திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆனது தமிழ்நாட்டில் இயங்கும் சுறுசுறுப்பான விமான நிலையம் ஆகும். குறிப்பாக இங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு தினசரி விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
அதிகப்படியான பயணிகளின் எண்ணிக்கையை கையாளுவதற்கு ஏதுவாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு 1200 கோடி ரூபாய் இந்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட புதிய டெர்மினலை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளார். மிகவும் சுறுசுறுப்பான நேரங்களில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும் வகையில் பல்வேறு வசதிகளுடன் புதிய டெர்மினல் கட்டப்பட்டுள்ளது.மேலும் சோலார் பேனல்களுடன் கட்டப்பட்டுள்ளதால் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது.இதன் வடிவமைப்பு இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். டெர்மினல் இன் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்துடன் கூடிய பிரம்மாண்ட நுழைவு வாயில் அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த டெர்மினல் உபயோகத்திற்கு வந்தால் சிங்கப்பூர் மற்றும் திருச்சிக்கு இடையே விமான சேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் விமான கட்டணங்களும் குறையுமா? என ஆவலும் சர்வதேச பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.