சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் Budget விமான சேவை நிறுவனமான Scoot ஆகியவை இணைந்து 27 நாடுகளில் உள்ள 66 நகரங்களை இணைக்க, வரும் வாரங்களில் அதன் தடுப்பூசி பயணப் பாதை (VTL) நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இன்று மார்ச் 16, 2022 முதல் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஏதென்ஸில் புதிய VTL சேவைகள் படிப்படியாக சேர்க்கப்படும் என்று விமான நிறுவனங்களின் தாய் நிறுவனமான SIA குழு நேற்று செவ்வாயன்று (மார்ச் 15) தெரிவித்தது.
மேலும் VTL அல்லாத விமானங்கள் சில, குறிப்பிட்ட இடங்களுக்கு VTL விமானங்களாக மாற்றப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே மார்ச் 4ம் தேதி அறிவிக்கப்பட்டபடி இந்தியாவிற்கான VTL சேவை என்பது சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் என்று CAAS தெரிவித்துள்ளது. “VTLன் கீழ் இந்த புதிய மையங்களில் இருந்து விமானங்களை செயல்படத் திட்டமிடும் விமான நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை CAASக்கு சமர்ப்பிக்கலாம் என்றும் முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக தொற்று விகிதம் இருந்தபோது VTL டிக்கெட் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்த அளவில் இருந்து 50 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது. அதன் பிறகு “பிப்ரவரி 16, 2022 அன்று, சிங்கப்பூர் VTLன் 50 சதவீத வரம்பை நீக்குவதாக அறிவித்தது, மேலும் தினசரி வருகைக்கான VTL ஒதுக்கீட்டை 5,000 முதல் 15,000 வரை, மார்ச் 4, 2022க்குள் படிப்படியாக அதிகரிக்கும்” என்று SIA குழுமம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசியா நாடுகளில் தனது VTL திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் அதிக அளவிலான மக்கள் இனி சிங்கப்பூருக்குள் தடையின்றி நுழைய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.