2020 மற்றும் 2021ம் ஆண்டின் வரலாற்றுப் பக்கங்களை எழுத விரும்பும் எவருமே தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது இந்த பெருந்தொற்றுநோய். நாணயத்தின் பக்கங்கள் போல 2020, 21 என்றாலே கொரோனா என்று என்னும்படி இந்த ஆண்டுகள் மாறிப்போனது வருத்தமானது தான். இந்த ஆண்டுகளோடு முடிந்து விடுமா? முடிந்துவிட்டல் நலம்தான்‘ எனக்கு என்ன?’, ‘நான்’, ‘என் பாதை’, எனும் மனநிலையில் போய்க்கொண்டிருந்த ஒட்டுமொத்த உலகத்தையும், ஒரே குடையில் பயந்து நிற்க வைத்துவிட்ட இந்த நோய் ஏற்படுத்தியிருக்கும் இழப்புகள் என்பது வார்த்தைகளில் வடிக்க முடியாதவை தான்.
இதன் பின்னணி, காரணம், விளைவுகள், என ஆயிரம் ஆயிரம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், இது போன்ற பேரிடர்கள் இதுவரை வரலாற்றில் ஏற்படுத்திய வடுக்களை திரும்பிப் பார்க்க விழைகிறேன். வெறுமனே தகவல்களுக்காக மட்டுமல்ல, இதுபோன்ற கடந்தகால பேரிடர்களை தாண்டி பயணித்து, தடம் பதித்த உலகம் இந்த முறையும் மீண்டுவிடும் எனும் நம்பிக்கையை நம்முள் விதைத்து கொள்வதற்காகவும் தான். அப்படி வரலாற்றை புரட்டிப்போட்ட, வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கொள்ளை நோய்களை பற்றிய பதிவுகளும், பாதைகளும் இங்கே.
வரலாற்றுக்கு முந்தைய தொற்றுநோய் : (கிமு 3000)
தொற்று நோய்களுக்கும் சீனாவுக்கும் அதிக பற்று போல என்று எண்ணும்படி வரலாறுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் கொள்ளைநோய் சீனாவில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடகிழக்கு சீனாவில் ஹாமின் மாங்கா என்னுமிடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின் போது, ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நடுத்தர மற்றும் இளவயதுடையவர்கள் என்றும், தொற்றுநோய் விரைவாக பரவியதால் அடக்கங்களுக்கு நேரமின்றி அப்படி புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதற்குப் பிறகு அந்த பகுதிகளில் யாரும் வசிக்கவில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
ஏதென்சியின் கொள்ளைநோய் : [கி.மு. 430]
கிமு 430 ஏதென்ஸ்- பார்த்தா போர் தொடங்கிய சிறிது காலத்திலேயே ஒரு கொள்ளை நோய் ஏதென்ஸில் பரவி ஐந்து ஆண்டுகள் நீடித்ததாகவும், ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் அந்த நோயால் இறந்தனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேக்க வரலாற்று ஆசிரியர் துசிடிடிஸ் அவர்களின் வார்த்தையில்,’ நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் கூட தலையில் திடீரென தோன்றும் கடுமையான வெப்பம், கண்கள் சிவத்தல், வீங்குதல், உள் நாக்கு தொண்டையில் ரத்தம் வடிதல், இயற்கைக்கு மாறான மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர்’ என்று அந்த தொற்றுநோய் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்டோனைன் தொற்றுநோய் : [கி.பி 165- 180 ]
