உலகம் முழுவதும் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தின் பிரபலமான ‘Madame Tussauds’ மியூசியம் முதல்முதலாக 1835-ம் ஆண்டு ‘Marie Tussaud’ என்ற பெண் மெழுகுச் சிலை செய்யும் கலைஞரால் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்கப்பட்டது.
பிரான்சில் இருந்து லண்டனின் பேக்கர் ஸ்டிரீட்டில் 1800களில் குடியேறிய அவர் மெழுகுச் சிலை உருவாக்குவதில் புகழ்பெற்றிருந்தார். ஆரம்ப காலங்களில் பிரெஞ்சுப் புரட்சி, விக்டோரியா மகாராணி, லார்ட் நெல்சன் போன்றோரின் மெழுகுச் சிலைகள் அங்கு இடம்பெற்றிருந்தன. லண்டன் அருங்காட்சியகம் மெல்ல மெல்ல புகழ்பெறத் தொடங்கி, இன்று மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகக் காட்சியளிக்கிறது. இங்கிலாந்தைத் தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகர் உள்ளிட்ட இடங்களிலும் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
என்னென்ன சிலைகள் இருக்கும்?
ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், அந்தந்த நாடுகளின் தலைவர்களின் மெழுகுச் சிலைகள் இடம்பெற்றிருக்கும். அதுதவிர உலக அளவிலான அரசியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா நட்சத்திரங்கள், சமூகப் போராளிகள் என பரந்துபட்ட அளவிலான பிரபலங்களின் சிலைகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதுதவிர, முப்பரிணாம வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு தவறாமல் இடம்பெறுவதுண்டு.
சிங்கப்பூர் ‘Madame Tussauds’ அருங்காட்சியகம்!
உலக அளவில் வரிசையாக அமைக்கப்பட்ட இந்த மெழுகுச் சிலை அருங்காட்சியகம், சிங்கப்பூரில் 2015-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி அமைக்கப்பட்டது. ஆசிய அளவில் அமைக்கப்பட்ட 7-வது அருங்காட்சியகம் இதுவாகும். இந்த அருங்காட்சியகத்தில் உலகப் புகழ்பெற்ற அரசியல் பிரபலங்கள், விளையாட்டு, திரையுலக நட்சத்திரங்களோடு சிங்கப்பூர் மண்ணின் புகழ்பெற்ற மாமேதைகளின் மெழுகுச் சிலைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
சிங்கப்பூரின் முதல் அதிபரான ‘Yusof Ishak’, முன்னாள் பிரதமர் ’Lee Kuan Yew’, இந்தோனேசியாவின் முதல் அதிபர் ‘Sukarno’, இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இந்திய பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான், மகேஷ் பாபு, அமெரிக்க பாப் பாடகி லேடி காகா உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகள் இடம்பெற்றிருக்கின்றன.
அவர்களைப் போலவே தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மெழுகுச் சிலைகளோடு உங்களால் செஃல்பி எடுத்துக் கொள்ள முடியும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவரின் சிலையும் இங்கு இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரிய சிங்கப்பூர் விமானப் பணிப்பெண் எப்படி இருப்பார் என்பதைக் கருத்தில் கொண்டு, ‘Nur Surya Binte’ என்பவரை மாடலாகக் கொண்டு 2015-ல் அந்த மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டது.
என்னென்ன வசதிகள் இருக்கின்றன?
இந்த மியூசியம் சாதாரண மெழுகுச் சிலை அருங்காட்சியகம் மட்டுமல்ல. வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும், அதாவது சாதாரண ஒரு மீனவ கிராமமாக இருந்தது முதல் 21-ம் நூற்றாண்டில் உலகின் முக்கியமான சக்தியாக மாறியது வரை சிங்கப்பூர் எப்படி மாறியது என்பது பற்றி ஒவ்வொரு தருணத்திலும் எப்படி இருந்தது என்பதைப் படம்பிடித்துக் காட்டும் வரலாற்று ஆவணமாகவும் இது இருக்கிறது. சிங்கப்பூரின் மலாய் மீனவ கிராமம், வணிக வீதிகள், சைனா டவுன், பாப்புலரான ஜூப்ளி சினிமா, டிவி ஷாப் என சிங்கப்பூரின் பழமையான வரலாற்றையும் நேரில் இங்கு தரிசிக்க முடியும்.
’Spirit of Singapore’ படகு சவாரி நிச்சயம் உங்களுக்குப் புதிய அனுபவம் கொடுக்கும். சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட செடிகள், பூக்கள் உள்ளிட்ட இயற்கை சூழலுக்கு நடுவே செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் கால்வாயில் படகு சவாரி செய்வதை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே… அந்த படகு சவாரி நிச்சயம் சிங்கப்பூரின் இயற்கை சூழல் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள உதவும்.
வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலைபார்க்கும் தொழிலாளர்கள், ஒருவேளை குடும்பத்துடன் இருந்தாலோ அல்லது நண்பர்களுடனோ ஒரு நாளை மகிழ்ச்சியாகக் கழிக்க பெஸ்ட் பிளேஸ் இந்த மியூசியம். உலக அளவில் இருக்கும் ‘Madame Tussauds’ அருங்காட்சியகங்களில் படகு சவாரி முதல்முறையாகத் தொடங்கப்பட்டது சிங்கப்பூரில்தான் என்பது நமக்கெல்லாம் கூடுதல் பெருமை.
சிங்கப்பூர் ’Madame Tussauds’ மியூசியத்தின் முக்கியமான அம்சம் ‘Marvel Universe 4D’. இந்த ஷோ மூலம் மார்வெல் ஹீரோக்களான ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் என முக்கியமான கேரக்டர்களை லைவாக மிக நெருக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பார்க்க இந்த ஷோ உங்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும். ஆக்ஷன் சீன்களில் என்ன நடக்கிறது என்பதை 4டி முறையில் நேரில் பார்க்க முடியும்.
இந்த அனுபவத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாதீங்க. அதேபோல், விர்ச்சுவல் ரேஸிங் மற்றொரு முக்கியமான அம்சமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம், விர்ச்சுவலாக நீங்கள் நேரடியாக ரேஸ்களில் கலந்துகொண்டு உங்கள் டிரைவிங் திறனை நிரூபிக்க முடியும். நிச்சயம் உங்கள் வாழ்நாளுக்கான அனுபவமாக அந்தப் பயணம் அமையும்… சோ மக்களே மறக்காம ’Madame Tussauds’ மியூசியத்துக்கு விசிட் அடிங்க..
எங்கு இருக்கிறது?
சிங்கப்பூரின் சென்டோசா தீவில் `40,Imbiah Road’ என்கிற முகவரியில் இருக்கிறது இந்த மியூசியம். தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதேநேரம், மாலை 5 மணிக்குப் பிறகு உள்ளே செல்ல அனுமதியில்லை. ஆன்லைனில் நீங்கள் புக் செய்யும்போது 30 சிங் டாலர்கள் என்கிற சலுகை விலையில் புக் செய்ய முடியும். டிக்கெட் கவுண்டரில் 13 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு 44 டாலர்கள் டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பள்ளிகள் சார்பிலோ அல்லது ஒரு குழுவாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.