சிங்கப்பூரில் புங்கோல் சென்ட்ரலில் உள்ள பிளாக் 623 C-யின் மத்திய குப்பைக் காம்பாக்டர் அறையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 54 வயதான நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் அந்த பகுதியில் இருந்து உதவிக்கான அழைப்பைப் பெற்றதாகக் கூறியது. அழைப்பை ஏற்று உடனடியா SCDF குழு அங்கு விரைந்தது.
அவர்கள் அங்கு வந்தபோது ஒரு நபர் அசைவற்ற நிலையில் காணப்பட்டார், அதனையடுத்து ஒரு துணை மருத்துவரால் சோதிக்கப்பட்டு அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக காவல்துறை வெளியிட்ட தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான எந்த செயலும் நடந்ததாக தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிர் ரிஸ்-புங்கோல் டவுன் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் CNA-விடம் இன்று சனிக்கிழமை காலை அளித்த தகவலின்படி, ஒருவர் மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும். சம்பந்தப்பட்ட அந்த நபர் பின்னர் நகர சபையின் உள்ளூர் தொகுதி துப்புரவாளர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். “ஏற்பட்ட காயங்களால் எங்கள் தொழிலாளி துரதிர்ஷ்டவசமாக பலியானார் என்பதை அங்கிருந்தவர்கள் அளித்த பதிலில் நாங்கள் புரிந்துகொண்டோம்,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
புங்கோல் ஷோர் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் திருமதி யியோ வான் லிங் மற்றும் நகர சபை ஊழியர்களும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தங்களது உதவி மற்றும் இரங்கலைத் தெரிவிக்க நேரில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.