TamilSaaga

மனைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் – வெளியே சொல்ல முடியாத இன்னல்கள் – இது உண்மையா?

‘உனக்கென்னப்பா ஃபாரின்ல செட்டில் ஆயிட்ட.. அடுத்து கல்யாணம் தான்’ என்ற வார்த்தைகள் முதலில் கேட்கும் போது குளுகுளுவெனத் தான் இருக்கும். ஆனால், அந்த கல்யாணத்தை செய்துவிட்டு அவர்கள் படும் அவஸ்தை, அவன் அவனுக்கு வந்தால் தான் தெரியும்.

அப்படி என்ன அவஸ்தை-னு தானே கேட்குறீங்க… ஒன்னில்ல, ரெண்டில்ல.. நிறைய இருக்கு. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை என்று சொன்னால், இன்னமும் தமிழக கிராமங்களில் அதற்கென ஒரு தனி மரியாதை, மவுசு உண்டு.

அதுலயும் ‘பையன் சிங்கப்பூர் இருக்குறாப்ல’-னு சொன்னா போதும்… அதுக்கான ரேஞ்சே தனி. என்னதான் வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் மாப்பிள்ளை என்று பொதுவாக சொன்னாலும், அரபு நாடுகளில் வேலைப்பார்ப்பவர்களை விட சிங்கப்பூர் மாப்பிள்ளைகளுக்கே முக்கியத்துவம் அதிகம்.

சீர் செனத்தியோடு கல்யாணம் ஜாம் ஜாம்-னு முடிய, மாப்பிள்ளை அதிலிருந்து ஒரு 10 – 15 நாட்களுக்குள் வெளிநாடு கிளம்பிடுவார். எடுத்து வந்த 1 மாத விடுப்பு முடிந்தால், வெளிநாடு போய்த்தானே ஆகணும். இந்த இடத்தில் மனைவியையும் சேர்த்து வெளிநாடு அழைத்துச் செல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வளவு குறைவு.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் வேலை” : Experience உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – 1,50,000 வரை சம்பளம்!

விசா எடுப்பதில் சிக்கல், இரட்டிப்பு செலவு, மனைவியை உடன் அழைத்துச் சென்றால் ஊருக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் என்று ஆயிரம் ஆயிரம் யோசனைகளுடன் அந்த புது மாப்பிள்ளை மனதை கல்லாக்கிக் கொண்டு வண்டி ஏறிடுவார். ஆனால், அந்த புது பெண்ணுக்கு தான் உண்மையில் ஆயிரம் சிக்கல்கள் உள்ளது.

‘இனி இவன் நமக்கானவன்; என்ற ஆசையோடு வந்த இடத்தில், கணவர் பத்தே நாளில் மனைவிக்கு பழக்கமே இல்லாத தனது வீட்டில் விட்டுச் செல்லும் கொடுமை போல் வேறு எதுவும் கிடையாது. கணவனோடு சேர்ந்து மாமியார் வீட்டில் உள்ள நெளிவு சுளிவுகளை புரிந்து, அதற்கேற்ப நடந்து கொள்வது என்பது வேறு. கணவன் இல்லாமல், முற்றிலும் புது வீடு, புது மனிதர்கள் என்று அந்த இளம் பெண் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

கணவன் அருகில் இருந்தால், தன் அம்மாவுக்கு என்ன பிடிக்கும், அப்பாவுக்கு என்ன பிடிக்கும், தங்கச்சிக்கு என்ன பிடிக்கும் என்று தன் குடும்பத்தாரின் பல்ஸை புது மனைவிக்கு எளிதில் அப்டேட் செய்துவிடுவான். ‘அருகில் இல்லையென்றால் என்ன.. அதான் மொபைல் இருக்கே.. அதில் கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியது தான்’ என்று நாம் எளிதில் கேட்டுவிடலாம்.. ஆனால், புது மனைவியை கட்டிலில் அணைத்து, தன் நெஞ்சில் அவள் முகத்தை சுமந்து, அவள் முடியை வருடிக் கொண்டே அவன் தான் குடும்பத்தார் பற்றி எடுக்கும் பாடத்தில் கிடைக்காத சுகம், எத்தனை லட்சம் விலை கொண்ட மொபைல் ஃபோனில் பேசினாலும் கிடைக்காது.

