சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர் அரசு மாறிவரும் பருவநிலை மாறுபாட்டு எதிரான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறது. பருவ நிலை மாறுபாட்டின் எதிர்விளைவுகளை நன்றாகவே உணர்ந்திருக்கும் அரசானது, இயற்கையைப் பாதிக்கும் நடவடிக்கைகளைக் குறைத்து வருகிறது. பருவநிலை மாறுபாடு டெங்கு பாதிப்பையும் அங்கு அதிகப்படுத்தி வருகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்துவது என்பது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானதல்ல. விஞ்ஞானிகள் இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.
ஏனெனில், இப்போது சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் 3,000 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவிகிதம் அதிகம்.
டெங்கு எப்படி பரவுகிறது?
டெங்கு பரவுவதற்கான அடிப்படையான காரணம் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள்தான். டெங்கு பாதித்த ஒருவரைக் கடிக்கும் கொசுக்கள் மற்றவரைக் கடிக்கும்போது, அதன் வழியாக டெங்கு பரவல் அதிகமாக நிகழ்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5.9 மில்லியன் மக்கள் தொகை கொண்டிருக்கும் தெற்காசிய நாடான சிங்கப்பூரில் ஆண்டுதோறும் டெங்குவால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2013-ல் அதிகபட்சமாக 26,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் வரையிலான தரவுகளின்படி மட்டுமே சிங்கப்பூரில் 22,000 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 5-ம் தேதி வரையிலான அந்த வாரத்தில் மட்டுமே 264 பேருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய வாரத்தை விட 64 பேர் அதிகமாகும். டெங்கு சிங்கப்பூரின் மிகப்பெரிய பிரச்னையாக மாறியது.
‘Project Wolbachia Singapore’ திட்டம்
டெங்குவை அதிகம் பரப்புவது ஏடிஎஸ் வகை பெண் கொசுக்களே. இவற்றை ஒழிக்காமல் டெங்குவை ஒழிப்பது கடினம்தான். இதனால், சிங்கப்பூர் அரசு கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்கியது. கொசுவை கொசுவால் ஒழிப்பது என்பதுதான் அந்த ஐடியா. லட்சக்கணக்கில் கொசுக்களை உற்பத்தி செய்து சிங்கப்பூர் அரசே வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டது. என்னடா இது, கொசுவை வைச்சு கொசுவை எப்படி ஒழிக்க முடியும்.. இது என்ன புது கதையா இருக்கேனு நீங்க நினைக்கலாம். ஆனால், முடியும்னு நிரூபிச்சிருக்காங்க சிங்கப்பூர் அரசும், விஞ்ஞானிகளும். அது எப்படினு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்க ‘Project Wolbachia Singapore’ என்கிற திட்டத்தைக் கடந்த 2016-ல் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியது. இது வேற ஒண்ணும் இல்லீங்க. வழக்கமான ஏடிஎஸ் ஆண் கொசுக்களோட உடம்பில் ‘Wolbachia’ என்கிற பாக்டீரியாவை வளர வைச்சு, அந்த ஆண் கொசுக்களை லட்சக்கணக்கில் வெளியிடுறதுதான் இந்தத் திட்டம். இதனால எப்படி கொசுக்களோட எண்ணிக்கை குறையும்னு கேக்குறீங்களா… மலேரியாவைப் போலவே டெங்குவும் கொசுக்களால்தான் அதிகமாகப் பரவுது. டெங்கு பாதிப்பு கடுமையாவதால் உலக அளவில் ஆண்டுக்கு 22,000 பேர் இறக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவர்கள் கொசுக்கடியால் டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய தகவல். இதனால்தான் கொசுக்களை ஒழிக்க உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
‘Wolbachia’ பாக்டீரியா கொசுக்களை எப்படிக் கொல்லும்?
சிங்கப்பூர் அரசு வெளியேற்றும் ‘Wolbachia’ பாக்டீரியாக்களைத் தாங்கிய ஆண் ஏடிஎஸ் கொசுக்கள், அடிப்படையிலேயே இனப்பெருக்கத் திறனை இழந்திருப்பவை. பெண் ஏடிஎஸ் கொசுக்களோடு இவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. பெண் ஏடிஎஸ் கொசுக்களோடு இணைந்து முட்டைகள் உருவானாலும் அவை பொறித்து புதிய கொசுவாக மாற்றமடையாது. அதாவது, பெண் ஏடிஎஸ் கொசுக்களை காதலித்து ஏமாற்றுபவை இந்த புதியவகை ஏடிஎஸ் ஆண் கொசுக்கள். இந்த கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கவோ, அவற்றால் பாதிப்பு எதுவுமோ இருக்காது என்கிறது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூரின் ‘National Environment Agency’ தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக இந்த வகை ஆண் ஏடிஎஸ் கொசுக்கள், ஏடிஎஸ் வகை பெண் கொசுக்களோடு மட்டுமே இணையும். இதனால், மற்ற வகை கொசுக்களோடு இணைந்து புதிய வகை கொசுக்கள் உருவாகிவிடுமோ என்கிற அச்சம் வேண்டாம் என்கிறார்கள் சிங்கப்பூர் விஞ்ஞானிகள்.
எந்தெந்த ஏரியாக்களில் ஆய்வு நடக்கிறது?
‘National Environment Agency’ சிங்கப்பூரின் ‘Yishun’ மற்றும் ’Tampines’ நகர்ப்புறங்களில் கடந்த 2016-ம் ஆண்டு முதலே இதுகுறித்து தொடர் ஆய்வுகளை நடத்தி வருகிறது. ஏடிஎஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் முன்னர் டெங்கு பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டது. இந்தக் காரணத்தாலேயே இந்தப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தப் பகுதிகளில் தொடங்கி மெதுவாக மற்ற பகுதிகளிலும் ஆண் ஏடிஎஸ் கொசுக்கள் திறந்துவிடப்பட இருக்கின்றன. கடந்த 2020 மே மாதத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்ட Choa ’Chu Kang’ மற்றும் ’Bukit Batok’ பகுதிகளில் ஆய்வுகளுக்குப் பின்னர் இந்த நல்ல கொசுக்கள் திறந்துவிடப்பட்டன. 2021 டிசம்பர் கணக்கின்படி இந்தப் பகுதிகளில் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்து டெங்கு பாதிப்பும் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
கொசுவுக்கு விபூதி அடிக்கும் சிங்கப்பூர் அரசின் இந்த நடவடிக்கை கைமேல் பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.