TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலையிட மரணங்கள்: கவலை அளிக்கும் புள்ளிவிவரங்கள்…..MOM தகவல்!!

சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டில் வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மனிதவள அமைச்சு இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 43 பேர் வேலையிட விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2023 ஆம் ஆண்டில் பதிவான 36 மரணங்களை விட அதிகம்.

வாகனம் தொடர்பான விபத்துக்களே அதிக எண்ணிக்கையிலான மரணங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. மேலும், மூச்சுத்திணறல், நீரில் மூழ்குதல், கட்டுமான கட்டமைப்புகள் மற்றும் சாதனங்கள் சரிந்து விழுதல் போன்ற காரணங்களாலும் வேலையிட மரணங்கள் அதிகரித்துள்ளன.

கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் கிடங்குப் பணிகளில் இந்த ஆண்டு 34 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு கட்டுமானத்துறையில் 18 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், போக்குவரத்துத்துறை மற்றும் கிடங்குகளில் கடந்த ஆண்டு 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, 2023 ஆம் ஆண்டில் கடல்துறையில் எவ்வித வேலையிட மரணங்களும் பதிவாகாத நிலையில், இந்த ஆண்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வேலையிட மரண விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 1.2 ஆக அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் 0.99 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலையிட மரணங்களைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார். “கூடுதல் திட்டங்களை வகுக்கலாம், கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது எளிதானது. ஆனால், அது நிறுவனங்களின் போட்டித்தன்மையை பாதிக்கலாம். பாதுகாப்பு மிக முக்கியம். எனவே, தொழிலுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழிகளை கண்டறிய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, 2024 ஆம் ஆண்டில் வேலையிடங்களில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு 100,000 ஊழியர்களுக்கும் 15.9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வழுக்கி விழுதல், தடுக்கி விழுதல், உயரமான இடங்களிலிருந்து விழுதல் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான விபத்துக்கள் படுகாயங்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

ஜூரோங் தீவில் உள்ள செவ்ரோன் ஒரோனைட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அமைச்சர் ஸாக்கி இந்த தகவல்களை வெளியிட்டார். வேலையிட பாதுகாப்பை மேம்படுத்தவும், மரணங்களை குறைக்கவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Related posts