவர்கள் ‘பிசிஆர்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவு வெளிவரும்வரை தனிமைப்படுத்தப்படுவதற்காக அவர்கள் பிரத்தியேக இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டனர்.
சமூக பரவல் காரணமாக அவர்களுக்கு தொற்று பரவியதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர்கள் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட அவர்களுக்கு இருமல் உள்ளிட்ட இலேசான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் மீண்டும் ‘பிசிஆர்’ பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இருவருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த மற்ற 19 பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தீவிரம்
இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கான எல்லை நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. உள்ளூரில் இதுவரை ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவைப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் வந்திறங்குவோர் கூடுதல் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, சிங்கப்பூர் வந்திறங்கிய மூன்றாவது, ஏழாவது நாள்களில் விரைவுப் பரிசோதனை மையத்தில், மேற்பார்வையின் கீழ் தாங்களாகவே ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டு்ம்.
சிங்கப்பூருக்கு புறப்படும் முன்பும், வந்திறங்கிய பின்பும் பயணிகள் கட்டாயம் கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, சிங்கப்பூருக்கு வரும் அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகள், சிங்கப்பூர் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கோவிட் பரிசோதனை செய்து கொண்டு, ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
தொற்று குறைவாக கருதப்படும், ஹாங்காங், மக்காவ், சீனா, தைவான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவோர், புறப்பாட்டிற்கு முன் கோவிட் பரிசோதனை செய்து கொள்ள தேவை இல்லை. சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் போதும் என அரசு அறிவித்துள்ளது.
ஓமைக்ரான் வைரஸ் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியாது என்பதால் சிறிது காத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் அரசிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சிங்கப்பூர் டியூக் எம்யூஎஸ் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் ஆஷ்லே செயின்ட் ஜான் கூறுகையில், பீதி ஏற்படுத்தக் கூடிய வகையிலான வைரஸாக இது தெரியவில்லை. எனவே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிதானமாகத்தான் முடிவெடுக்க வேண்டும். பயணக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே இதை தடுத்து விட முடியும் என்று தெரியவில்லை என்றார்.
இதே மருத்துவ பள்ளியின் பேராசிரியர் ஊய் இங் இயாங் கூறுகையில், எல்லைகளை மூடுவதும், முக்கிய பகுதிகளுக்கு தடை விதிப்பதும் தீர்வாகாது. அது தேவையற்றதும் ஆகும். ஓமைக்ரான் ஏற்கனவே பல பகுதிகளுக்கும் பரவி விட்டது. டெல்டா வைரஸ் போல வேகமாக பரவும் தன்மை கொண்டதால், எல்லைகளை அடைத்து வைத்தால் மட்டும் அதை தடுக்க முடியாது. தடுப்பூசி போடுவதை நாம் அதிகரிக்க வேண்டும். அதுதான் சிறந்த தற்காப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். தடுப்பூசி போடப்பட்டால், சாதாரண பாதிப்போடு நாம் குணப்படுத்தி விட முடியும். இல்லாவிட்டால்தான் அது தீவிரப் பாதிப்பை கொடுக்கும் என்றார், இயாங்
அதிக விகிதங்களில் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட போர்ச்சுக்கல் நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவல் பாதிப்பினை குறைவாகவே ஏற்படுத்தி உள்ளதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இயோங் தெரிவித்துள்ளார்.
“புதுவகை கிருமி பரவும் வேகம், தீவிரம் குறித்தும் அதற்கெதிராக தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தும் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,” என வர்த்தக, தொழில் அமைச்சரும், கோவிட்-19 தொற்றுக்கெதிரான பணிக்குழுவின் இணைத் தலைவர் கான் கிம் யோங் கூறினார்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேருக்கு முழுமையான தடுப்பூசி போடப்பட்டு விட்டது. இது உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதங்களில் ஒன்றாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா பரவலும் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் ஹோட்டல்களில் மக்கள் சென்று சாப்பிட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்தது.
மெளன்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனை நோய் பரவல் பிரிவு நிபுணர் டாக்டர் லியாங் ஹோ நாம் கூறுகையில், “மருத்துவ வசதிகளை சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறோம். நாங்கள் அலட்சியமாக இல்லை, கவனமாகவே இருக்கிறோம். அதேசமயம் பீதி அடையத் தேவையில்லை” என்றார் இயாங்.
கடுமையாகும் பரிசோதனை
விமானப் பயணிகள்
- விமானம் வழியாக சிங்கப்பூர் வரும் அல்லது சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகள் அனைவரும் புறப்பாட்டிற்குமுன் இரு நாள்களுக்குள் பரிசோதனை செய்துகொண்டு ‘கோவிட்-19 தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்
- சிங்கப்பூருக்கு வருபவர்கள், இங்கு வந்திறங்கியதும் பிசிஆர் சோதனைக்கு உட்பட வேண்டும்
- ‘விடிஎல்’ விமானங்களில் வருவோர், இங்கு வந்தபின் 3ஆம், 7ஆம் நாள்களில் விரைவுப் பரிசோதனை மையங்களில் ஏஆர்டி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
எல்லைப்புற முன்களப் பணியாளர்கள்
- விமான நிலைய, எல்லைப்புற முன்களப் பணியாளர்களுக்கு வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை
- ஏஆர்டி சோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தால் பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்த வேண்டும்
தனிமைப்படுத்தப்படுவர்
- ‘ஓமைக்ரான்’ தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரும் அக்கிருமி தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவோரும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்படுவர்
- நெருங்கிய தொடர்புடையோர், பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்