இதைக் கூட விட்டுவிடலாம். ஆனால், தாம்பத்யம் என்ற ஒரு புள்ளி இருக்கிறதே.. அதுதான் உச்சக்கட்ட கொடுமை. கல்யாணம் புரிந்த தம்பதிகளை உடனே பிரிப்பது இரண்டே இரண்டு விஷயம் தான். ஒன்று ஆடி மாதம்.. மற்றொன்று வெளிநாடு வாசம். இத்தனை ஆண்டுகள் தனக்கானவனை தேடி, இன்று அவனுடன் ஒன்றாக இருக்க வேண்டிய நேரத்தில், தனிமையில் இருப்பது என்பது ஒருவகையில் அப்பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தான் கூற வேண்டும்.

உடல்கள் பின்னிப்பிணைய வேண்டிய நேரத்தில், மாமியார் வீட்டில் கூடைப் பின்னக் கொடுப்பது என்பது அப்பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். ஆனால், நம்முடைய வாழ்வாதார நிலையை நினைத்து, நாமே அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எது எது எந்தெந்த நேரத்தில் நடக்க வேண்டுமோ, அது அது அந்தந்த நேரத்தில் நடந்துவிட வேண்டும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்!.

மேலும் படிக்க – அதிகாலை 3 மணிக்கு “திடீர்” நெஞ்சு வலி.. சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் பரிதாப பலி – இந்தியா கொண்டு செல்லப்படும் உடல்

ஆனால், வேலைக்கு உடனே திரும்ப வேண்டிய கட்டாயத்தில், மாப்பிள்ளை வெளிநாடு திரும்பிவிட்டால், கணவரின் எந்தவித அனுசரணையும் கிடைப்பதில்லை. ஒரு ஆண் செக்ஸ் பற்றி தனது நண்பர்களிடம் வெளிப்படையாக பேசுவார்கள். அந்தவொரு கொடுப்பினை கூட பெண்களுக்கு கிடையாது. சிட்டி பொண்ணுங்களின் கலாச்சாரம் வேறு. கிராம பின்னணி கொண்ட பெண்களின் சூழல் வேறு. உடல் ரீதியாக தனக்கிருக்கும் தேவைகளை அவள் கணவனை தவிர வேறு யாரிடம் வெளிப்படுத்த முடியும்? அதையும் மீறி சில பெண்கள் வெளிப்படுத்த, அதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. ஆனால், நாம் குறை அனைத்தையும் அந்த பெண் மீது மட்டுமே தூக்கி வைத்துவிடுவோம்.

பெண்கள் படும் இன்னல்கள் இப்படியாக இருக்கிறது என்றால், அங்கு வெளிநாட்டில் புது மாப்பிள்ளைகள், கல்யாணத்தை செய்துவிட்டு, சில நாட்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு, இங்கு வந்து வேலையிலும் பெரிதாக ஆர்வம் காட்ட முடியாமல், மனைவியையும் பார்க்க முடியாமல் திண்டாடுவார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் வீடியோ கால் தான். ஆனால், அதில் குடும்பம் நடத்த முடியாதே!. உடல் தேவை உச்சத்தில் இருக்கும்வேளையில், மனைவியை விட்டுப் பிரிந்து, பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில், வேலை செய்துகொண்டு, ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டும் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்களே.. அவர்களுக்கு சிலை தான் செய்து வைக்க வேண்டும். இதை பெரிதாக எவரும் வெளியே விவாதித்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், உள்ளுக்குள் அவர்களது இயலாமை தகதகவென எரிந்து கொண்டிருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது.

இது புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் வரும் சிக்கல் அல்ல.. கல்யாணம் ஆகி குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் வேலைப்பார்க்கும் ஒவ்வொருத்தருக்கும் வரும் சிக்கல் தான்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts