நமது சிங்கப்பூர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 17ம் தேதியன்று நாட்டின் ஐந்தாவது உப்புநீக்கும் ஆலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. சிங்கையில் ஏற்கனவே உள்ள வழக்கமான உப்புநீக்கும் ஆலைகளை விட சுமார் 5 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டது இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வரும் இந்த புதிய நிலையமானது, துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ அவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
3.7 ஹெக்டேர் அளவில் உள்ள இந்த ஆலையால் ஒரு நாளைக்கு 30 மில்லியன் கேலன் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். சிங்கப்பூரின் தினசரி தண்ணீர் தேவையில் 7 சதவிகிதத்தை இதனால் வழங்க முடியும் என்பது இதனுடைய சிறப்பு அம்சம்.
இந்த புதிய ஜூரோங் தீவு உப்புநீக்கும் ஆலை 25 வருட காலத்திற்கு Tuas Power மற்றும் ST இன்ஜினியரிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பால் இயக்கப்படும். கடந்த 2017ல் இந்த திட்டத்திற்கான Tender வெளியிடப்பட்டபோது இந்த நிறுவனங்கள் ஏலத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய உப்புநீக்கும் ஆலை, துவாஸ் பவரின் டெம்புசு மல்டி-யுடிலிட்டிஸ் காம்ப்ளக்ஸ் (TMUC) உடன் இணைந்து அமைந்துள்ளது, இது 2013 முதல் இயங்கி வருகிறது மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளில் சிங்கப்பூர் தனது நீர் தேவைக்கான சவாலை மிக சிறப்பாக கையாண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அதன் நீர் ஆதாரங்களின் நெகிழ்ச்சித்தன்மையை வலுப்படுத்தியதால், நீர் நடவடிக்கைகளுக்கான செலவு 2000ல் $500 மில்லியனிலிருந்து கடந்த 2015ல் $1.3 பில்லியனாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் அதிக அளவிலான Desalination ஆலைகளை கொண்ட நாடு என்ற பெருமையும் சிங்கப்பூரை சேரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே போல சென்னை மீஞ்சூரில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்புநீக்கும் ஆலை தான் ஆசிய கண்டத்திலேயே உள்ள மிகப்பெரிய ஆலை என்பதும் குறிப்பிடத்தக்கது.