TamilSaaga

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் “சூப்பர்” அறிவிப்பு.. வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூர் வர “சர்பிரைஸ்” நடவடிக்கை

பெருந்தொற்று காரணமாக முடங்கியிருந்த உலகம் இப்போது கொஞ்சம் தெளிவடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்றின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் இருந்தது. இது அரசாங்கத்தையும், மக்களையும் உண்மையிலேயே அச்சமடைய வைத்தது.

இந்நிலையில், தற்போது மெல்ல மெல்ல எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், Vaccinated Travel Lane எனப்படும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கான பயணத்தடம் என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், 8 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பயணிகள், தனிமைப்படுத்திக் கொள்ள தேவை இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இத்திட்டத்தின் மூலம், வரும் அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வர முடியும். இதில், பிரிட்டனைச் சேர்ந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் இரவு 11.59 மணி நிலவரப்படி, பிரிட்டனைச் சேர்ந்த 976 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், விமானங்களை தேவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் A380 ரக விமானங்களை மீண்டும் பயன்படுத்தவுள்ளது.

சிங்கப்பூருக்கும் லண்டனுக்கு இடையே இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன. Vaccinated Travel Lane திட்டத்தின் மூலம் வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பொது மேலாளர் முகமது ரஃபி மார் கூறுகையில், “சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏ380 ரக விமானங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு திரும்புவது சர்வதேச பயணங்களை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுச் செல்லும் ஒரு முன்னேற்றப் படியாகும்.

விமானத்தை மீண்டும் இங்கிலாந்துக்கு கொண்டு வருவதன் மூலம், லண்டன் மற்றும் சிங்கப்பூர் இடையே எங்கள் பயணிகளுக்கு சிறந்த பயண வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அப்படியே விரைவில் இந்தியாவுக்கான கதவுகளை திறந்து விட வேண்டும் என்பதே சிங்கப்பூரை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் ஒரே வேண்டுகோளாகும்.

Related posts