சிங்கப்பூரில் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால் எல்லா மதத்தினருக்கும் கோவில்கள் உண்டு. இந்த வருட ஆரம்ப முதல் கோவில்களில் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் விதிமுறைகளை கடுமையாக்கி கோவில் நிர்வாகங்கள் நடைபெறப்பட்டு வருகின்றன. கோவில்களில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.
உண்டியலில் பணம் திருடுவது மட்டுமல்லாமல் கோவிலுக்கு வருபவர்களின் உடமைகளை திருடும் சம்பவமும் அதிகரித்து வருகின்றது. இத்தகைய சம்பவங்கள் கிறிஸ்துவ சர்ச்சுகள், பள்ளிவாசல்கள், சிங்கப்பூர் மக்கள் வழிபடும் தாவோயிச கோவில்களில் நடைபெற்றதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே உண்டியலுக்கு எளிதில் திறக்க முடியாத வண்ணம் பாதுகாப்பான கூட்டுகளை பயன்படுத்துவது, கோவிலின் பாதுகாப்பிற்காக ஊழியர்களை பணியில் அமர்த்துவது போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழிபாட்டுத்தலங்கள் ஏற்கனவே கையில் எடுத்துள்ளன.
மேலும் திருட்டுகளை குறைக்கும் விதமாக தேவாலயங்களில் ஒவ்வொரு சேவை முடிந்தவுடனும் நன்கொடை பெட்டிகள் பத்திரமாக அப்புறப்படுத்தப்படுகின்றன. மேலும் சந்தேகத்திற்கிடமாக உலாவும் நபர்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு நன்கொடை செலுத்தும் பக்தர்கள் பணமாக செலுத்துவதற்கு பதிலாக மின்னணு பரிவர்த்தனை செய்யும் பொழுது திருட்டுச் சம்பவங்களை குறைக்கலாம் என கோவில் நிர்வாகங்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளன. எனவே இனிவரும் காலகட்டங்களில் திருட்டு சம்பவங்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.