சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகிய தலைவர்கள் பிந்தான் (Bintan) தீவில் இன்று (ஜன.25) சந்தித்து பேசியுள்ளனர். இதில் பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறியப்பட்டிருக்கிறது.
அதில் ஆகாயவெளி நிர்வாகம், தற்காப்பு ஒத்துழைப்பு, குற்றவாளிகள் ஒப்படைப்பு (airspace management, extradition, defence cooperation) போன்ற ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்புகளும் இன்று கையெழுத்தானது.
சிங்கப்பூர் – இந்தோனேசியா இடையேயான “நீண்டகால” இருதரப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் “சமநிலை” ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லூங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
5வது சிங்கப்பூர்-இந்தோனேசியா லீடர்ஸ் ரிட்ரீட்டில் (Leader’s Retreat) இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய திரு லீ, “இந்த மூன்று விஷயங்களும் இரு தரப்புக்கும் முக்கியமானவை” என்று குறிப்பிட்டார்.
அக்டோபர் 2019 இல் முந்தைய தலைவர்களின் சந்திப்பின் போது, திரு விடோடோவும் தானும் “இந்த நீண்டகால இருதரப்பு பிரச்சினைகளை தீர்க்கமாக தீர்க்க வேண்டிய நேரம் இது” என்று முடிவு செய்ததாக லீ செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறினார்.
“இரு தரப்பின் தேவைகள் மற்றும் நலன்களை நிவர்த்தி செய்யும் ஒரு கட்டமைப்பை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்” என்று திரு லீ கூறினார், இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பண்ட்ஜைதன் மற்றும் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீன் ஆகியோர் அங்கு உடனிருந்தனர்.
“இந்த ஒப்பந்தங்களின் முடிவு சிங்கப்பூர்-இந்தோனேசியா உறவுகளின் வலிமை மற்றும் முதிர்ச்சியை நிரூபிக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் இருதரப்பு உறவுகளை நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு ‘திடமான அடித்தளத்தை’ உருவாக்குகின்றன” என்றும் பிரதமர் லீ கூறினார்.
மேலும், வான்வெளி மேலாண்மை ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் ஜகார்த்தா Flight Information Region (FIR) மற்றும் சிங்கப்பூர் Flight Information Region-க்கும் இடையிலான எல்லையை மறுசீரமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
“FIR ஒப்பந்தம் இரு நாடுகளின் சிவில் விமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேலும் ICAO (சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு) விதிகளுக்கு இணங்க விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிலைநிறுத்தும்” என்று பிரதமர் லீ கூறியுள்ளார்.
1946 ஆம் ஆண்டு முதல் ICAO ஆல் உத்தரவிட்டப்படி, சிங்கப்பூரால் நிர்வகிக்கப்படும் Riau தீவுகளுக்கு மேலே உள்ள FIR இன் கட்டுப்பாட்டை இந்தோனேசியா எடுத்துக் கொள்ள நீண்ட காலமாக விரும்பியது.
FIR இறையாண்மையின் பிரச்சினை அல்ல, மாறாக வணிக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றியது என்று சிங்கப்பூர் மீண்டும் மீண்டும் இதற்கு பதில் அளித்து வந்தது. தற்போது இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 76 ஆண்டுகாலமாக நிலவும் இந்த பிரச்னைக்கு இப்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய பிரதமர் லீ, இரு நாடுகளின் தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை தானும் திரு விடோடோவும் மதிப்பாய்வு செய்ததாக கூறினார். நிதி ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவதற்கு நிறுவன இணைப்புகளை வலுப்படுத்துவதை சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை, நிலைத்தன்மை, பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் மனித மூலதன மேம்பாடு போன்ற ஒத்துழைப்பின் புதிய பகுதிகளையும் ஆராய்ந்து வருகின்றன என்றும் கூறினார்.
“2014 முதல் சிங்கப்பூர் தொடர்ந்து இந்தோனேசியாவின் சிறந்த வெளிநாட்டு முதலீட்டாளராக உள்ளது, மேலும் நோய்த் தொற்று இருந்தபோதிலும் எங்கள் முதலீடுகள் வளர்ந்துள்ளன” என்று திரு லீ கூறினார்.
கூடுதலாக, சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் இந்தோனேசியாவின் கல்வி, கலாச்சாரம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை கல்வி ஒத்துழைப்பு மற்றும் நாடுகளின் கல்வி சகோதரத்துவம் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆழப்படுத்த Human Capital Partnership Arrangement-ல் (HCPA) கையெழுத்திட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய மாணவர்கள் வெளிநாட்டுப் பரிமாற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகளை HCPA விரிவுபடுத்தும், இதனால் மாணவர்கள் இரு நாடுகளை நாடுகளைப் பற்றி மேலும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும் என்றும், ஒற்றுமையுடன் இணைந்து சிறப்பாக ஈடுபட அவர்களைத் தயார்படுத்தவும் முடியும் என்று MOE தெரிவித்துள்ளது.
எப்படியோ, நீண்ட காலமாக இருந்து வந்த சிங்கப்பூர் – இந்தோனேசியா பிணக்கத்துக்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நமது பிரதமர் லீ.