சிங்கப்பூரில் தொழிலாளர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் திருமணத்திற்கு அரிதாக எப்பொழுதாவது சிங்கப்பூரிலிருந்து முதலாளிகள் இந்தியாவிற்கு வரும் செயல் நாம் கேள்விப்படும் ஒன்றுதான்.
இப்படி அவர்கள் வரும்பொழுது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி மேளதாளத்துடன் வரவேற்பதை பற்றி நாம் பல செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால் சிங்கப்பூரில் பணியாற்று வரும் அறந்தாங்கியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கல்யாண பத்திரிகை முதல், மேடை பின்னலங்காரம் வரை அனைத்திலும் தனது முதலாளியின் பெயரை எழுதி அவரை தடல்புடலாக வரவேற்று, ஐந்து நாள் உபசரிப்பு அளித்து அசத்தியிருக்கிறார்.
மதியழகன் என்பவர் சிங்கப்பூரில் WTK Builder Pte Ltd எனும் நிறுவனத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சைட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார்.B.E சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் பணிபுரியும் இவரது திருமணம் ஜூன் 5-ம் தேதி பாக்கியஸ்ரீ என்பவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது.


இதனை ஒட்டி தனது கம்பெனியின் முதலாளி மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் இருவரையும் தனது திருமணத்திற்கு வரவேற்றுள்ளார். இவர்களை வரவேற்றதோடு மட்டுமல்லாமல் இவர்களின் பெயரையும் திருமண பத்திரிக்கையில் குறிப்பிட்டு அசத்தியிருக்கின்றார்.

பொதுவாக மேடைக்கு பின்னால் இருக்கும் அலங்காரத்தில் மணமக்களின் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். ஆனால் மதியழகன் அதற்கும் ஒரு படி மேலே போய் தனது முதலாளிகளின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு மரியாதை செய்து இருக்கிறார். இவரது திருமணம் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள பிடாரி காடு என்ற கிராமத்தில் நடைபெற்ற நிலையில் இவர் அழைத்த வண்ணமே இருவரும் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தனர்.

தனது முதலாளிகளை அவர் சந்தன மாலை அணிவித்து, குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து, பட்டாசு கொளுத்தி வரவேற்ற விதம் காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.


அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகும் தனது முதலாளிகளுக்கு நான்கு நாட்கள் விருந்தளித்து அவர்களை தென் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களான தஞ்சாவூர் பெரிய கோயில், கொடைக்கானல், திருச்சியின் கல்லணை ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவும் அழைத்துச் சென்றுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து தனது தொழிலாளியின் திருமணத்திற்கு முதலாளி வந்ததோடு அல்லாமல், ஐந்து நாட்கள் நம் தமிழகத்தில் தங்கி இருந்தது இதுவே முதல் முறையாகும்.
இவர்களை வரவேற்றதில் மதியழகனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்வதில் “தமிழ் சாகா சிங்கப்பூர்” மகிழ்ச்சி அடைகின்றது.