TamilSaaga

சிதைந்த குடும்பத்தின் நம்பிக்கை.. இளம் வயதில் சிங்கப்பூரில் உயிரை பறிகொடுத்த ஊழியர் ‘பெரியசாமி ராஜேந்திரன்’ – குடும்பத்துக்கு உதவ ‘தமிழ் சாகா’ செய்தி குழு தயார்!

இப்படி ஒரு கோரமான மரணம், அதுவும் இந்த இளம் வயதில் ஏற்பட்டிருக்கக் கூடாது. நிச்சயம் ஏற்பட்டிருக்கக் கூடாது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி ராஜேந்திரன் எனும் ஊழியர், சிங்கப்பூரில் ஹ்வா யாங் இன்ஜினியரிங் (Hwa Yang Engineering) என்ற சீன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் பணியிடத்தில் மொபைல் கிரேனில் சிக்கி பலியான வெளிநாட்டு ஊழியர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், நேற்று காலை 10.15 மணியளவில் பெரியசாமி பணியில் ஈடுபட்டிருந்த போது, கிரேனில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மனிதவளத்துறை அமைச்சகம் (MOM), இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான பெரியசாமி, கிரேனின் சேஸின் அடியில் அமைந்துள்ள கருவிப்பெட்டியில் இருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, கிரேன் கடிகார திசையில் திரும்பி அவரை நசுக்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – Work Permit-ல் புதிதாக வேலைக்கு வருபவர்கள் கவனத்திற்கு.. Onboard Centre-ல் புக் செய்யாமல் சிங்கப்பூர் வர வேண்டாம்.. மீறினால் விமான கட்டணம் காலி.. சாங்கி ஏர்போர்ட்டில் இருந்து #Exclusive Report

இந்த விபத்து குறித்து காலை 10.20 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கு பிறகு Khoo Teck Puat மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார். பிறகு, மருத்துவமனையிலேயே அவர் இறந்துள்ளார். இந்நிலையில், விபத்து குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் அந்த இடத்தில் அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு அமைச்சகம் CCDC க்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், அவரது உடல் சிங்கப்பூரில் இருந்து இந்தியா எடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவரது பெற்றோர் உட்பட குடும்பத்தார் நிலைமையும் இதுவரை தெரியவில்லை.

ஒருவேளை, பெரியசாமியின் உடலை இந்தியா கொண்டு செல்வதில் சிக்கல் இருந்தாலோ, தாமதம் ஏற்பட்டாலோ கைக்கொடுக்க ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ செய்தி குழு தயாராக உள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மிக மூத்த நிர்வாகிகள் மூலம், உடலை தமிழகம் கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளோம். அதேபோல், பெரியசாமி ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் அதை செய்து கொடுக்க தமிழ் சாகா குழு உறுதியாக உள்ளது.

பெரியசாமி ராஜேந்திரன் செய்தி தொடர்பாக தமிழ் சாகாவை தொடர்பு கொள்ள tamilsaaga@gmail.com எனும் ஐடிக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts