இலங்கை அதிபர் பதவியில் இருந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சவுக்கு மேலும் சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஏனெனில் அவரை இங்கு நீண்ட காலம் தங்க நமது சிங்கப்பூர் அரசு அனுமதிக்கவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.
இலங்கையில் அதிபர் மாளிகை பொதுமக்களால் சூழப்பட்ட பிறகு 73 வயதான ராஜபக்சே, சென்ற வாரம் புதன்கிழமை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ராணுவ ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார், பின் அங்கிருந்து சிங்கப்பூர் வந்திறங்கினார்.
சிங்கப்பூரில் உள்ள அதிகாரிகள் ராஜபக்சேவிடம் அவர் இங்கு 15 நாட்கள் தங்குவதற்கு மட்டுமே அனுமதி இருப்பதாகவும், அது நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் கூறியதாகவும் தற்போது தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்து ராஜபக்சேவிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவை ராஜபக்ச அணுகியதாகவும், ஆனால் அவரது கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரிலும் ராஜபக்சவிற்கு எதிராக போராட்டங்கள் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதால் அவர் அடுத்தகட்டமாக என்ன செய்ய போகிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.