SINGAPORE: உலகின் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் தனது வலிமையை நிரூபித்துள்ளது
உலகின் அதிக செல்வாக்குடைய.. அதாவது powerful பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் எனும் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தற்போது 2022ம் ஆண்டுக்கான பட்டியலை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், வழக்கம் போல் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இரண்டாமிடத்தை சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா பாஸ்போர்ட்கள் பிடித்துள்ளன. இதன் மூலம், 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும்.
கடந்த ஆண்டு அக்டோபரில், சிங்கப்பூரும், ஜப்பானும் (192 நாடுகள்) முதலிடத்தை பகிர்ந்து கொண்ட நிலையில், தற்போது ஜப்பான் பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதால், மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
அதேசமயம், பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக ரஷ்யா பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. இதனால், ரஷ்ய பாஸ்போர்ட் தற்போது 50வது இடத்தில் உள்ளது. இதன் மூலம், 119 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். சீனா 69வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் பாஸ்போர்ட் 87வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.