சிங்கப்பூர் எனும் தேசம் மாயை நிறைந்த ஒரு உலகம் எனலாம். அந்த தேசம் உங்களிடம் உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால், உங்களை நீங்கள் கற்பனை செய்யாத அளவுக்கு கூட வளர்ந்துவிடும். ஆனால், கடமைக்கு கடமையைச் செய்பவராக இருந்தால், பணம் உங்களால் சம்பாதிக்க முடியும்.. ஆனால், சில காலம் கழித்து திரும்பிப் பார்த்தால், உங்களிடம் எதுவும் இருக்காது.
உழைப்பு, அர்ப்பணிப்பு, சேமிப்பு என்ற இம்மூன்றும் ஒருசேர இருப்பவர்கள் தமிழர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.. சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்களின் முதலாளிகள் சொல்கிறார்கள். ஆம்! பெரும்பாலான சிங்கை நிறுவனங்கள், தமிழக ஊழியர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்…
1, எந்த வேலை கொடுத்தாலும், தயங்காமல் அதைச் செய்வார்கள்
2, எனது வேலை இதுதான், இவ்வளவு நேரம் தான் வேலை பார்ப்பேன் என்ற எந்த அளவுகோலும் இருக்காது.
3, கொடுத்த வேலையை 100 சதவிகிதம் சரியாக முடிக்கும் திறன் உள்ளவர்கள்.
ஆகிய இந்த காரணங்களால் தான் தமிழக ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறுகின்றனர்.
இதில், ஆச்சர்யம் என்னவெனில், 90 சதவிகித சிங்கை நிறுவனங்கள், தமிழக ஊழியர்களுக்கே முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறுகிறார்கள். மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் மணிக்கணக்கில் உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் தமிழர்களிடம் உள்ள தொழில் அறிவும், அதனை முழுமையாக செய்து முடிக்கும் திறனும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
இது எல்லாவற்றையும் தாண்டி, குடும்பத்தை பார்க்காமல் மாத கணக்கில், சிலர் வருட கணக்கில் சிங்கப்பூரில் இருந்தாலும், அந்த மன அழுத்தத்தைக் கூட கட்டுப்படுத்தி, அதனால் வேலையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் தமிழருக்கு நிகர் தமிழர்களே என்கின்றனர்.
ஆனால், மறுபக்கம் எவ்வளவு உழைத்தாலும் சில நிறுவனங்களில் அதற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது. கடுமையாக உழைப்பைக் கொட்டினாலும், பாராட்டுகிறார்களே தவிர, ஊதியத்தில் பெரிதாக எந்த மாற்றம் கிடைப்பதில்லை என்று சில தமிழக ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதுபோல், சிங்கப்பூரர்களுக்கும், இங்குள்ள PR-களுக்கும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக, சிங்கை அரசு, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு S-pass கொடுப்பதில் கெடுபிடிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது S-pass வாங்குவது ரொம்பவே கடினம்.
அதேசமயம், முதலாளிகளும் S-pass-ல் ஆள் எடுக்க ரொம்பவே தயங்குகின்றனர். ஏனெனில், சிங்கப்பூர் அரசின் விதிப்படி, S-pass-ல் வேலைக்கு வருவோருக்கு 2,500 வெள்ளி சம்பளம் கொடுக்க வேண்டும். E-Pass-ல் வருவோருக்கு 4,500 வெள்ளி சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் சம்பளத்தை குறைத்து தான் தருகிறார்கள். இதனால், S-pass-ல் வேலைக்கு வரும் ஒருவர், ஒரு வருடம் நன்றாக உழைத்து, வேலையை கற்றுக் கொண்டு, இப்போது அதிக Increment கேட்கிறார் என்றால், அங்கு தான் சிக்கல் ஏற்படும்.
நிச்சயம் ஊழியர்கள் கேட்கும் சம்பள உயர்வை முதலாளியால் தர முடியாது. தர முடியாது என்பதை விட, ‘இவ்வளவு உயர்வு கொடுக்கணுமா’ என்று யோசிப்பார். அவர் சொல்லும் உயர்வு அந்த ஊழியருக்கு கட்டுப்படி ஆகாது. அவர் தனது வேலை திறமைக்கு இந்த உயர்வு மிகவும் குறைவு என்று நினைப்பார். இதனால், ‘எங்கே MOM-ல் ஊழியர் புகார் கொடுத்துவிடுவாரோ’ என்று முதலாளிகள் அஞ்சுகின்றனர். இதனாலேயே S-pass-ல் ஆட்கள் எடுக்க யோசிக்கின்றனர்.
வேலையும் காட்டுத்தனமாக செய்ய வேண்டும், ஊதியமும் மினிமமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை சிங்கை நிறுவனங்கள் சற்று தளர்த்திக் கொண்டால், தமிழர்களை விட ஒரு பெஸ்ட் சாய்ஸ் அவர்களுக்கு இருக்க முடியாது.