TamilSaaga

8 நாடுகளில் இருந்து.. அக்.19 முதல் சிங்கப்பூர் வரும் 2,409 வெளிநாட்டு பயணிகள் – காத்திருக்கும் இந்தியர்கள்

Vaccinated Travel Lane எனப்படும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கான பயணத்தடம் என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், எட்டு நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பயணிகள், தனிமைப்படுத்திக் கொள்ள தேவை இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.12) முதல் செயல்பாட்டில் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,409 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களில் 724 பேருக்கு குறுகிய காலத்திற்கும், 1,685 பேருக்கு நீண்டகால அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், பிரிட்டனைச் சேர்ந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் இரவு 11.59 மணி நிலவரப்படி, பிரிட்டனைச் சேர்ந்த 976 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.facebook.com/SingaporeCAAS/posts/243986407757437

அதேபோல், பிரான்ஸைச் சேர்ந்த 537 பேரின் விண்ணப்பங்களும், அமெரிக்காவைச் சேர்ந்த 440 பேரின் விண்ணப்பங்களும், நெதர்லாந்தைச் சேர்ந்த 155 பேரின் விண்ணப்பங்களும், இத்தாலியைச் சேர்ந்த 136 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இத்திட்டத்தின் மூலம் வரும் அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் வரலாம்.

அதேபோல், தென் கொரியாவுடனான தனிமைப்படுத்தல் இல்லாத பயண ஏற்பாடு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கும்.

இதுகுறித்து CAAS தரப்பில், “சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள், குறுகிய கால பயணிகள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் உட்பட சராசரியாக தினமும் 3,000 VTL பயணிகள் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு அதிக அளவிலான பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூரில் பணியாற்றிய மணிகண்டன் கூறுகையில், “மீண்டும் எங்களை சிங்கப்பூருக்கு அழைக்க வேண்டும். இதற்கு மேலும் சமாளிப்பது என்பது இயலாது காரியம். சிங்கப்பூர் அரசாங்கம் தாயுள்ளம் கொண்டு எங்களை அரவணைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts