இன்று காலை(ஆகஸ்டு 26) ஆயர் ராஜா விரைவு சாலையில் பந்தய கார் மற்றும் டாக்ஸி மோதிக்கொண்டதில் டாக்ஸி ஓட்டுனர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மரினா கரையோரத்தில் உள்ள விரைவு சாலையில் இந்த விபத்தானது காலை சுமார் 9.30 மணியளவில் நடைபெற்றதாக காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார், ஆம்புலன்ஸின் உதவியுடன் டிரைவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த விபத்தை படம்பிடித்த ஒரு நபர் சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். அதில் வரும் அரை நிமிட வீடியோவில் காரின் சக்கரம் உட்பட, மற்ற பாகங்கள் சாலையின் நான்கு புறவும் சிதறி கிடைக்கின்றது. மேலும் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 56 வயதான டாக்ஸி ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுய நினைவுடன் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மற்றொரு டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததாக கூறினர். இதேபோன்று இன்று காலை 9.10 மணியளவில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு கார் விபத்துக்குள்ளானது என போலீசார் தெரிவித்தனர். அதில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 53 வயதுடைய பெண்மணி ஆகிய இருவரும் இருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் இரண்டு விபத்தையும் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.