‘இசையால் வசமாகா இதயம் எது… இறைவனே இசை வடிவம் எனும்போது… தமிழ் இசையால் வசமாகா இதயம் எது’ என்ற பக்தி பாடல் கேட்கும் அனைவரையும் மனமுருக வைக்கும். அதில், அத்தனை உண்மை இருக்கிறது. இந்த இசையை அடுத்து வரும் தலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதற்காக ‘தமிழ், கன்னட சினிமாவில் இசை’ என்ற ஆய்வுக்காக பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளார் பின்னணி பாடகி பிரியதர்ஷினி.
பிரியதர்ஷினி பிறந்தது சென்னையில். ஆனால், அவரை வளர்த்தது நமது சிங்கப்பூர் தான். சிறு வயதிலேயே அதீத இசை திறமை இருந்ததால், அந்த ஆர்வமே அவரை பாடகியாக உருவாக்கியது. நம் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளில் பாடிக் கொண்டிருந்தவருக்கு கடந்த 2003ம் ஆண்டு ஜாக்பாட் அடித்தது. இசையமைப்பாளர் பரத்வாஜ் நியாபகமிருக்கா?.. அவர் தான் பிரியதர்ஷினிக்கு தமிழ் சினிமாவில் ‘காதல் டாட் காம்’ படம் மூலம் வாய்ப்பு கொடுத்தார். அதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட பிரியதர்ஷினி, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 110க்கும் மேற்பட்ட படங்களில் பலநுாறு பாடல்களை பாடியுள்ளார்.
சினிமா மட்டுமின்றி, இவர் 300க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில், இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள மைசூர் பல்கலைக்கழக்த்தில் 100 ஆண்டுகால சினிமா இசையின் சிறப்புகள், இசை நுணுக்கங்களை உள்ளடக்கி ‘தமிழ், கன்னட சினிமாவில் இசை’ என்ற ஆய்வுக்காக பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்கிறார்.
https://mobile.twitter.com/Priyadarshini_7/status/1492845859532206084
அதுமட்டுமின்றி, இவர் இசை பவுண்டேஷனும் நடத்தி வருவது கூடுதல் தகவல்.
சென்னை, சிங்கப்பூர் என்று மாறி மாறி பறந்து ஏகத்துக்கும் பிசியாக இருக்கும் பிரியதர்ஷினி அளித்த பேட்டியில், “இசையின் மரபு, பரிணாமங்களை சொல்வதற்கு புத்தகங்கள் கிடையாது. வருங்கால சந்ததிகள், இசைக் கலைஞர்களுக்கு தமிழ், கன்னட சினிமா இசை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆய்வு செய்தேன். பழம்பெரும் இசையமைப்பாளர்கள், பாடர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்களின் அனுபவம் ஆய்வு தொடர்பான விபரங்கள், தகவல்களை சேகரிக்க உதவியது. பாட்டோடு நிறுத்தி விடாமல் நடிப்பிலும் கவனம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.