விமான எஞ்சின் உற்பத்தி செய்யும் நிறுவனமான பிராட் & விட்னி (Pratt & Whitney) இந்த ஆண்டு 250 முழுநேர ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது.
ஊழியர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வருவோம் என்று பிராட் & விட்னியின் ஆசிய-பசிபிக் aftermarket operations துணைத் தலைவர் டிம் கார்மியர் கூறியிருக்கிறார்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தாக்குதலுக்கு முன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் சிங்கப்பூரில் சுமார் 2,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது.
ஆகஸ்ட் 2020 இல், தொற்றுநோயின் தாக்கத்தை காரணம் காட்டி 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், சமீபத்தில் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம்’ பேசிய கோர்மியர், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் production associates போன்ற பல்வேறு பணிகளை பெறுவார்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பணியாளர்கள் ஆர்வமிருந்தால் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் விமானங்களை உருவாக்குகின்றன மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள விமானங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO) சேவைகளை வழங்குகின்றன.
GE ஏவியேஷன் மற்றும் ST இன்ஜினியரிங் உள்ளிட்ட பல விண்வெளி நிறுவனங்கள் சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்துத் துறையின் மீட்சி குறித்த நம்பிக்கை அதிகரித்து வருவதால், புதிய பணியாளர்களை பணியமர்த்துவதை முடுக்கிவிட்டுள்ளன.
ஜெட் இன்ஜின் தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 280 தொழிலாளர்களை இங்கு வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்த மாதம் தெரிவித்துள்ளது.
“கொரோனா காரணமாக சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும், ஆனால், பொதுவாக, நாம் செல்லும் பாதை நேர்மறையானது தான் என்று நான் நினைக்கிறேன்” என கோர்மியர் கூறினார்.