சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை (ஜனவரி 5) நண்பகல் நிலவரப்படி 805 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் 439 வழக்குகள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களிடையே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதளத்தின் சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் இரண்டு பேர் பெருந்தொற்று காரணமாகி மரணமடைந்துள்ளார்கள். இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் சிக்கல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் 440 Omicron வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழகத்திலும் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 4862 பேர் பெருந்தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2481 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 596 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பல நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மறுஅறிவிப்பு வரும்வரை அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு பயணிகளிடையே, குறிப்பாக தமிழகம் மற்றும் சிங்கப்பூர் இருமார்கமாக விமான சேவை பாதிக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனம் பல ஆண்டுகளாக வெளிநாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வரும் திருச்சி நந்தனா ஏர் டிராவல்ஸ் உரிமையாளரிடம் பேசுகையில் அவர் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், அந்த தகவல்கள் பின்வருமாறு..
“இதுவரை வெளிநாட்டு விமானங்களுக்கான தடை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை, அதேபோல விமானங்களை நிறுவனதற்கான வாய்ப்புகளும் வெகு குறைவு தான். அதிலும் குறிப்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை தடைபட வாய்ப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் நிலவும் நிலைமையை ஆராய்ந்து சிங்கப்பூர் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால்மட்டுமே சேவை நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது. அப்படியே நிறுத்தினாலும் அது உடனடியாக செயல்படுத்தப்படாது, நிச்சயம் அதற்கான கால அவகாசத்தை அளிப்பார்கள்.”
“நாம் அனைவரும் அறிந்ததைப்போல 2020, 2021 மற்றும் இந்த 2022ம் ஆண்டு என்று தொடர்ச்சியாகவே ஒரு முடக்கநிலையே உள்ளது. நிச்சயம் இதனால் பாதிக்கப்படுவது வெளிநாட்டில் உள்ளவர்களே” என்றார் அவர். அவர் அளித்த தகவலின்படி தற்போது விமான போக்குவரத்திற்கு எந்தவித தடையும் விதிக்க வாய்ப்புகள் இல்லை என்றே தெரியவருகின்றது.