உரோமை வீரர்கள் பார்த்தியாவிற்கு எதிரான போர் முடிந்து, தங்களின் முற்றுகை பகுதிகளில் இருந்து திரும்பிய போது வெற்றியோடு சேர்த்துக் கொண்டு வந்த தொற்று நோயான பெரியம்மை தொற்றுநோய் தான் அன்டோனைன் தொற்றுநோய் என்று சொல்லப்படுகிறது. மான்சிஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் ரோமன் வரலாற்று மூத்த விரிவுரையாளரான ஏப்ரல் புட்சி அவர்களின் கூற்றுப்படி, இந்த கொள்ளை நோயால் ரோமப் பேரரசின் மட்டும் 50 லட்சம் மக்கள் வரை இறந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிப்ரியன் தொற்றுநோய் : [கிபி 250- 271]
உலகத்தின் முடிவு என்றே அஞ்சப்பட்ட இந்த தொற்று நோயால் ரோமில் மட்டும் ஒரு நாளைக்கு 5000 பேர் வரை இறந்திருக்கின்றனர். கொத்துக் கொத்தாக செத்து விழுந்த மனிதர்களின் உடல்கள் அடர்த்தியான சுண்ணாம்புக் கலவை கொண்டு மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
ஜஸ்டீனியன் தொற்றுநோய் : [கி.பி 541 -542]
பைசண்டைன் பேரரசின் அழிவுக்கு ஆரம்பமாக இந்த தொற்று நோய் கருதப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பா வரை பரவியிருந்த அந்த பேரரசின் ஆட்சிப் பகுதி மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் பேர் இந்த தொற்று நோயால் இறந்ததாக குறிக்கப்பட்டுள்ளது.
கருப்பு மரணம் : [கி.பி 1346- 1353]
ஐரோப்பாவின் வரலாற்றுப் போக்கையே மாற்றியதாக சொல்லப்படும் இந்த தொற்று நோய் ஆசியாவில் தொடங்கி ஐரோப்பாவில் அதன் கோர முகத்தைக் காட்டியது.
கோகோலிஸ்ட்லி தொற்றுநோய் : [கி.பி 1545- 1548]
‘வைரஸ் இரத்தக்கசிவு காய்ச்சல்’ என்று அறியப்பட்டுள்ள இந்தத் தொற்று நோய் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டும் 15 மில்லியன் மக்களை கொன்று குவித்துள்ளது. இன்று வரை இந்த தொற்று நோய் ஒரு அச்சுறுத்தலாகவே தொடர்கிறது.
அமெரிக்க தொற்றுநோய்கள் : [கி.பி 16ம் நூற்றாண்டு]
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பெரியம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தொகுப்பு அமெரிக்க தொற்றுநோய்கள் என்று சொல்லப்படுகிறது இவற்றால் இன்கா மற்றும் அஸ்டெக் நாகரிகங்கள் சரிந்ததாக சொல்லப்படுகிறது. மேற்கு அரைக்கோளத்தில் மட்டும் இந்த நோயால் 30% பழங்குடிமக்கள் இறந்து போனதாகவும் தகவல்கள் உள்ளன.
லண்டனின் பெரும் தொற்றுநோய் : [கி.பி 1665-1666]
கி.பி 1300 களில் தொடங்கிய ‘கருப்பு மரணங்கள்’ என்று சொல்லப்பட்ட கொள்ளை நோய்களின் கடைசி மிகப்பெரிய தாக்கம் தான் கிரேட் பிரிட்டனின் லண்டனில் பரவிய தொற்றுநோய்களும் அது விளைவித்த சேதங்களும். 1665 ஏப்ரலில் தொடங்கிய இந்த தொற்று நோய்முடிவடைந்த போது லண்டன் மக்கள் தொகையில் 15% உட்பட ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
மார்செயின் பெரும் தொற்றுநோய் : [கி.பி 1720-1723]
பிரான்ஸ் நாட்டின் மார்செய் நகருக்கு கிழக்கு மத்தியதரைக் கடலில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த கிராண்ட் செயின்ட் ஆண்ட்டோயின் கப்பலில் இருந்து தான் இந்த கொள்ளை நோய் பரவியதா வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதும் நோய் நகருக்குள் பரவி நகரத்தின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 30 சதவீதம் பேரை கொன்றுவிட்டது.
