சிங்கப்பூரின் தானா மேராவில் உள்ள ஒரு தளத்தில் பணிபுரியும் நிலப் போக்குவரத்து ஆணைய (LTA) பொறியாளருக்கும் LTA ஒப்பந்ததாரரின் ஊழியர் ஒருவருக்கும் இடையிலான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஆகஸ்ட் 24 அன்று சிங்கப்பூர் ரோடு விஜிலன்ட்டின் என்னும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்த காணொளியை சுமார் 1,47,000 பேர் பார்த்துள்ளனர். மேலும் அந்த அதிகாரியின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஒரு வெளிநாட்டு ஊழியரை அவருடைய உயர் அதிகாரியான இன்ஜினியர் ஒருவர் கடுமையாக பேசி, அந்த ஊழியரின் லைசன்ஸை கொண்டு அவருடைய தலையில் பலமாக அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அந்த வெளிநாட்டு ஊழியர் தன்னுடைய பணியிடத்தில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட அந்த உயர் அதிகாரி, “நீ எந்த பள்ளியில் பயின்றாய், பாதுகாப்பு பெல்ட் போட வேண்டும் என்று உனக்கு தெரியாதா. நீ எங்கு வேலை செய்ய கற்றுக் கொண்டாய்” என்று அவரை கடுமையாக திட்டியது மட்டுமல்லாமல். தனது கையில் இருந்த அந்த ஊழியரின் லைசென்ஸை வேகமாக அவர் தலையில் இருந்த ஹெல்மெட்டில் வீசி அடிக்கின்றார்.
அதன் பிறகு தரையில் அந்த லைசன்சை தூக்கிப் போட்டுவிட்டு அவர் அங்கிருந்து செல்கின்றார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து சிங்கப்பூர் நில மற்றும் போக்குவரத்து ஆணையம் இந்த நிகழ்வு குறித்த ஒரு பதிவை வெளியிட்டது. அதில் தங்களுடைய பணியிடத்தில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு முறையை கையாள்வதில் எந்த கவனக் குறையும் வைக்கக்கூடாது. அதே நேரம் அந்த உயர் அதிகாரி தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு பணியாளரிடம் இப்படி நடந்து கொண்டதும் தவறு.
ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் அந்த வெளிநாட்டு ஊழியரிடம் அவருடைய பணியை சரியாக செய்ய சொல்ல வேண்டியது அந்த இன்ஜினியரிங் கடமை தான் என்றாலும், இப்படி கடுமையாக நடந்து கொண்டது தவறு என்றும், இப்பொழுது அந்த இன்ஜினியருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறி இருக்கிறது LTA. அது மட்டும் அல்லாமல் அந்த கான்ட்ராக்ட் ஊழியரிடம் இன்ஜினியர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் தனது பதிவில் சிங்கப்பூரின் நில மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.