தாய்லாந்தின் Phuket நகரில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காலை டிரக் ஒன்றின் மீது பைக் மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்ததில், அவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 29 வயதே ஆன Ben என்பது தெரிய வந்தது.
டிரக் மீது பைக் மிக வேகமாக சென்று மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அந்த பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற இளம் பெண்ணும் விபத்தில் பலத்த காயமடைந்தார். விசாரணையில் அவர் பென்னின் காதலி என்பதும், அவரது பெயர் Natalie Sng Hui Yi என்றும் தெரிய வந்தது.
இருப்பினும், அப்பெண்ணுக்கு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பென், சிங்கப்பூரில் பைக் ஓட்டுவதை அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
அதாவது, பென் தனது காதலிக்கு கடந்த டிசம்பர் மாதம் புரபோஸ் செய்திருக்கிறார். இதற்காக Natalie-க்கு மோதிரம் வாங்கியிருக்கிறார். பிறகு கிறிஸ்துமஸ் அன்று அந்த மோதிரத்தை அணிவித்து, தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்க, Natalie அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இதனை இறந்த பென்-ன் தந்தை Cai வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் குடும்பம் உடைந்து விட்டது. ஆசை ஆசையாய் வளர்த்த எங்கள் மகனை இழந்துவிட்டோம். பைக் மீது பென்-க்கு அலாதியான பிரியம் உண்டு. ஆனால் நான் பைக் வாங்கி தர மறுத்துவிட்டேன். சிங்கப்பூரில் பைக் ஓட்டவும் நான் அனுமதிக்கவில்லை.
இந்த சூழலில், அவர் வேலைப்பார்த்த இடத்தில் பணிபுரிந்த Natalie என்ற பெண்ணை காதலித்தார். அதை எங்களிடமும் தெரிவித்தார். பிறகு, அப்பெண்ணுக்கு புரபோஸ் செய்து, அவரை அழைத்துக் கொண்டு, தாய்லாந்தில் வாடகைக்கு பைக் எடுத்துக் கொண்டு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டு எங்கள் மகனை இழந்துவிட்டோம்” என்று கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.