ரஷ்ய தொற்றுநோய் : [கி.பி 1770 1772]
இந்த தொற்று நோய் காலத்தில் மாஸ்கோவில் இதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நோயினால் பாதிக்கப்பட்ட குடி மக்கள் போராட்டங்களை நடத்தி, அது வன்முறையாக மாறி, பெரும் அழிவுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
மஞ்சள் காய்ச்சல் தொற்றுநோய் : [கி.பி 1793-1793]
1793ம் ஆண்டின் முதல் பாதியில் மஞ்சள் காய்ச்சல் தொற்றுநோய் பிலடெல்பியவை[அமெரிக்கா-பென்சில்வேனியா மாநிலத்தின் நகரம்] கடுமையாக தாக்கியது. கொசுக்களால் பரவிய இந்த தொற்று நோயால் அந்தஅந்தப் பகுதியில் அதிக அளவிலான மரணங்கள் நிகழ்ந்தது.
காய்ச்சல் தொற்றுநோய்: [கி.பி 1889-1890]
ரஷ்யாவில் முதலில் பதிவு செய்யப்பட்ட இந்த காய்ச்சல் [இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்] உலகம் முழுவதும் வேகமாக பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றது.
அமெரிக்க போலியோ தொற்றுநோய் : [கி.பி 1916]
உலகம் முழுவதும் இன்றைக்கும் ஒருவித பயத்தையும், பாதுகாப்பு உணர்வையும் தூண்டி எழுப்பும் போலியோ தொற்றுநோய் நியூயார்க் நகரில் தொடங்கியது. அங்கு மட்டும் ஆரம்ப காலத்தில் 27,000 பாதிப்புகளும் 6000 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1954-இல் சால்க் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்படும் வரை அடிக்கடி இந்த தொற்று நோய்கள் அமெரிக்காவில் ஏற்பட்டது.
ஸ்பானிஷ் காய்ச்சல் : [கி.பி 1918-1920]
முதல் உலகப்போர் நாட்களில் பரவிய இந்த காய்ச்சலால் ஏறக்குறைய 500 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு 50 மில்லியன் மக்கள் இறந்தனர்.
ஆசியக் காய்ச்சல் : [கி.பி 1957- 1958]
இந்தத் தொற்றுநோயின் ஆரம்பமும் சீனாதான். பறவைக் காய்ச்சல் வைரஸின் கலவையான வைரஸ்சால் ஏற்பட்ட இந்த காய்ச்சலால் உலகம் முழுவதும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த வரிசையில் இன்னும்.. 1981 இல் தொடங்கி இன்றும் தொடரும் எய்ட்ஸ், 2009 – 2010ல் 6 லட்சம் உயிர்களுக்கு மேல் காவு வாங்கிய H1N1 வைரஸ் காய்ச்சல், 2014 – 2016 ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் தொடங்கி அச்சுறுத்திய எபோலா வைரஸ் தொற்றுநோய், 2015 முதல் இன்றுவரை தொடரும் சிகா வைரஸ் தொற்று, இப்படியாக நாம் வாழும் இந்த நம் உலகம் தன் வரலாற்றின் வழிநெடுகிலும் பலவிதமான தொற்று நோய்களையும் அதனால் விளைந்த பேரழிவுகளையும் சந்தித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.
ஆனால் அதே சமயம் ஒவ்வொரு முறையும் புதுத் தெம்போடும், புதுப் புது கனவுகளுடனும், எழுந்து நிமிர்ந்து இருக்கிறது. அந்த விடா முயற்சியின் விளைவுதான் இன்று நாம் காணும் இந்த வளர்ச்சி அடைந்த உலகம். எனவே இந்தக் கொரோனா தோற்று நோயையும் வெற்றுநோயாக்கி வென்று நிமிரும் நாள் தூரம் இல்லை எனும் நம்பிக்கையோடு பயணிப்போம்.
தகவல்களுடன்
உங்கள் ஆரா அருணா