வெளிநாட்டில் வேலை ! எப்போதுமே இந்த சொல்லுக்கு மவுசு அதிகம், உலக அளவில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக இந்தியர்கள் வெளிநாடுகளில் சென்று வேலை செய்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்நாட்டில் அவர்கள் ஒரு வருடத்தில் ஈட்டும் வருவாயை வெளிநாடுகளில் வெறும் 6 மாதத்தில் ஈட்டிவிடலாம் என்ற நிலையும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் சர்வதேச புலம்பெயந்தோர் தினம்”
இந்நிலையில் வெளிநாட்டு வேலை மோகத்தில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களிடம் சில மோசடிகளும் மிகச்சிறிய அளவில் அரங்கேறி வருகின்றது என்றே கூறலாம். குறிப்பாக சிங்கப்பூர் PR வாங்கித்தருகிறேன் என்று வெளிநாட்டு ஊழியர்களிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றும் சொற்ப நபர்கள் சிங்கப்பூரில் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த மோசடி கும்பல்கள், தங்களுடைய இலக்கை பொதுஇடங்களில் சமூக ஒன்றுகூடல்களில் தேடுகின்றனர். அப்படி சிக்குபவர்களிடம் தங்களுடைய கைவரிசையை காண்பிக்கின்றனர். சிங்கப்பூரை பொறுத்தவரை சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிப்பவர்களையோ அல்லது PR பெற்றவர்களையோ திருமணம் செய்துகொள்ளும்பட்சத்தில் அவர்களும் சிங்கப்பூர் குடிமக்களாக மாற வாய்ப்புகள் உள்ளது. அப்படி சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிப்பவர்களையோ அல்லது PR பெற்றவர்களையோ திருமணம் செய்துகொள்ள முதலில் சிங்கப்பூர் அரசிடம் இருந்து பிரத்தியேகமாக கடிதம் ஒன்றை அவர்கள் பெற வேண்டும். அரசு அனுமதி அளித்த பிறகே அந்த வெளிநாட்டவர்கள் அவர்களை திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த விஷயம் பலருக்கு தெரிவதில்லை.
இந்த நிலையில் தான் சில மோசடி ஆசாமிகள் வெளிநாட்டு பணியாளர்களை அணுகுகின்றனர். தங்களிடம் சில பெண்கள் இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றும், இருப்பினும் அரசிடம் கணக்கு காண்பிப்பதற்காக உன்னை மனத்துக்கொள்வார்கள் என்று ஆசைவார்த்தை காட்டுகின்றனர். சிங்கப்பூர் PR உங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் இதற்காக எங்களுக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்துவிடுங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வழியிலும் எங்களிடம் உள்ள பெண்கள் அவர்கள் வழியிலும் சென்றுவிடலாம் என்று கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர்.
மேலும் இந்த விஷயம் நமக்குளேயே இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் பிரச்சனைகள் ஏதும் வராது என்றும் தங்கள் வலையில் விழும் தொழிலாளர்களிடம் கூறுகின்றனர்.
ஆசை வார்த்தையில் மயங்கி பணத்தை அந்த கும்பலிடம் கொடுத்துவிட்டு திருமணத்திற்காக அரசை அணுகும் நேரத்தில் தான் அதில் இருக்கும் சட்ட சிக்கல்களை வெளிநாட்டில் இருந்து வரும் பணியாளர்கள் புரிந்துகொள்கின்றனர். அரசு கேட்கும் முறையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கும் பணியாளர்கள் பணத்தை பறிகொடுத்ததை சொல்லமுடியாமல் திரும்புகின்றனர். சில சமயங்களில் பாஸ்போர்ட் முடக்கம், வேலை பறிப்பு போன்ற இன்னல்களுக்கும் ஆளாகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்றாலும் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆகையால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் குறுக்கு வழியில் PR போன்ற விஷயங்களை பெற நினைக்காமல் நேர்மையான வழியில் எல்லாவற்றையும் பெற நினைப்பதோடு இதுபோன்ற சில போலி ஆசாமிகளிடம் சிக்காமல் இருக்கவேண்டும்.