தங்களுடைய சமுதாய முன்னேற்றத்திற்காகவும், தங்களது நாட்டை தூய்மையாக வைத்திருக்கவும், சில நாடுகள் உலகின் பிற பகுதிகளில் இல்லாத அளவிற்கு சில பொதுவான விஷயங்களைத் தடை செய்கின்றன. அதேபோலத் தான் சூயிங்கம் விற்பனைக்கு தடை விதித்துள்ள நாடு நமது சிங்கப்பூர் என்பது பல ஆண்டுகாலமாக அனைவரும் அறிந்ததே. உலகளாவிய அளவில் சிங்கப்பூர் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அங்குள்ள மக்களின் ஒழுக்கம்தான் மிகப் பெரிய காரணம் என்று பலர் கூறுகின்றனர்.
அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க, இதுபோன்ற பல விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. நமது நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ கருத்துப்படி, வளர்ச்சியில் மிகப்பெரிய தடையாக இருப்பது மக்களின் ஒழுக்கமின்மை தான். இதையடுத்து நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகளை அப்போது விதித்தார் லீ. சிங்கப்பூரில் உயரமான பொது குடியிருப்புகள், பொது இடங்கள் மற்றும் பொது வாகனங்களில் chewing gum தொடர்பான குப்பைகளை குறைக்கவே முதலில் சூயிங்கம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
பொது இடங்கள் மற்றும் லிப்ட் பொத்தான்கள், அஞ்சல் பெட்டிகள் மற்றும் பல இடங்களில் இருக்கும் பசைகள் சுத்தம் செய்வதற்கான செலவை அதிகரித்தது மற்றும் சில நேரங்களில் உபகரணங்களை சேதப்படுத்தியதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 1992ம் ஆண்டு தான் முதன்முதலில் சூயிங்கம் விற்பனைக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2004ல் இந்த சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், மருத்துவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட மருந்தாளரிடம் இருந்து வாங்கப்படும் சிகிச்சை, பல் மற்றும் நிகோடின் சூயிங் கம் சட்டவிரோதமாக கருதப்படாது.
இது தவிர, நாடு முழுவதும் பொது இடங்களில் Chewing Gum பசையை விட்டுச் செல்வதற்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 74,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதே நேரத்தில் தொடர்ந்து இந்த தவறை செய்து பொது இடங்களில் chewing gumமை வீசினால், 1 லட்சத்திற்கு மேல் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.