சிங்கப்பூரில் லேசான Dementia என்ற நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட 82 வயது மூதாட்டியைப் பராமரிக்க பணியமர்த்தப்பட்ட பணிப்பெண், ATM கார்டைப் பயன்படுத்தி சுமார் $20,000க்கு மேல் பணம் எடுத்துள்ளார். சுமார் 23 முறை அந்தப் மூதாட்டியின் டெபிட் கார்டினை பயன்படுத்தி அந்தபணிப்பெண் பணத்தை எடுத்துள்ளார். மேலும் எடுத்த அந்த பணத்தில் ஒரு பங்கை பிலிப்பைன்ஸில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பி நகைகளுக்காகச் செலவு செய்துள்ளார்.
நேற்று செவ்வாயன்று (ஜனவரி 4), 42 வயதான Wimie Pascual Gubaton, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது தனது முதலாளிக்கு எதிரான ஒரு திருட்டு குற்றச்சாட்டில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் 12 மாத சிறைத்தண்டனை அந்த பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்டது. அவரது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது வயதான தாயார் மேடம் கோ கெக் கியோவ் ஆகியோருடன் வசிக்கும் சிங்கப்பூரர் திருமதி யே பெய் ஹூங் (49) என்பவரால் அந்த பணிப்பெண் பணியமர்த்தப்பட்டார் என்று நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த பணிப்பெண் குபாட்டனின் முக்கிய கடமைகளில் ஒன்றாக அந்த மூதாட்டி கோவைப் பராமரிப்பதும் அடங்கும், மேலும் அவர்கள் ஒரு படுக்கையறையைப் பகிர்ந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. அந்த பணிப்பெண்ணை அந்த குடும்பத்தினர் மிகநேர்த்தியாக கவனித்துக்கொண்டனர் என்று மாநில வழக்கு விசாரணை அதிகாரி Ting Nge Kong கூறினார். பிலிப்பைன்ஸில் உள்ள தனது குடும்பத்தினர் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டதால், பணம் கேட்டு மே 2021ல் தன்னைத் தொடர்பு கொண்டதாக பணிப்பெண் கூறினார்.
ஆகையால் அந்த மூதாட்டி கோவின் ATM கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க அவர் முடிவு செய்து, அவரது அறையில் இருந்து அந்த கார்டை எடுத்துள்ளார். ஏற்கனவே பலமுறை அவர் அந்த கார்டுகளை இயக்கியதை பார்த்தநிலையில் அந்த பணிப்பெண்ணுக்கு அந்த கார்டின் PIN நம்பர் நன்றாக தெரியும் என்றார் வழக்கறிஞர். கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை 23 முறை, மேடம் கோவுக்குத் தெரியாமல் $500 முதல் $1,900 வரையிலான பணத்தை அவர் எடுத்துள்ளார்.