சிங்கப்பூரில் உள்ள பூனா விஸ்டா அருகே உள்ள உளு பாண்டன் சமூக கிளப்பில் (CC) எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) நடந்த இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் 170 Ghim Moh சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீஸார் இந்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சம்மந்தப்பட்ட 70 வயதான ஆண் ஓட்டுநர் மற்றும் அவரது 66 வயது பெண் பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF படையினர் காயமடைந்த அந்த இருவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF).
Roads.SG Facebook பக்கத்தில் வெளியான ஓர் பதிவின்படி, கார் ஒன்று கண்ணாடி கதவு வழியாக மோதியதாகவும், பிறகு அங்கிருந்த லாபியின் பின் முனையில் மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது. சேதமடைந்த கண்ணாடி கதவு, SCDFன் அதிகாரிகள் அந்த நிகழ்விடத்தில் இருப்பது உள்ளிட்ட விஷயங்களை அந்த வீடியோவில் காணலாம். இது இன்று சனிக்கிழமை காலை பதிவேற்றப்பட்டதிலிருந்து 20,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணை நடந்து வருகின்றது.