சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று பலரது மனங்களையும் உலுக்கியது. தனது மகளுடன் மீண்டும் இணைவதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 82 வயதான சிங்கப்பூர் பெண்மணியை அவரது மகள் பார்த்துக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் சிங்கப்பூர் வந்து வாழ வழியின்றி சிரமப்பட்டு வரும் செய்தியை ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்டிருந்தது.
நமது தமிழ் சாகா தளத்திலும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், அதே சிங்கப்பூரில் ஒரு மகன் தனது தாயின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் பிரபல நடிகர் பெஞ்சமின் டானின் தாயார் நேற்று (ஏப்ரல்.16) காலமானார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் உருக்கமுடன் பதிவிட்ட பெஞ்சமின், “இந்த வாழ்க்கையில் நான் உங்களை பெருமைப்படுத்தினேன் என்று நம்புகிறேன். எங்கள் அடுத்த வாழ்க்கையில் நான் மீண்டும் உங்கள் மகனாக இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள், மம்மி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பெஞ்சமினின் தாயார் ஜூலை 4, 2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கோமா நிலையில் இருந்தார். முற்றிலும் சுயநினைவின்றி இருந்தார்.
அவரது மூளைத் தண்டில் ரத்தம் உறைந்து இருப்பதை மருத்துவர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.