TamilSaaga

“வெளிநாட்டு தலையீடுகள் குறித்து முன்மொழியப்பட்ட சட்டம்” : சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

FICA – foreign interference counter measures act- வெளிநாட்டு குறுக்கீட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டம்.

ஆளும் கட்சி முன்மொழிந்து இருக்கும் இந்த சட்டம் ஏறக்குறைய முன்மொழியப்பட்ட செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரின் பல்வேறு மட்டத்திலும் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது . 149 பக்கங்களில் முன்மொழியப்பட்டு இருக்கிற இந்த சட்டத்தின் 2ஆம் கட்ட விவாதம் அக்டோபர் 4ம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெறும் என அடுத்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது உள்துறை அமைச்சகம்.

பாராளுமன்ற எழுத்தர் அவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் அட்டவணையின் அடிப்படையில் அக்டோபர் 4 இந்த சட்டம் குறித்த விரிவான விசாரணை கோரும், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதி இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்,திரு. லியோங் முன் வாய், அவர்களின் மனு மீதான விவாதத்தோடு இந்த சட்டம் குறித்த இரண்டாம் கட்ட விவாதம் தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு பினாமிகள் மூலமாக உள்ளூர் அரசியலில் தலையிடுதல், அரசு விரோத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புதல், போன்ற வெளிநாட்டு தலையீடுகளை முற்றிலும் நீக்குவதை மையமாகக் கொண்டே இந்த சட்டவரைவு முன்மொழியப்பட்டு இருக்கிறது. சந்தேகத்திற்கு இடமான சமூக வலைதள கணக்குகளை முடக்குவது, வெளிநாடு தொடர்புடைய அரசியல் ஆளுமைகளின் வெளிநாட்டு பயண விவரங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவது, என உள்துறை அமைச்சகத்திற்கு அதிக அதிகாரங்களை இந்த சட்டம் வழங்குகிறது.

இது குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த சட்டம் குறித்த தனது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார் மூத்த வழக்கறிஞர் திரு.ஹர்ப்ரீத் சிங் நேஹால்.

உள்துறை அமைச்சகத்திற்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த சட்டத்தின் விரிவான எல்லைகள், வெளிநாட்டு நிறுவனங்களோடு தொடர்பு இருக்கிற சிங்கப்பூர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் குடி மக்களை அவர்களின் வெளிநாட்டு நிறுவனங்களுடனான பரந்த ஒத்துழைப்பை பாதிக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

அதற்கு பதில் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகத்தின் கூட்டு செயல்பாட்டு குழுவின் மூத்த இயக்குனர் திரு. சாம் ட்டீ அவர்கள்,திரு. சிங்கின் கூற்றுகள் மிகவும் தவறானவை மேலும் அவரது கவலைகள் ஒரு தவறான அடிப்படை இல்லாத புரிதலில் இருந்து எழுகின்றன. இந்த சட்டம் சிங்கப்பூரருக்கும் வெளிநாட்டினருக்கும் இடையிலான பரந்த அளவிலான ஒத்துழைப்புகளை பாதிக்காது. இருந்தாலும் ஒரு சிங்கப்பூரர் ஒரு வெளிநாட்டு அதிபர் சார்பாக செயல்பட்டால், அல்லது வெளிநாட்டு விரோத அமைப்புகளோடு செயல்பட்டால் அப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சட்டத்தின் தேவை வெகு நாட்களாகவே இருந்து கொண்டிருக்கிற ஒன்று என்றும் பதிவு செய்திருக்கிறார்.

உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்படுகிற இந்த கூடுதல் அதிகாரங்கள் நீதிமன்றங்களின் வரம்புகளை, சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அமையும் என்ற அவர்களின் கருத்துக்கும், இதுபோன்ற நடவடிக்கைகள் புதிதில்லை ஏற்கனவே உளவுத்துறை மூலமாக பெறப்பட்ட பல்வேறு செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கின்றன என்றும் பதிலளித்திருக்கிறார் திரு. ட்டீ.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்வைத்திருக்கிற பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் திருத்தங்கள் குறித்த கேள்விக்கும், அக்டோபர் 4ஆம் தேதி விவாதத்தின்போது அவைகளும் விவாதிக்கப்படும் என்று பதிலளித்திருக்கிறது உள்துறை அமைச்சகம்.

Related posts