சுங்கே புலோ (Sungei Buloh Wetland) சிங்கப்பூரின் முதல் ஆசியான் Heritage பூங்கா ஆகும். சிங்கப்பூரின் நகரமயமாக்கலில் தீண்டப்படாமல் விடப்பட்ட இடங்களில் மிக முக்கியமான இடம் இது என்பதால், பசுமை வாய்ந்த இந்த இடம் பார்வையாளர்களுக்கு எப்போதும் விருந்தளிக்கும் வகையில் அமைகிறது.
இங்கு பெரும்பாலான நேரங்களில், மனிதர்கள் மற்றும் இங்கு வாழும் ஜீவராசிகள் இடையே சந்திப்பு இருக்காது. எனினும், சில நேரங்களில், ஒரு தரப்பு மற்றவரின் எல்லைக்குள் நுழைவதால் உரசல் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள புகைப்படக் கலைஞர் ஈசன் சத்தியலிங்கம், Sungei Buloh Nature Parkல் எடுத்த புகைப்படம் பகீர் ரகத்தில் உள்ளது. அங்கு பார்வையாளர்கள் நடந்து வரும் பாதையில், முதலை ஒன்று தலையை நீட்டிக் கொண்டு பசியுடன் இரைக்காக காத்திருந்ததை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார்.
வாவ்! விமானத்தில் இலவச Wi-Fi.. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் “சூப்பர்” அறிவிப்பு
அந்த பூங்காவில் உள்ள நடைபாதைக்கு அருகில் 2 மீ உயரமுள்ள முதலை ஒன்று இரைக்காக காத்திருப்பதை ஈசன் கண்டறிந்தார்.
உடனே அவர் பார்வையாளர்களை அந்த பக்கம் வர வேண்டாம் என்று எச்சரித்தும், சிலர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் முதலை காத்திருந்த இடத்தின் வழியே நடந்து சென்றனர்.
இதுகுறித்து ஈசன் முகநூல் பக்கத்தில், “நான் எச்சரித்த பிறகும், சிலர் புகைப்படம் எடுக்க முதலையின் அருகே நெருங்கி வர முடிவு செய்தனர். அவர்கள் ஆபத்தை உணரவில்லையா?. உண்மையில் அந்த இடத்தை கடக்க அவ்வளவு என்ன அவசரம் என்று எனக்குத் தெரியவில்லை. ஏதாவது நடந்தால், அந்த பாவப்பட்ட முதலை மீதுதான் பழி விழும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பூங்கா வாரியத்தின் கூற்றுப்படி, சிங்கப்பூரில் காணப்படும் இனங்கள் உப்பு நீர் முதலை என்றும் அழைக்கப்படுகிறது.
இது உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றாகும். 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் வரை வளரக்கூடியது.
இது நீண்ட முகடுகளுடன் கூடிய பரந்த, தசை வால் கொண்டது. ஆக்ரோஷமாக தாக்கும் தன்மை கொண்டது. அபார வேகமும் கொண்டவை.
அதன் வாழ்விடங்களை அழித்தல், அதன் மறை மற்றும் இறைச்சிக்காக அதிகமாக வேட்டையாடுதல் மற்றும் மனித துன்புறுத்தல் ஆகியவற்றின் காரணமாக இந்த இனம் சர்வதேச அளவில் அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கே பூலோ வெட்லேண்ட் ரிசர்வ் வருபவர்கள் நெறிமுறைகளை பின்பற்றி, அறிவுறுத்தப்பட்ட பாதைகளில் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.