சிங்கப்பூரில் நெறிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று நடவடிக்கைள் கடந்த பிப்ரவரி 25ம் தேதி அமலாகும் என்று சிங்கப்பூரில் பெருந்தொற்றை கையாளும் பணிக்குழு அறிவித்தது. ஆனால் அப்போது சிங்கப்பூரில் தொற்றின் அளவு வேகமெடுத்ததால் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் அளவு குறைந்து வருவதால் இன்று மார்ச் 15 முதல் பல தளர்வுகளை அறிவித்தது பணிக்குழு.
புதிய நெறிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று நடவடிக்கையின் கீழ் முகக்கவசம் அணிவது, வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அளவு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் அளவு, உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பல மாதங்களாக Dormitoryயில் முடங்கிக்கிடந்த நமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தளர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடப்பட்ட 15,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வார நாட்களில் சமூகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள், இந்த அளவு இதற்கு முன்பு 3,000 ஆக இருந்தது.
அதேபோல வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில், அதிகபட்சமாக 30,000 தொழிலாளர்கள் வரை சமூகத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள், இந்த அளவு இதற்கு முன்பு 6,000 பேர் என்று இருந்தது. தொழிலாளர்களின் வருகையின்போது அவர்கள் அதிகபட்சம் எட்டு மணிநேரம் வெளியிடங்களில் செலவிடமுடியும். பிரபலமான இடங்களில் கூட்டத்தை நிர்வகிக்க, சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல தொழிலாளர்கள் விண்ணப்பித்தே செல்ல வேண்டும்.
மனிதவள அமைச்சகம் விண்ணப்ப எண்களைக் கண்காணித்து, அதிக மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.