சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) பல தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் இரண்டு நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளை ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வரை வேலை செய்ய வைத்த அவலமும் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட வேலை நேர வரம்புகளுக்கு அப்பால் தங்கள் அதிகாரிகளை வேலை செய்ய நியமித்ததற்காக, MOM வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் எரவான் பாதுகாப்பு சேவைகள் மற்றும் Volantra பாதுகாப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களில் வேலை செய்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிப்ரவரி மற்றும் மார்ச் 2021-க்கு இடையில் பல சமயங்களில் ஒரு நாளில் 17 முதல் 20 மணி நேரம் வரை, மீண்டும் மீண்டும் ஷிப்ட் போடப்பட்டு வேலை செய்ததாக கண்டறியப்பட்டது. “வேலைவாய்ப்புச் சட்டத்தில் (EA) குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகள் பொருந்தாத வரை, தனியார் பாதுகாப்பு முகவர்கள் தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் அனுமதிக்கக்கூடாது=” என்று MOM இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 14) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான அமலாக்க நடவடிக்கைகளில், MOM கிட்டத்தட்ட 200 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை வேலைவாய்ப்பு சட்டத்துடன், குறிப்பாக வேலை நேரம் மற்றும் கூடுதல் நேர வரம்புகளுக்கு இணங்குகிறதா என்பதைக் கண்டறிய ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஏறக்குறைய 36 சதவிகித ஏஜென்சிகள் விதி மீறல்கள் செய்ததாக கண்டறியப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை சிறியவை என்றாலும், அனுமதிக்கப்பட்ட வேலை நேர வரம்புகளுக்கு அப்பால் தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை வேலை செய்ய நியமித்ததற்காக 15 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக MOM கூறியது.
வேலைவாய்ப்பு சட்ட மீறல்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக www.mom.gov.sg/report-ea-violation-ல் புகார் தெரிவிக்க வேண்டும். அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று MOM தெரிவித்தது.