சிங்கப்பூரில் வேலைக்குப் போகும் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் போது பெரும்பாலும் தங்கள் வேலையை விட்டுவிடுகிறார்கள், அல்லது சிறப்பாக பணி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள் என்ற தனது அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது சிங்கப்பூரின் பெண்கள் அமைப்பான Aware. அது பற்றிய விவரம்.
பணி செய்யும் இடங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல் என்பது உலகம் முழுவதுமே, எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பெரும் பிரச்சனை என்று சொன்னால் அது மிகையல்ல. அதேசமயம் ஆசியாவிலேயே குற்றங்கள் மிகக்குறைவான நாடு என்று சொல்லப்படுகிற சிங்கப்பூரிலும் இந்த இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது உண்மையிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறது Aware அமைப்பின், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட , ‘ I QUIT ‘ என்னும் ஆய்வறிக்கையின் முடிவுகள்.
கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட ,பல்வேறு எதிர்விளைவுகளை சந்தித்த முப்பத்தி ஒன்பது பெண்களிடம்
( 28 முதல் 58 வயது உடையவர்கள் ) நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், சிங்கப்பூர் பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைகின்றன. அந்த ஆய்வு முடிவின் சில கூறுகள் –
அலுவலகங்களில், வேலை சார்ந்த வெளியூர் பயணங்களில், பணி நிமித்தமாக ஒன்றாக உணவு அருந்தவும் மதுபானங்கள் அருந்தவும் செல்லும் பொழுது, மற்றும் இணைய வழி தொடர்புகள் வழியாக பெரும்பாலும் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றன.
வேலை செய்யும் இடங்களில் பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் ஏறக்குறைய எல்லாருமே அவர்களின் உயர் அதிகாரிகளாகவே இருக்கிறார்கள்.
இவர்களில் 22 பேர் ஏறக்குறைய நிர்வாக ரீதியிலான எந்த குற்றச்சாட்டையும் தங்களை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக இதுவரை பதிவு செய்ததில்லை.
அப்படியே வாய் மொழியான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பொழுதும் 17 பேர் அந்த குற்றச்சாட்டை முன்னிட்டு சம்பளம், போனஸ் போன்றவைகளை தள்ளி வைப்பது, வேலையை விட்டு போகும்படி கட்டாயப்படுத்தபடுவது போன்ற எதிர்மறை விளைவுகளையே சந்தித்து இருக்கிறார்கள்.
பணியிடங்களில் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக – எல்லா நாளும் வேலைக்கு தாமதமாக வந்து விரைவிலேயே கிளம்புவது, இருக்கிற எல்லா விடுமுறைகளையும் எடுத்து விடுவது, அந்த குறிப்பிட்டவர்களின் கண்களில் படாமல் ஓடி ஒளிவது போன்ற வழிமுறைகளை கையாளுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி செய்யும் பொழுது பணி செய்யும் இடத்தில் அந்தப் பெண்களின் வேலையின் தரம் குறைவதோடு, அவர்களால் அந்த வேலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடையவும் இயல்வதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் அவர்களின் உயர் அதிகாரிகள் என்பதால், அவர்களுக்கு எதிராக இந்தப் பெண்கள் செயல்படும் பொழுதெல்லாம், அவர்கள் பாதிக்கப்படுவதற்கு பதிலாக இந்த பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை செய்யும் பெண் அந்தத் துறையிலிருந்தே வெளியேற்றப்படுவது, அதே துறையில் மீண்டும் பணி செய்ய முடியாத அளவிற்கு உயர் அதிகாரிகளால், அந்த துறைக்குள் தவறான செய்திகள் பரப்பப்படுவது போன்ற பாதிப்புகளையும் சந்திக்கின்றனர். இதனால் அதிக படிப்பும், அனுபவமும் இருந்தும் கூட இந்தப் பெண்களில் பலர் தங்கள் படிப்புக்கும் அனுபவத்திற்கும் பொருந்தாத சாதாரண வேலைகள், பகுதி நேர வேலைகளை செய்கின்ற சூழலுக்கு தள்ளப்படுவதும் தெரியவந்துள்ளது.
Aware அமைப்பின் இந்த ஆய்வு முடிவுகள் குறித்து அதேநாளில், மனிதவள அமைச்சகம் ( MOM ) நியாயமான மற்றும் முற்போக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்பு கூட்டணி (Tafep)இரு அமைப்புகளும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில், பணி செய்யும் இடங்களில் எந்தவிதமான துன்புறுத்தல்களையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றும், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான இதுபோன்ற துன்புறுத்தல்கள் சட்ட ரீதியான தண்டனைகள் வழியாக எதிர்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களுக்கான சட்ட ரீதியான உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக இந்த அமைப்புகள் மூலம் பெண்களுக்காக தனியான ஒரு தொடர்பு எண் வழங்கப்பட்டு இருப்பதும், ( 6838 – 0969 ) இரு அமைப்புகளும் சேர்ந்து இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.